தமிழர்கள் சிந்தும் ரத்தம்: மன்மோகன் தான் பொறுப்பு- வைகோ

இலங்கைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்க மாட்டோம் என்று பேசிய வைகோவும், தனி ஈழம் போல தனித் தமிழ்நாடும் விரைவில் உருவாகும் என்று பேசிய கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு காவல் நீடிப்பு தேவையில்லை, விசாரணை முடிந்துவிட்டது என தமிழக அரசு கூறிவிட்டதையடுத்து நீதிமன்றம் நேற்று இவர்களை விடுவித்தது.
நீதிமன்ற வாசலில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில்,
நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. ஈழத் தமிழர்களை பாதுகாக்க விடுதலைப்புலிகள் தான் போராடி வருகிறார்கள். இலங்கை அரசு அவர்களை கொன்று குவித்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தாமல், இந்திய அரசும் அதில் அங்கம் வகிக்கும் தமிழக அரசும் இலங்கை அரசுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றன.
இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவியை செய்கிறது. ரூ.2,000 கோடியை கடனாக கொடுத்துள்ளது. தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகிறது.
இப்போது ஈழத் தமிழர்களுக்கு நிவாரண நிதி என்று முதலமைச்சர் கருணாநிதி நாடகம் ஆடி வருகிறார். ஈழத் தமிழர்களுக்கு 800 டன் உணவுப் பொருட்கள் அனுப்புவதாக கூறுவது கண்துடைப்பு நாடகம். அது சிங்கள அரசுக்கு தான் பயன்படும்.
இங்கு திரட்டப்படும் நிதி கூட சிங்கள அரசுக்குத்தான் பயன்படும். போரை நிறுத்தாவிட்டால் பொருளாதார தடை விதிப்போம், வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்று கூறினால் இலங்கை அரசு வழிக்கு வந்திருக்கும். அத்தகைய தைரியம் மன்மோகன் சிங் அரசுக்கு இல்லை.
ஈழத்தில் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு ரத்தத்திற்கும், தமிழ் பெண்கள் மரணத்திற்கும் மன்மோகன் சிங் அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும்.
பேச்சுரிமைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் பொடா வழக்கில் கைது செய்தபோது இதை உச்சநீதிமன்றத்தில் கூறினேன். எனவே, என்னை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்றார் வைகோ.
பின்னர் தனது கட்சி அலுவலகமான தாயகம் சென்ற வைகோவும் கண்ணப்பனும் அந்த வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவித்தனர்.
அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசுகையில்,
போராட்டத்தில் முன்வைத்த காலை பின் வைக்காமல், எதற்கும் அஞ்சாமல் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக பாடுபடும் கட்சி மதிமுக என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளோம்.
அவைத்தலைவர் கண்ணப்பனும், நானும் பேசியது தேச விரோத கருத்துகள் இல்லை என்பதை நிலைநாட்டி இங்கு வந்துள்ளோம். இலங்கை படுகொலையை தடுக்க இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து ஒரே நிலைபாட்டில் இருக்கிறோம்.
நாங்கள் புழல் சிறையில் இருந்த நாட்களில் எத்தனையோ தொண்டர்கள் எங்களை சந்திக்க சிறை வாசலில் காத்துக் கிடந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் வைகோ.
வைகோ கண்டெடுத்து தந்த வாட்ச்:
முன்னதாக நீதிமன்றத்தில் இருந்து வைகோ வெளியே வந்தபோது, கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்தது. அப்போது பாதையில் வாட்ச் ஒன்று கிடந்ததைப் பார்த்த வைகோ அதை எடுத்து அங்கு நின்ற கட்சி நிர்வாகிகளிடம் யாருடையது என்று விசாரிக்க சொன்னார். யாரும் அதற்கு சொந்தம் கொண்டாட வரவில்லை.
இதையடுத்து கட்சி அலுவலகம் புறப்பட்டுச் சென்றார்.
சிறிது நேரத்தில், அந்த வாட்சுக்கு சொந்தகாரரான கமாண்டோ படை வீரர் சிவகுமார் அங்கு வந்து அது தன்னுடையது என்று கூறி வைகோவிடமிருந்து பெற்றுச் சென்றார்.
சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும் வழக்கிலிருந்து வைகோவும் கண்ணப்பனும் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.