For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்களர்கள் துணையோடு சேது திட்டத்தை எதிர்க்கும் தலைவர்கள்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தமிழகம் வளம் பெருவதை விரும்பாத சிங்களவர்கள், தமிழகத்திலே உள்ள சிலரை வளைத்துப் போட்டு சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை போட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை விமான நிலையம் எதிரே ரூ.98 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில்,

பல அமைச்சர்களுக்கு இந்த துறைக்கு இவர் தான் அமைச்சர் என்று அழைக்கப்படுகின்ற பட்டம் உண்டு. நம்முடைய அமைச்சர் தம்பி பாலு அந்தப் பட்டத்தைப் பெற்றவர் மாத்திரமல்ல. அந்தத் துறையைப் பற்றி ஆதியோடு அந்தமாக அனைத்தையும் புள்ளி விவரங்களோடு தெரிந்து வைத்திருக்கின்ற ஒரு அமைச்சர். 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்'.

பாலு இன்றைய தினம் சாலைப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து துறைகளுக்கு அமைச்சராக இருக்கிறார். சில பேர் சொல்கிறார்கள், இவர்கள் சண்டை போட்டு கப்பல் துறையை வாங்கியவர்கள். அன்றைக்கே வெளியுறவுத் துறையை வாங்கியிருந்தால் இந்நேரம் இலங்கைக்குப் போய் நாம் தமிழர்களை மீட்டிருக்கலாமே என்று பைத்தியக்காரத்தனமான கருத்துப் பேசப்படுவதை நாம் அறிவோம்.

வெளியுறவுத் துறையாக இருந்தாலும், உள்ளாட்சித் துறையாக இருந்தாலும், தொழில் துறையாக இருந்தாலும், சுரங்கத் துறையாக இருந்தாலும், எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறைகளோடு கலந்து ஆலோசித்து வெளிநாட்டைப் பற்றி ஒரு முடிவை எடுக்கக்கூடிய அந்த அதிகாரம் பிரதமருக்குத்தான் உண்டு.

1967ம் ஆண்டு திமுக ஆட்சி மலர்ந்த நேரத்தில் அண்ணா தமிழகத்திலே எழுச்சி நாள் ஒன்றைக் கொண்டாடினார்.

அந்த எழுச்சி நாளில் அண்ணாவும், நாங்களும் பல ஊர்களிலே கூட்டம் போட்டு, அந்த நாளில் நோக்கத்தை எடுத்துரைத்தோம். அந்த எழுச்சி நாளில் நாங்கள் எழுப்பிய கோரிக்கைகளிலே ஒன்று, நாங்கள் வைத்த மிக முக்கியமான வேண்டுகோளிலே ஒன்று சேலம் இரும்புத் தொழிற்சாலை. நெய்வேலி நிலக்கரி இரண்டாவது சுரங்கம். அடுத்தது சேது சமுத்திர திட்டம்.

இதிலே நெய்வேலி திட்டம் பெருந்தலைவர் காமராஜர் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு முடிவடைந்து அடுத்தடுத்து சுரங்கங்கள் தோண்டுவதற்கான சூழ்நிலை அங்கே உருவாகிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.

அதைத் தொடர்ந்து சேது சமுத்திர திட்டத்திற்காக வாதாடினோம். போராடினோம். அந்தத் திட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து, அந்தத் திட்டத்தை நிறைவேற்றச் சொல்லி, அந்தப் பொறுப்பை அந்தத் துறையின் அமைச்சர் பாலுவிடம் மத்திய அரசு தந்திருக்கிறது என்றால் அவர் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பார் என்ற நம்பிக்கையோடு தான் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

அப்போது வேறு துறைகளைப் பெற்றிருக்கலாம் என்றால் என்ன துறைகளைப் பெறச் சொல்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. நாம் இன்றைக்குப் பெற்றிருக்கின்ற துறை, பாலுவிற்காக அல்ல, நாம் பெற்றிருக்கின்ற இந்தத் துறை தமிழகத்தை வளம் பொருந்திய நாடாக ஆக்குவதற்கு, தமிழகத்திலே இன்றைக்கு பாறையாக இருக்கின்ற இடத்தை எல்லாம் சோலைவனமாக ஆக்குவதற்காக, வணிக பூமியாக ஆக்குவதற்காக, வெளிநாட்டு வாணிபங்கள் விரிவடைவதற்காக.

அதற்காகத்தான், தமிழகத்தின் வளத்தை பெருக்குவதற்காகத்தான் சேது சமுத்திரத் திட்டம்.

இந்தத் திட்டத்தை ஏறத்தாழ நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டின் ஆன்றோர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், வித்தகர்கள் அத்தனை பேரும் ஆய்ந்து இது நல்ல திட்டம், நிறைவேற்றலாம் என்று சொல்லி, அதற்கு சர் ஏ.ராமசாமி முதலியார் தலைமையிலே ஆய்வு நடைபெற்று, பெருந்தலைவர் காமராஜர், ஜஹகர்லால் நேருவை டெல்லியிலே சந்தித்து பரிந்துரை செய்து நேருவும் அதற்கு தன்னுடைய ஒத்துழைப்பைத் தருவதாகச் சொல்லி, அந்தத் திட்டத்தை நிறைவேற்ற இடையிலே பல சங்கடங்கள் ஏற்பட்டு, இன்றைய தினம் அந்தத் திட்டம் ஏறத்தாழ முக்கால் பகுதி நிறைவேறியிருக்கின்ற சூழ்நிலையில், அதைத் தடுக்க சில பேர் இன்றைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக பக்கத்திலே இருக்கிற ஒரு நாட்டின் அரசு (இலங்கை) நாம் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதை விரும்பவில்லை. ஏனென்றால், இந்தத் திட்டத்தை தமிழகத்திலே நிறைவேற்றினால் தமிழகம் மேலும் வளம் பொருந்தியதாக ஆகிவிடும், மேலும் பலம் பொருந்தியதாக ஆகி விடும்.

