For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைப் பிரச்சினை: நவ. 1-ல் நடிகர்கள் தனி உண்ணாவிரதம்!

By Staff
Google Oneindia Tamil News

Sarathkumar
சென்னை: இலங்கைத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவின் ராணுவ உதவிகளை நிறுத்தக் கோரியும் நடிகர் நடிகைகள் சார்பில் வரும் நவம்பர் 1-ம் தேதி தனி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணிக் கலைஞர்களும் பங்கேற்கிறார்கள்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது.

புலிகளின் ஆதிக்கத்தில் உள்ள கிளிநொச்சியைப் பிடிக்க, அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அப்பகுதியிலிருந்தே வெளியேற்றி வருகிறது சிங்கள ராணுவம். ஏராளமான தமிழர்கள் இதில் பலியாகி வருகின்றனர்.

இது தவிர, இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் தாக்கி வருகிறது சிங்கள ராணுவம்.

இந்தப் போக்கைக் கண்டிக்கும் வகையிலும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவின் ராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்தக் கோரியும் தமிழ் திரையுலகம் சார்பில் ராமேஸ்வரத்தில் வரும் அக். 19ம் தேதியன்று கண்டனப் பேரணி, ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இயக்குநர் பாரதிராஜா, ராம நாராயணன், நடிகர் சரத்குமார் தலைமையில் தமிழ் இன உணர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் திரையுலகின் அனைத்துப் பிரிவு சங்கங்களும் பங்கேற்றாலும், நடிகர் சங்கம் பங்கேற்பதில் உள்ள கஷ்டம் குறித்து சரத் குமார் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

ஆனால் பின்னர் அவரை பாரதிராஜாவும் ராம நாராயணனும் சமாதானப்படுத்தினர். அவரும் ராமேஸ்வரம் வருவதாக ஒப்புக் கொண்டார்.

ஆனால் ராமேஸ்வரம் செல்ல நடிகர் நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாதுகாப்பு, தங்கும் வசதி என பல பிரச்சினைகள் இருப்பதால் சென்னையிலேயே போராட்டம் நடத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்துவதற்கு தோதான இடம், தங்கும் வசதிகளைப் பார்வையிடவும் நேற்று பாரதிராஜா சென்று வந்தார்.

இப்போது தங்களால் ராமேஸ்வரம் வர முடியாது என திட்டவட்டமாக நடிகர் சங்கம் அறிவித்துவிட்டது.

ரஜினி-கமல் பங்கேற்பு:

இதுகுறித்து நடிகர் சங்கத்தில் இன்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து திரையுலகம் நடத்தும் போராட்டத்துக்கு எங்கள் தார்மீக ஆதரவு உண்டு. ஆனால் ராமேஸ்வரம் வரை போய் பங்கேற்க முடியாது. நாங்கள் சந்திக்கவிருக்கும் நடைமுறை சிக்கல்கள்தான் இதற்குக் காரணம்.

எனவே நடிகர் சங்கம் சார்பில் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் நவம்பர் 1-ம்தேதி தனி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இது திரையுலகம் நடத்தும் போராட்டத்துக்கு எதிரானதல்ல. அவர்கள் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு உண்டு. அதே நேரம் சென்னையிலேயே நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.

இந்தப் போராட்டத்தில் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட அனைவரும் பங்கேற்பார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. காலை 8 மணிக்கு துவங்கும் இந்த உண்ணாவிரதம் மாலை 4 மணிக்கு முடியும்.

போராட்ட முடிவில் இலங்கைத் தமிழருக்கு உடனடியாக அனைத்துவித அடிப்படை உதவிகள் செய்யக் கோரியும், இலங்கை ராணுவத்துக்கு தரப்படும் இந்திய உதவிகளை நிறுத்தக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும். முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானங்களை நிறைவேற்றவும் கோரிக்கை வைக்கப்படும், என கூறப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு சரத்குமார் அளித்த பதில்களும்:

காவிரி, இலங்கை போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் நடிகர்கள் தலையிடுவது ஏன்?

நாங்களும் இந்தியர்கள்தான். இந்தியாவின் உணர்வுப்பூர்வமான குடிமக்கள். இந்தப் பிரச்சினைக்காக டாக்டர்கள், வக்கீல்களெல்லாம் போராட்டம் நடத்துகிறார்கள். அரசு மனிதச் சங்கிலி ஊர்வலம் நடத்துகிறது. அப்படித்தான் நடிகர் சங்கமும் தன் உணர்வைக் காட்டுகிறது.

இது போட்டி உண்ணாவிரதமா?

நிச்சயம் இல்லை. அவர்கள் போராட்டத்துக்கு நடிகர் சங்கம் தார்மீக ஆதரவு அளித்துள்ளது. அதில் கலந்து கொள்ள விரும்பும் நடிகர்கள் போகலாம். ஆனால் இந்த உண்ணாவிரதம் தனி.

அனைத்து நடிகர்களும் கலந்து கொள்வார்களா...?

நிச்சயம், அதிலென்ன சந்தேகம். ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள். வெளிநாட்டில் படப்பிடிப்பில் உள்ள கலைஞர்களும் பங்கேற்க வசதியாகத்தான் நவம்பர் 1-ம் தேதி வைத்துள்ளோம், என்றார் சரத்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X