For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஏழைகளுக்கு உதவுங்கள்'-அதிமுகவினருக்கு ஜெ!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் 37வது ஆண்டு தொடக்க விழாவை ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டாடும்படி கட்சியினருக்கு பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக என்ற மக்கள் இயக்கத்தின் வரலாற்றில், 36 ஆண்டுகள் நிறைவு பெற்று, 17ம் தேதி அன்று 37ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். அதனை எண்ணி நம் உள்ளமெல்லாம் உவகை. மகிழ்ச்சி.

உங்கள் பயன் கருதாத உழைப்பு, தொண்டு ஆகியவை என்றென்றும் பாராட்டத்தக்கவை. அதே போல், இந்த இயக்கம் வலிமை பெற, பொலிவு பெற பல்வேறு தியாகங்களைச் செய்த, உயிர்நீத்த கழக அடலேறுகளின் தியாகத்தை நினைத்துப் போற்றுவோம் பாராட்டுவோம்.

ஆட்சியில் அமர்த்தப்பட்டபோதும், எதிர்க்கட்சியாக இருக்கின்றபோதும், உங்கள் அன்புச் சகோதரியாகிய என் மீது நீங்கள் காட்டும் அன்பு, பற்று, பாசம், உங்கள் கொள்கைப் பிடிப்பு, மலையே குலைந்தாலும் நிலை குலையாது, உங்கள் சகோதரி காட்டும் வழியில் நின்று பணியாற்றும் தன்மை, தடம் புரளாத உறுதி மறக்கக் கூடியவைகளா? பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்கவை அல்லவா!

நான் இடும் பணிகளை சற்றும் தொய்வின்றி, கண் துஞ்சாது, பசி நோக்காது, குறைவின்றி நிறைவாக செயலாற்றி வரும் உங்களின் பேராற்றல் மிக்க உழைப்பிற்கு, இந்த 37வது ஆண்டின் துவக்க நாளில் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துகளையும், பாராட்டுக்ளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் அடுத்த தலைமுறையினர் தலை நிமிர்ந்து மகிழ்வுடன், கவலையின்றி வாழ, மிடுக்குடன் நடக்க, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகள் அமைத்திட வேண்டும் என்ற எனது வேண்டு கோளை ஏற்று, கழக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளாகிய நீங்கள், அப்பணியைத் திறம்பட செய்து முடித்தீர்கள்.

இன்று தீமையை, தீயவர்களை எதிர்க்கத் திறம்மிகுந்த பாசறையினர் திரண்டு விட்டனர். இன்று இந்தியத் திரு நாட்டில் அச்சமும், வேதனையும், அழுகுரலும், குண்டு வெடிப்புகளும், கோரக் காட்சிகளும் பெருகிவிட்டன.

மக்களிடையே அன்பு நிலவாமல் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்திடும் பயங்கரவாத சக்திகளின் தீயச் செயல்கள் அதிகமாகிவிட்டன.

நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் உள்ளது. சட்டம், ஒழுங்கைக் காத்திட முனைப்பு இல்லை. பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினை சக்திகள், பொருளாதார பயங்கரவாதம் ஆகியவை மலிந்துவிட்டன.

மக்களோ உளம் நலிந்து காணப்படுகின்றனர். செயல் திறனற்ற அரசாக, இந்திய இறையாண்மையை இழந்திடும் போக்கில் செயல்படும் கொள்கையற்ற, சந்தர்ப்பவாதிகளின் கூட்டணி அரசு மத்தியில் உள்ளது.

இந்த மத்திய கூட்டணி அரசை மாற்றிட வேண்டும் என்ற மக்களின் கருத்து மேலோங்கி வருகின்றது.

தமிழ்நாட்டில் மின்வெட்டால் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் அல்லல்பட்டு, ஆற்றாது அழுகின்றனர்.

உங்களுடைய கடின உழைப்பால், கடமை உணர்வால், தியாக உள்ளத்தால் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முனைவேன். உங்களின் உள்ளத்தை, உழைப்பின் ஆற்றலை, பலத்தை, விசுவரூபத்தை நான் அறிவேன். நாட்டு மக்களும் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

அதிமுக 37வது ஆண்டு துவக்க விழாவினை எழிலுற, சிறப்புற கொண்டாட முனையுங்கள். எங்கெங்கு காணினும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கட்டும். புதிய பொலிவுமிக்க கொடிக் கம்பங்கள் எழட்டும். இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சிபடுத்தட்டும். இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் நமது உதவிகள் அமையட்டும்.

அடுத்த ஆண்டு இதே நாளில், கழகத்தின் 38வது ஆண்டு துவக்க விழாவில், கழகத்தின் வெற்றிப்பதாகை 'இரட்டை இலை' செழித்து சிறக்கும். உங்கள் சகோதரியின் அன்பு ஆணையை ஏற்று, தீயோரை அகற்ற, தீமையை அழிக்க எழுவீர், விரைவீர்.

மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி அமைய, நன்மைகள் பெருகிட, நாளும் உழைக்க உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.

ஜெ. பேரவை-சின்னசாமி நீக்கம்:

இதற்கிடையே திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ செ.சின்னசாமி நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் செ.சின்னசாமி எம்எல்ஏ, திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ராமு ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் ராமு இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X