தமிழகம் பலம் பொருந்துவதும், வளம் சிறப்பதும் தனக்குப் பிடிக்காத ஒன்று என்பதால் அவர்கள், சிங்களவர்கள் சில பேர் தமிழகத்திலே இருக்கிற சில பேரை வளைத்துப் போட்டு ஏற்கனவே எவ்வளவு சீக்கிரமாக இந்தத் திட்டம் வேண்டுமென்று சொன்னார்களோ, அவர்கள் எல்லாம் இந்தத் திட்டத்தை இன்றைக்கு எதிர்த்துப் பேசுகிறார்கள்.

அது திட்டத்தின் மீதுள்ள கோபத்தால் அல்ல. அந்தத் திட்டத்தை நாம் எடுத்து நிறைவேற்றக் கூடாது, அந்தப் பெயர் பாலுவிற்கு வந்துவிடக்கூடாது, அந்தப் பெயர் இங்குள்ள கூட்டணிக்கு வந்துவிடக்கூடாது. எனவேதான் இந்தத் திட்டத்தை இன்றைக்கு அவர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

நீங்கள் கடந்த கால தேர்தல் அறிக்கையை எடுத்துப் படித்துப் பார்த்தீர்களேயானால், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் திட்டவட்டமாக சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அது சிறந்த திட்டம், அந்தத் திட்டம் நிறைவேற்றப்படா விட்டால் தமிழ்நாடு பாழாகும். எப்படியும் இதை நிறைவேற்றியே தீருவேன் என்று சபதம் செய்தார்கள்.

இப்போது என்ன சொல்கிறார்கள்? அந்தத் திட்டத்தை எப்படியும் நான் தடுத்தே தீருவேன் என்று சொல்கிறார்கள் என்றால், என்ன தாராளமான மனப்பான்மை? என்ன தமிழ் உணர்வு? என்ன நாட்டைப் பற்றிய நல்ல எண்ணம்? எவ்வளவு அதி அற்புதமான சிந்தனை? இவைகளை எல்லாம் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எண்ணிப் பார்க்கின்ற மக்களின் எண்ணிக்கை இன்றைக்கு தமிழ்நாட்டிலே குறைந்து வருகின்ற காரணத்தால் எவரும் எதையும் பேசலாம் என்றாகிவிட்டது. அப்படி ஆகிவிட்ட காரணத்தினாலே தான் இந்தத் திட்டங்களைப் பற்றி நாம் பேசும்போது, அந்தத் திட்டங்களிலே தங்களுக்கு உள்ள வெறுப்பை காட்டி, அதைத் தடுத்தே தீர வேண்டும் என்று உச்சகட்டத்திற்குச் செல்கிற சில தலைவர்களை நாம் பார்க்கிறோம்.

அவர்களை நீங்கள் வைக்க வேண்டிய இடத்திலே வைக்க வேண்டும். அவர்களை நீங்கள் ஒதுக்க வேண்டிய இடத்திற்கு ஒதுக்க வேண்டும். அவர்களை நீங்கள் போட வேண்டிய இடத்திலே போட வேண்டும். இங்கே தம்பி பாலுவை இந்த வட்டாரத்து மக்கள் தேர்வு செய்த காரணத்தால் இதோ மேம்பாலங்கள், மேம்பாலங்கள் என்று தொடர்ந்து என் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறார், திறப்பு விழாவிற்கு வா, கல்நாட்டு விழாவிற்கு வா என்று என்னை தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

அந்தத் தொந்தரவு கூட எனக்குச் சுகமாகத்தான் இருக்கிறது. ஆகவே, தம்பி, நீ தொந்தரவு செய்து கொண்டே இரு, தொந்தரவு செய்கின்ற அளவிற்கு திட்டங்களை இங்கே கொண்டு வா, நிறைவேற்று, வாழ்த்துவதற்கு நான் வருகிறேன் என்று உங்களோடு சேர்ந்து பாலுவின் முயற்சிகளை, மத்திய அரசு, மாநில அரசுக்குச் செய்கின்ற உதவிகளைப் பாராட்டி, போற்றுகிறேன் என்றார் கருணாநிதி.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் பாலு,

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் துறைமுக, சாலை பணிகளுக்காக மத்திய அரசு சுமார் ரூ.46,000 கோடியை செலவிட்டுள்ளது.

சென்னையில் மக்கள் தொகை ஒரு லட்சம் அதிகரித்தால், வாகனங்களின் எண்ணிக்கை 1.3 லட்சமாக அதிகரிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இதுபோன்ற மேம்பாலங்கள் அவசியம்.

அடுத்த 4 நாட்களில் திண்டிவனம் புறவழிச்சாலை திறக்கப்பட உள்ளது. முதல்வர் கருணாநிதி தேதி கொடுத்தால் அடுத்த ஒரு வாரத்தில் சென்னை கத்திப்பாரா பாலத்தை திறக்கலாம். ஒருவேளை நாங்கள் இந்தப் பாலத்தை திறந்து வைக்க முடியாவிட்டால் (அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டால்) அடுத்து வரும் அமைச்சரிடம் வலியுறுத்தி திறக்க வைப்போம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X