For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி விஷயத்தில் நாட்டின் இறையாண்மை எங்கே?-பாரதிராஜா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக போராடினால் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். பெங்களூரில் இறையாண்மை எங்கே? காவிரி நீரில் இறையாண்மை எங்கே? முல்லை பெரியாரில் இறையாண்மை எங்கே? பாலாற்றில் இறையாண்மை எங்கே? என இயக்குனர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர்கள் சீமான், அமீரும் விடுவிக்கப்படும் நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என்றும் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்பட்ட பொழுதெல்லாம் குரல் கொடுக்க தமிழ் திரையுலகம் என்றுமே தயங்கியதில்லை. இதற்கு கர்நாடகாவில் காவிரிப் பிரச்சினை ஏற்பட்டபோது நெய்வேலி வரை சென்று போராடியது, கும்பகோணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் இறந்தபோது அனுதாபத்தோடு உதவிகள் செய்தது போன்று பல நிகழ்ச்சிகள் இன்று வரை அழிக்க முடியாத உதாரணங்களாய் இருக்கின்றன.

கடந்த 18ம் தேதி ராமேஸ்வரம் வரை சென்று தமிழர்களுக்காக குரல் கொடுத்த திரையுலக தமிழ் உணர்வுக் குழுவின் சார்பில் சென்ற தமிழ்த் திரையுலகினர் அனைவரின் நோக்கமும் தமிழர்கள் இலங்கையில் தாக்கப்படுவதை தடுப்பது தான்.

அதைத் தவிர பிரிவினைவாதம் போன்ற எந்த உள்நோக்கமும் இந்த குழுவிற்கோ அல்லது இந்த குழுவின் சார்பில் ராமேஸ்வரம் சென்ற 2,000 திரையுலக சகோதரர்களுக்கோ இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

எங்கள் சகோதரர்கள் சீமான், அமீர் கைது செய்யப்பட்டுள்ளதால் நாங்கள் துயரம் அடைந்துள்ளோம். அதுவும் தீபாவளியன்று அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது ஆற்றொணாத் துயரை தருகிறது. சகோதரர்களே, சிறையில் நீங்கள் அடைக்கப்பட்டிருக்கும் இந்த தீபாவளி எங்களுக்கு ஒரு துயர தீபாவளி. நீங்கள் எப்போது விடுவிக்கப்படுகிறீர்களோ அப்போது தான் எங்களுக்கு தீபாவளி.

உன் விடுதலைக்காக சிறைவாசலில் வெடிகளோடு காத்திருப்போம். அங்கு தான் வெடிவெடித்து, வான வேடிக்கையோடு தீபாவளி கொண்டாடுவோம். இலங்கை தமிழர்களின் துயர் கண்டு, சிறார் முதல் பெரியவர் வரை கொல்லப்படும் கொடுமை கண்டு உணவுக்காக, உயிர் காக்கும் மருந்துக்காக, வாழ்வுக்காக அவர்படும் அவலம் கண்டு எழுந்த துயரத்தில், கோபத்தில், உணர்ச்சி வேகத்தில் உதிர்க்கப்பட்ட வார்த்தைகளுக்கு தவறான அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பெங்களூரில் இறையாண்மை எங்கே? காவிரி நீரில் இறையாண்மை எங்கே? முல்லை பெரியாரில் இறையாண்மை எங்கே? பாலாற்றில் இறையாண்மை எங்கே? என்றெல்லாம் கேள்வி கேட்க விரும்பவில்லை. எல்லோருக்கும் இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு மீது எவ்வளவு அக்கறை உள்ளதோ அவ்வளவு அக்கறை எங்களுக்கு உண்டு.

தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எப்போதெல்லாம் துன்பங்களும், துயரங்களும் நிகழ்கின்றதோ, எப்பொழுதெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் ஒன்றுப்பட்ட தமிழ்த் திரையுலகம் உரத்த குரல் எழுப்பி வருகிறது என்பதை தமிழ் நெஞ்சங்களுக்கு நினைவுபடுத்த வேண்டும் என்பது அவசியமில்லை.

எங்கள் பெயரால் ஆதரித்தும், எதிர்த்தும் கொடும்பாவிகள் எரிக்கப்படுவது எங்களுக்கு வேதனையை தருகிறது. இரண்டையுமே தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். ஒட்டுமொத்த தமிழர்களாலும் தமிழ்த் திரையுலகம் வரவேற்கப்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பமாகும் என்று கூறியுள்ளார் பாரதிராஜா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X