For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர் டெக்கான் பங்குகளை மீண்டும் வாங்க கோபிநாத் மும்முரம்!!

By Staff
Google Oneindia Tamil News

Air Deccan
பெங்களூர்: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் கிங் பிஷ்ஷர் செய்துகொண்ட ஒப்பந்தம் பிடிக்காததால், தன்னுடைய ஏர் டெக்கான் நிறுவனத்தைத் திரும்பத் தந்துவிடுமாறு போர்க்கொடி உயர்த்தியுள்ளார் கிங் பிஷ்ஷர் நிறுவன 'துணைத் தலைவர்' கேப்டன் கோபிநாத்.

ரயில் பயணத்துக்கு இணையான மலிவு விலையில் விமான சேவையைத் தரவேண்டும் என்ற நோக்கில் கோவையைச் சேர்ந்த கோபிநாத் ஆரம்பித்த நிறுவனம் ஏர் டெக்கான். டெக்கான் ஏவியேஷன் எனும் பெயரில் ஹெலிகாப்டர் பயண சேவையும் அளித்து வந்தது இவரது நிறுவனம்.

ஏர் டெக்கானின் வருகை பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. சென்னை-பெங்களூருக்கு குறிப்பிட்ட தேதிக்குள் முன்பதிவு செய்தால் ரூ.900 ரூபாயில் பயணிக்கும் நிலை உருவானது. இதைத் தவிர ரூ.1 மட்டுமே கொடுத்து டிக்கெட் பெறும் வசதியையும் அறிமுகப்படுத்தியது (குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் மட்டும்!)

ஏர் டெக்கான் மீது பல குறைபாடுகளைச் சொன்னாலும், ஒரு கட்டத்தில் மற்ற விமான நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி, எக்கச்சக்க பிளைட்டுகள், ஏராளமான பயணிகள் என முன்னணியில் நின்றது அந்நிறுவனம்.

இந்நிலையில் விஜய் மல்லையாவின் கிங் பிஷ்ஷருடன் பல இழுபறிகளுக்கிடையே இணைந்தது ஏர் டெக்கான். பல கோடி ரூபாய் கை மாறிய இந்த டீலில், கோபிநாத்துக்கு கிங் பிஷ்ஷர் துணைத் தலைவர் பதவியைக் கொடுத்தார் மல்லையா.

இப்போது ஏர் டெக்கானின் 65 சதவிகித பங்குகள் மல்லையாவின் வசமுள்ளன.

அதிருப்தி!:

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் புதிய கூட்டணி ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார் மல்லையா. இக்கூட்டணி மூலம் இரு நிறுவனங்களுக்கும் ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும், இரு நிறுவன பங்குதாரர்களுக்கும் கூடுதல் லாபத் தொகை தரப்படும் எனறும் அறிவித்திருந்தார்.

இந்த ஒப்பந்தத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார் கோபிநாத். மலிவு கட்டணத்தில் நிறைவான சேவை என்பதுதான் ஏர் டெக்கான் தொடங்கப்பட்டதன் நோக்கம். இந்த நோக்கம் சிதையாது என மல்லையா உறுதி அளித்ததால்தான் இணைப்புக்கு ஒப்புக் கொண்டேன். ஆனால் இப்போது எங்கள் அடிப்படை நோக்கமே சிதைந்து விட்டது.

மலிவு விலைப் பயணம் என்பது இனி கிங்பிஷ்ஷரில் வாய்ப்பே இல்லை என்றாகிவிட்டது. எனவே ஏர் டெக்கானை திரும்பவும் என்னிடமே ஒப்படைக்க வேண்டும், என மல்லையாவிடம் கோரிக்கை வைத்துள்ளார் கோபிநாத்.

ஒருவேளை இதற்கு மல்லையா ஒப்புக் கொண்டால் ஏர் டெக்கான் பங்குகளை திரும்ப வாங்குவதற்குத் தேவையான பணத்தைத் திரட்ட சில வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடியுள்ளாராம் கோபிநாத்.

சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் பாதுகாப்பற்ற நிலையில் தவிப்பதால் இந்த முயற்சி கோபிநாத்துக்குப் பலன் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் ஏர்டெக்கான்- கிங் பிஷ்ஷர் இரண்டு நிறுவனங்களின் கூட்டு பலம்தான் ஜெட் ஏர்வேஸை இந்த கூட்டணிக்கே வரவழைத்துள்ளது. இந்நிலையில் ஏர் டெக்கான் பங்குகளை அவர் திரும்பத் தருவாரா என்பதும் சந்தேகமே என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X