For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை தமிழர்களுக்கு உணவு-உடை-நிதி வழங்க கருணாநிதி வேண்டுகோள்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிதி, உணவு, உடைகளை வழங்குமாறு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல் கட்டமாக தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 10 லட்சத்தை அவர் வழங்கியுள்ளார். அதே போல திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தலா ரூ 50,000மும், மாநில அமைச்சர்கள் ஒரு மாத ஊதியமான சுமார ரூ. 25,000த்தையும் அளித்துள்ளனர்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிப் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமது உயிருக்கு உத்தரவாதமின்றி, வாழ்வாதாரத்தையும், உடைமைகளையும் இழந்து அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களும்- சோதனை வேதனைகளும், மனித இன வரலாற்றின் சோக நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்து, நமது ஊனையும், உள்ளத்தையும் உலுக்குகின்றன.

இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது அருகில் உள்ள இந்திய நாட்டு மக்களின்-குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களின் இன்றியமையாக் கடமையாகும்.

நமது வேண்டுகோளினை ஏற்று 800 டன்கள் அளவிற்கு நிவாரணப் பொருள்களை இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பி வழங்கிட மத்தியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்பாடு செய்திருப்பது நம் அனைவருக்கும் ஆறுதல் அளித்திடும் செயலாகும்.

தமிழ்நாடு அரசின் சார்பிலும் இலங்கையில் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் தமிழர்களுக்கு உடனடித் தேவையான உணவுப் பொருள்கள், உடைகள், மருந்துகள் போன்ற நிவாரணப் பொருள்களை விரைவில் அனுப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு- மத்திய அரசு அளித்துள்ள அனுமதியின் அடிப்படையில் அனுப்ப இருக்கும் நிவாரணப் பொருள்கள் இலங்கையில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் மூலம் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் வேதனையால் விழிநீர் பெருக்கி வாடிக் கொண்டிருக்கும் சகோதர சகோதரியர்க்கு தாய்த் தமிழகத்து மக்கள் தம்மால் இயன்றதனைத்தையும் வழங்கி உதவிட, மிகப் பெரும் அளவில் முன் வர வேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

உணவுப் பொருள்கள், உடைகள், மருந்துகள் போன்றவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களிடம் வழங்கி உரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

நிதியுதவி செய்திட விரும்புவோர் 'ஸ்ரீலங்கன் தமிழ்ஸ் ரிலிப் பண்ட்' என்ற பெயரில் காசோலைகளையும், வரைவுக் காசோலைகளையும்

தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல் கட்டமாக தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 10 லட்சத்தை கருணாநிதி வழங்கியுள்ளார். அதே போல திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தலா ரூ 50,000மும், மாநில அமைச்சர்கள் ஒரு மாத ஊதியமான ரூ. 25,000த்தையும் அளித்துள்ளனர். இன்று பிற்பகல் வரை ரூ. 26 லட்சம் நிதி சேர்ந்துள்ளது.

இவர்கள் தவிர எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் ரூ. 5 லட்சமும், தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ. 3 லட்சமும், பாடலாசிரியர் வைரமுத்து ரூ. 1 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி 50 ஆயிரம் ரூபாயும், செ.குப்புசாமி, வசந்தி ஸ்டான்லி, ஜின்னா, கிருஷ்ணசாமி ஆகியோர் தலா 25 ஆயிரம் ரூபாயும் முதல்வரிடம் வழங்கினர்.

முன்னாள் அமைச்சர் பூங்கோதை 25 ஆயிரம் ரூபாயும் நிதி உதவி வழங்கினார்.

முதலமைச்சரின் செயலாளர்கள் சண்முகநாதன், ராஜமாணிக்கம், ராஜரத்தினம், தேவராஜ், பிரபாகர் ஆகியோர் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார்கள்.

முதல்வர் அலுவலக சிறப்பு உதவியாளர் முத்து வாவாசி 5 ஆயிரம் ரூபாயும், மக்கள் தொடர்பு அலுவலர் மருதவிநாயகம் 5 ஆயிரம் ரூபாயும், முதல்வரின் அலுவலக முதுநிலை உதவியாளர் வெங்கட்ராமன் 2 ஆயிரம் ரூபாயும், டபேதார் ஏழுமலை ஆயிரம் ரூபாயும் இலங்கை தமிழருக்கான நிவாரண நிதியாக முதல்வரிடம் வழங்கினார்கள்.

ராஜினாமா மிரட்டல் கெடு இன்று முடிகிறது:

இதற்கிடையே இலங்கையில் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும், பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும்,

இதை மத்திய அரசு 2 வாரங்களுக்குள், அதாவது 28ம் தேதிக்குள் (இன்றைக்குள்) அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,

இல்லாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்வோம் என தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்தில் கெடு விதிக்கப்பட்டது.

இந்தக் கெடு இன்றுடன் முடிகிறது. இந் நிலையில் இலங்கை தமிழர்களுக்கு 800 டன் உணவு, மருந்து அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதே நேரத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா ஏதும் செய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்துவிட்டது.

இதனால் திமுக என்ன நிலை எடுக்கும் என்பது தெரியவி்ல்லை. இது தொடர்பாக மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

மத்திய அரசுக்கு இனியும் நெருக்கடி தர மாட்டோம் என அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கருணாநிதி உறுதிமொழி தந்துள்ளதால் ராஜினாமா முடிவை திமுக வாபஸ் பெறும் என்றே தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X