For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாலேகான் குண்டுவெடிப்பு: கைதான சாமியாரிடம் தீவிர விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

{image-dayanand pandey250_17112008.jpg tamil.oneindia.com}மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சாமியார் தயானந்த் பாண்டேவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் மும்பை அழைத்துச் சென்றுள்ளனர்.

மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்து அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பது அம்பலமானதைத் தொடர்ந்து பெண் சாமியார் பிரக்யா தாக்கூர், ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் புரோகித் உள்ளிட்டோர் வரிசையாக கைதாகி வருகின்றனர்.

சமீபத்தில் உ.பி மாநிலம் கான்பூரில் சாமியார் தயானந்த் பாண்டே என்கிற அமிர்தானந்த் சங்கராச்சாரியா கைது செய்யப்பட்டார். இவர் ஜம்முவில் ஆசிரமம் நடத்தி வருபவர்.

இவரிடம் விசாரணை நடத்துவதற்காக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், மும்பைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பாண்டேவுக்கு சுதாகர் திவிவேதி என்ற பெயரும் உண்டு. இவரிடம் விசாரணை நடத்தி விட்டு நாசிக் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே கைதாகியுள்ள லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித் மற்றும் பிற குற்றவாளிகளுடன் பாண்டேவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்களுடன் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஜம்முவில் நீண்ட காலமாக வசித்து வரும் பாண்டே, கடந்த வாரம்தான் கான்பூர் வந்தார். இவருக்கு பல அரசியல்வாதிகள் மற்றும் திரை நட்சத்திரங்களுடனும் தொடர்பு உள்ளதாம். இதுதொடர்பாக அவரது இணையதளத்தில் ஏகப்பட்ட புகைப்படங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான ஜக்மோகன் உள்ளிட்டோருடன் பாண்டே இருப்பது போன்ற படங்களும் உள்ளன.

சம்ஜூதா ரயில் வெடிப்பில் ராணுவ ஆர்டிஎஸ்?:

இதற்கிடையே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்து 68 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் புரோஹித்துக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர். புரோஹித்தான், குண்டுவெடிப்புக்குத் தேவையான வெடி மருந்தை சப்ளை செய்திருக்கலாம் என தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கூறியுள்ளனர்.

பகவான் என்ற பெயருடைய நபருக்கு புரோஹித் வெடிபொருட்களை சப்ளை செய்துள்ளார். பகவானுக்கும், குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

இதுகுறித்து நாசிக் கோர்ட்டில், போலீஸ் வழக்கறிஞர் அஜய் மிஸார் கூறுகையில், மாலாகேன் குண்டுவெடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகளில் ஒருவர், ஜம்மு காஷ்மீரிலிருந்து தான் 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருளை வாங்கியிருப்பதாக தன்னிடம் புரோஹித் கூறியதாக தெரிவித்துள்ளார்.

தியோலாலி ராணுவ முகாமில் புரோஹித் பணியில் இருந்தபோது, ஜம்மு காஷ்மீருக்கு அதிகாரப்பூர்வமான முறையில் சென்று, இந்த வெடிபொருளை வாங்கியிருக்கலாம். பின்னர் அதனை பகவானுக்குக் கொடுத்திருக்கலாம். அவர் அதை சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என நம்புகிறோம். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

பகவான் இந்த வழக்கில் மிகவும் முக்கியமானவர். அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதுகுறித்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றார்..

மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் மட்டுமல்லாமல், வேறு பல குண்டு வெடிப்புகளிலும் பிரக்யா தாக்கூர், தயானந்த பாண்டே, புரோஹித் ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் தான் வாங்கிய 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருளை ராணுவ கிட்டங்கியில் வைப்பதற்குப் பதிலாக ஜீலம் ஆற்றில் எரிந்து விட்டதாக புரோஹித் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பாக வெளியாகியுள்ள இந்த புதிய தகவலைத் தொடர்ந்து ஹரியானா போலீஸார், பாண்டேவிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X