For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டம் இல்லாததால் திரும்பிய ஜெ!-அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பசும்பொன்னில் அதிமுகவினர் கூட்டம் மிகக் குறைவாக இருப்பதாக வந்த தகவலின்பேரில் கோபம் ஏற்பட்டுத் தான் தனது பயணத்தை அவர் கடைசி நேரத்தி்ல் ரத்து செய்தார். ஆனால், அந்த மக்களிடம் மதிப்பில்லாமல் போய் விடும் என்று எடுத்துச் சொல்லப்பட்ட பின்னர் தான் அதே விமானத்தில் அவர் மீண்டும் புறப்பட்டிருக்கிறார் என வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கு இனிமேல் மக்களிடம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற முடியாது என்று நன்றாகத் தெரிந்து விட்டது.

எனவே எப்படியாவது குழப்பத்தை உண்டாக்கி, கலவரத்தில் ஈடுபட்டு தமிழகத்திலே சட்டம்-ஒழுங்கைக் குலைக்கின்ற முயற்சியிலே தீவிரமாக இறங்கியுள்ளார் என்பதற்கு உதாரணம் தான் பசும்பொன் கிராமத்திலே தேவர் நினைவகத்திலே அவர் ஏற்படுத்திய சம்பவம்.

தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒவ்வொரு ஆண்டும் நேரில் வந்து மரியாதை செலுத்துகின்ற இடத்திலேயும் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் அதிமுக தலைவி.

பசும்பொன்னில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு-அந்த நேரத்திலே அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து மரியாதை செய்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. அது போலவே ஜெயலலிதாவும் அவரது கட்சியினரும் அங்கே வருவதற்கு மதியம் ஒன்றரை மணி என்று நிர்ணயிக்கப்பட்டது.

அந்த நேரத்தை சரியாக கடைபிடித்து திமுக, காங்கிரஸ் கட்சி மற்றக் கட்சியினர் எல்லாம் முறையாக அங்கே வந்து மரியாதை செலுத்தினர். ஆனால் ஜெயலலிதா கட்சியினர் குறிப்பிட்ட நேரத்திலே அவர் அங்கே வரவில்லை.

காரணம் அவர் ரயிலிலும் வராமல், வழக்கமாக மக்கள் செல்லும் விமானங்களிலும் செல்லாமல், தனி விமானம் எடுத்துக் கொண்டு செல்வதாகக் கூறிக் கொண்டு- விமான நிலையம் வரை சென்று விட்டு- அங்கே படிகள் சரியாக இல்லை, நான் போகவில்லை என்று வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

அதன் பிறகு மக்களிடம் மதிப்பில்லாமல் போய் விடும் என்று கட்சியினர் சொன்ன பிறகு மீண்டும் அதே விமானத்தில் புறப்பட்டிருக்கிறார். அப்போது மட்டும் அவரால் எப்படி அந்த விமானத்தில் ஏறிச் செல்ல முடிந்தது என்று தெரியவில்லை.

உண்மையில் என்ன காரணம் என்று விசாரித்த போது, அவர் புறப்பட்ட நேரத்தில் பசும்பொன் கிராமத்தில் அவருடைய கட்சியினர் குறைவாக இருப்பதாக வந்த தகவலின் பேரில் கோபம் ஏற்பட்டு பயணத்தை ரத்து செய்து விட்டார் என்றும், பிறகு பக்கத்துக் கிராமங்களிலிருந்து கூட்டம் சேர்த்து மீண்டும் அவரை வற்புறுத்தி அழைத்துச் சென்றார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதற்குள் அதிமுகவினருக்கு குறிப்பிட்ட நேரம் முடிந்து விட்ட காரணத்தால், அவருடைய தோழமைக் கட்சி ஒன்றுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் செல்கிறோம் என்று கூறிக் கொண்டு அந்த மண்டபத்திற்குச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால் அதற்குள் அங்கே திரட்டப்பட்ட அதிமுக தொண்டர்கள் தாங்களும் உள்ளே செல்ல வேண்டுமென்று வலியுறுத்த, அந்த சிறிய இடத்திற்குள் செல்ல முடியாத நிலையில் காவல் துறையினர் அவர்களைத் தடுக்க முயற்சி செய்ய, அதற்குக் கட்டுப்படாமல் காவல் துறையினர் மீது கல்லெறியும் முயற்சியில் அதிமுகவினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதன் பிறகு காவல் துறையினர் மிகுந்த சிரமப்பட்டு, அவரை பத்திரமாக விமான நிலையம் வரை அழைத்துச் சென்று சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் காவல் துறையினர் மீதே அதிமுகவினர் புகார் கூறுகிறார்கள்.

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜெயலலிதாவிற்கு இது முதல் முறையல்ல. சில நாட்களுக்கு முன் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் அய்யோ, காவல்துறை என்னை கைது செய்யப் போகிறது, எனக்கு ரகசிய தகவல் என்றெல்லாம் புலம்பி ஓர் அறிக்கை விடுத்தார்.

'தான் திருடி, பிறரை நம்பார்' என்பதைப் போல ஜெயலலிதா ஆட்சியிலே நள்ளிரவில் எங்கள் தலைவர் கலைஞரை தாக்கி கைது செய்ததைப் போலவும் தன்னையும் கைது செய்து விடுவார்களோ என்ற பயம் காரணமாகவோ அல்லது இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே முதல்வர் கருணாநிதி தலையிட்டு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டு வரும் செல்வாக்கை திசை திருப்புவதற்காகவோ என்னவோ ஜெயலலிதா தனக்குத் தானே திட்டம் வகுத்து இப்படிப்பட்ட செயல்களிலே ஈடுபடுகிறார்.

அது போலவே மூன்று மாதத்திற்கு ஒரு முறை தனக்கு பாதுகாப்பே இல்லை, போதுமான காவலர்கள் இல்லை, கொலை செய்ய முயற்சி, தெருவிலே ஒருவன் போனான், வானத்திலே இருந்து கவனித்தார்கள், லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சி என்றெல்லாம் பல்வேறு பொய்களை அவ்வப்போது சொல்லி தன் பக்கம் மக்களைத் திருப்பும் முயற்சியில் ஈடுபடக் கூடிய ஒரு நபர் தான் ஜெயலலிதா என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

எனவே அவர் அடிக்கடி காட்டி வரும் பூச்சாண்டிகளைக் கொண்டு மக்கள் அவர் பக்கம் திரும்ப மாட்டார்கள் என்பது நிச்சயம், நிச்சயம் என்று கூறியுள்ளார் பெரியசாமி.

நினைவிடத்துக்கு கூடுதல் நிதி-ஸ்டாலின்:

இதற்கிடையே பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில்,

தேவர் நினைவிடத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் தற்போது விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. தேவைபட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட கோரிக்கை வைக்கப்பட்டுள்ள அது அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X