For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயக்குநர் ஸ்ரீதர் மரணம்!

By Staff
Google Oneindia Tamil News

Director Sridhar
சென்னை: தமிழ் சினிமாவின் எல்லைகளை விரிவடையச் செய்த படைப்பாளிளுள் மிக முக்கியமானவராகக் கருதப்படும் இயக்குநர் ஸ்ரீதர் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 80.

சில வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் பணிகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்தார்.

கடும் உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன் அவரை அடையாறு மலர் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

மிகச் சிறந்த படைப்பாளி:

ரத்தப்பாசம் (சிவாஜி நடித்தது அல்ல... இது ஸ்ரீதர் எழுதிய நாடகம், பின்னாளில் திரைப்படமானது) என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர், பழைய கலாச்சாரத்தில் ஊறிப்போயிருந்த தமிழ் சினிமாவுக்கு அறுபதுகளில் புது ரத்தம் பாய்ச்சியவர்.

அவரது இயக்கத்தில் உருவான கல்யாணப் பரிசையும், நெஞ்சில் ஓர் ஆலயத்தையும் இன்றும் திரையுலகம் கொண்டாடுகிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள்தான் என்றாலும் அவற்றின் திரைக்கதையில் தெரியும் புத்துணர்ச்சியை வேறு படங்களில் பார்ப்பது அரிது.

ஸ்ரீதரின் படங்களில் கண்ணியமும் கதை நயமும் நிறைந்திருக்கும்.

நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் தமிழில் விலை போகுமா என்ற சந்தேகத்தோடு சிலர் பார்த்தபோது, அதன் தமிழ் வடிவம் மட்டுமல்ல, தில் ஏக் மந்திர் என்ற பெயரில் அதன் இந்தி வடிவத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கி சாதனைப் படைத்தவர் ஸ்ரீதர்.

1961ல் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுதினார். அவரால் சூப்பர் ஸ்டார்களையும் இயக்க முடிந்தது, புதுமுகங்களையும் எளிதாக நடிக்க வைக்க முடிந்தது.

இன்று முன்னணி நடிகராகத் திகழும் விக்ரம் தனது வாழ்க்கையைத் துவங்கியது ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை படம் மூலம்தான்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக ரஜினியும் கமலும் உருவெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவ்விருவரையும் வைத்து ஸ்ரீதர் உருவாக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்தது.

கமர்ஷியல், கிளாஸிக் என தொட்டது அனைத்திலும் வெற்றி பெற்ற உன்னதக் கலைஞர் ஸ்ரீதர்.

மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து அவர் இயக்கிய உரிமைக்குரல், மீனவ நண்பன் இரண்டுமே வசூலில் சிகரம் தொட்டவை.

அதே போல நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோரின் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பல மைல் கற்களைப் படமாகத் தந்தவர் ஸ்ரீதர்.

சிவாஜி கணேசனின் சிவந்த மண் திரைப்படத்தை தமிழ் திரையுலகம் மறக்க முடியுமா?

திரையுலகிலிருந்து அவர் முழுமையாக விலகினாலும் அவர் மனம் கடைசி மூச்சு நிற்கும்வரை சினிமாவையே சுவாசித்துக் கொண்டிருந்தது. தனது 78வது வயதிலும் கூட சினிமாவுக்காக திரைக்கதையை உருவாக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீதர். இன்றைய முன்னணி இயக்குநர்கள் பி.வாசு, இயக்குநராக இருந்து நடிகராகிவிட்ட சந்தானபாரதி, சிவி ராஜேந்திரன் என பல இயக்குநர்களை உருவாக்கியவர்.

தமிழ்ல் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் வெற்றிக் கொடி கட்டியவர் ஸ்ரீதர்.

கலையுலகம் கண்ணீர்:!

இயக்குநர்களின் இயக்குநரான ஸ்ரீதரின் மறைவுக்கு தமிழ் திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக இயக்குநரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ராம நாராயணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X