For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார் மீது தாக்குதல்-அழகிரி மீது ஜெ புகார்

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
பசும்பொன்&சென்னை: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்றபோது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவருக்கு பாதுகாப்பாக சென்ற போலீசாரின் வாகனங்கள் மீது பயங்கர கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது.

இதில் ஜெயலலிதாவின் கார், போலீசாரின் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இந்த பயங்கர தாக்குதலுக்கு முதல்வரின் மகன் அழகிரி அனுப்பி வைத்த கும்பல் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் சசிகலாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார் ஜெயலலிதா.

தள்ளுமுள்ளு-கல்வீச்சு:

அப்போது வெளியே கூடியிருந்த அதிமுகவினர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந் நிலையில் நுழைவு வாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கார்மீது ஒரு கல் வந்து விழுந்தது. இதைத் தெடர்ந்து நினைவிட வளாகத்துக்குள்ளும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.

இதனால் அங்கு பெரும் பதற்றமும் ஏற்பட்டது.

கல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். ஆனாலும் கல்வீச்சு தொடர்ந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் கண்ணாடி நொறுங்கியது. அவருக்கு பாதுகாப்பாக வந்த தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த கமாண்டோக்களின் 3 வாகனங்களும், போலீசாரின் ஒரு வாகனமும் சேதமடைந்தன.

இந்த கல்வீச்சில் பல போலீசாகும் காயமடைந்தனர். சிலருக்கு மண்டை உடைந்தது. இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதனால் ஜெயலலிதாவை நினைவிடத்தின் பின் புற வாசல் வழியாக போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இது திமுகவின் திட்டமிட்ட சதி-ஜெ:

இந்தக் கல்வீச்சு குறித்து ஜெயலலிதா நிருபர்களிடம் கூறுகையில்,

பசும்பொன் தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்த நேரத்தில் நடந்த இந்த தாக்குதல் திமுகவின் திட்டமிட்ட சதி.

ஏற்கனவே எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு உள்ளது. இந்த நிலையில்தான் தாக்குதல் நடந்துள்ளது.

17 வருடமாகவே நான் மிரட்டலில் தான் வாழ்ந்து வருகிறேன். அதிமுக தொண்டர்கள் ஆதரவுடன் தான் பாதுகாப்பாக உள்ளேன்.

புலிகளிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்தது குறித்து அறிக்கையும் கொடுத்திருந்தேன். இருந்தும் இது போன்ற தாக்குதல் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அறவே சீர்குலைந்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

இங்கு சட்டம்-ஒழுங்கே இல்லை. என் மீது பற்று, பாசம் உள்ள மக்கள்தான் இங்கு அதிகம். அப்படி இருந்தும் இங்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்திராவை தாக்கியவர்களே.. என்ன தாக்கினர்:

பின்னர் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்ன தான நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஜெயலலிதா பேசுகையில்,

அன்புக்கு அடிபணிந்தும், அதிகாரத்துக்கு அடிவணங்காமலும் விளங்கியவர் தேவர் திருமகனார். தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்தார். தற்போது தமிழகத்தில் தேசிய- தெய்வீக விரோத நடவடிக்கைகள் நடக்கிறது. தீய சக்திகள் தமிழகத்தை இருளில் ஆழ்த்தியுள்ளது.

நான் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போகுமோ என்று கவலைப்பட்டேன். சென்னை விமான நிலையத்தில் படிக்கட்டு இடறி இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தோல் பெயர்ந்தது. இதனால் விமானத்தில் ஏறமுடியாமல் என்னுடைய இல்லத்துக்கு சென்றேன். அங்கு டாக்டரை வரவழைத்து கட்டுப்போட்டேன்.

டாக்டர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்றும் ஊசி போட்டு மாத்திரை, மருந்து சாப்பிட வேண்டும் என்றும் கூறினார். ஆனால் நான் முடியாது, பசும்பொன் கிராமத்திற்கு செல்ல வேண்டும், அங்கு தேவர் திருமகனாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டு இங்கு வந்திருக்கிறேன்.

நான் வீட்டைவிட்டு விமான நிலையம் வர போக்குவரத்து நெரிசலால் 3 மணி நேரம் ஆகிவிட்டது. விமானத்தில் வரும்போது வலியால் அவதிப்பட்டேன். ஆனால் இங்கு உங்கள் மலர்ந்த முகங்களை பார்த்தவுடன் வலி போய்விட்டது.

தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. தீயசக்திகள் தமிழகத்தை ஆட்சி செய்கிறது. இங்குள்ள கூட்டம் நம்ம கூட்டம். இங்கு லட்சோப லட்சம் தேவர் பிள்ளைகளும் என்னுடைய உடன்பிறப்புகளும் எனது சகோதர, சகோதரிகளும் இருக்கிறார்கள்.

நான் தேவர் நினைவிடத்தைவிட்டு வரும்போது எனது வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டது. எந்த கூட்டத்தில் இந்த காரியம் நடக்கிறது?.

1977ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை பழிவாங்கிய கூட்டம் என்னை கொல்ல பார்க்கிறது. இதைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை.

இந்த தேவர் ஜெயந்தி நாளில் சபதம் ஏற்போம், தீய சக்திகளான மத்திய-மாநில அரசுகளை தூக்கி எறிவோம். அடுத்து உங்கள் அன்பு சகோதரியின் ஆட்சி மலர வேண்டும் என்றார்.

இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் ஜெயலலிதா சென்னை திரும்பினார்.

''போலீசார் வேடிக்கை பார்த்தனர்'':

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

பசும்பொன் தேவர் குரு பூஜைக்கு சென்று இருந்தேன். அங்கு லட்சக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் என் மீது அன்பு கொண்ட ஆதரவாளர்கள். என்னை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் கூடியிருந்தனர். அந்த கூட்டத்தில் 4 விஷமிகள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் நடந்த கல்வீச்சில் எனது கார் கண்ணாடி உடைந்தது. எனக்கும் காயம் ஏற்பட்டது.

எனக்கு பின்னால் வந்த வாகனங்களும் கல்வீச்சில் சேதமடைந்தன. அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் கை கட்டி வேடிக்கை பார்த்தனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த வன்முறை சம்பவத்தால் எனக்குள்ள ஆதரவை தடுத்து விட முடியாது. எனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரிய மனு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவங்களை பார்க்கும்போது தமிழகத்தில் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு ஒரு ஆட்சி நடக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்றார்.

''அழகிரியின் உத்தரவால் நடந்த தாக்குதல்'':

பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

எனக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பசும்பொன் கிராமத்திற்கு சென்ற என் மீது, வன்முறை கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், எனது வாகனம் உட்பட ஐந்து வாகனங்கள் கற்களால் அடித்து நொறுக்கப்பட்டன. இது முதல்வர் கருணாநிதி, தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட, திட்டமிட்ட கொலை வெறித் தாக்குதல்.

முதல்வர் மகன் அழகிரியின் உத்தரவின் பேரிலேயே, இந்த கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது. போலீசாரின் இரண்டு வாகனங்களிலேகுற்றவாளிகள் வந்துள்ளனர்.

இச்சதிச்செயல், உளவுத்துறைக்கு தெரிந்தே தான் நடந்திருக்கிறது என்று போலீஸ் துறையில் உள்ள நம்பத்தகுந்த வட்டார தகவல் தெரிவிக்கிறது. இதை கண்டித்து, கழக உடன் பிறப்புகள் ஆங்காங்கே மறியல் நடத்தி கைதாவதாக கேள்விப்பட்டேன்.

இது எனக்கு, மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. ஆகவே உடன்பிறப்புகள் யாரும் இதுபோன்ற மறியல் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர் கருணாநிதியின் அராஜகத்தை, திட்டமிட்ட கொலை வெறித் தாக்குதலை நாம் அரசியல் ரீதியாக சந்திப்போம் என்று கூறியுள்ளார்.

அதிமுக எம்எல்ஏ கைது:

இதற்கிடையே ஜெயலலிதா கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நேற்றிரவு மானாமதுரை பை-பாஸ் ரோட்டில் அதிமுக எம்எல்ஏ குணசேகரன் தலைமையில் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஜெ பாதுகாப்பு-உள்துறையிடம் அதிமுக மனு

இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பதால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி மத்திய உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தாவிடம் அதிமுக மனு அளித்துள்ளது.

மாநிலங்களவை அதிமுக தலைவர் டாக்டர் மைத்ரேயன் குப்தாவை சந்தித்து இந்த மனுவை அளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X