For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைத் தமிழர்களுக்காக 'ஹர்த்தால்': சிபிஐ

By Staff
Google Oneindia Tamil News

Tha. Pandiyan
சென்னை: இலங்கையி்ல் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 25ம் தேதி தமிழகத்தில் ஹர்த்தால் நடத்த சிபிஐ தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முக்கிய கட்சிகள் எதுவும் கலந்து கொள்ளவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது.

சிபிஎம் வரவில்லை

இதில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ம.தி.மு.க. துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சி அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி, லட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொது செயலாளர் விஜய டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலவேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொள்ளுமாறு அனத்துக் கட்சிகளுக்கும் சிபிஐ அழைப்பு அனுப்பியிருந்தது. இருப்பினும் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.

இடதுசாரி கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில், இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதை தடுக்கக் கோரி தமிழகத்தில் பலர் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை கூட்டியது.

அந்த கூட்டத்தில், 'இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இலங்கை ராணுவத்திற்கு செய்யும் உதவியை மத்திய அரசு நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருந்து பொருட்களை அனுப்ப வேண்டும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குவதை நிறுத்த வேண்டும்.

இலங்கையில் போரை நிறுத்தி பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும்' போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை மத்திய அரசு, இலங்கை அரசிடம் வலியுறுத்தும் என்று எதிர்பார்த்தோம். இந்த நிலையில், போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று டெல்லிக்கு வந்து கூறுகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

இன்று காலை பத்திரிகையில் கூட, இலங்கையில் ராணுவ தாக்குதலில் 100 தமிழர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வந்துள்ளது. ஆனால் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது. இதுவரை பேசாத மத்திய அரசிடம் நாங்கள் ஒன்றுபட்ட குரலில் கேட்கிறோம். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும். இதுகுறித்து இந்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகைகளை முன் வைத்து நவம்பர் 25-ந் தேதி (செவ்வாய்கிழமை) தமிழகத்தில் முழு அடைப்பு நடத்துவது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது. பஸ், ரெயில் ஓடாது. பொதுமக்கள் அனைவரும் அன்றைய பயண திட்டத்தை மாற்றி கொள்ள வேண்டும். அதேநேரம் போராட்டத்தில் பங்குபெறுகிறவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது.

இந்தப் போராட்டத்தில் மக்கள் தாங்களாக முன்வந்து பெரும் திரளாக கலந்து கொண்டு, நமது உறுதியான செய்தியை மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் தெரிவிக்க வேண்டும்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள் கையில்தான் இந்தப் போராட்டம் வெற்றி பெறுவது உள்ளது. அனைத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் பஸ் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் செயலிழக்கும்.

அதேபோல வணிகர்களும், கடையடைப்பை முழுமையான அளவில் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இருப்பினும், வேலை பார்க்க வேண்டாம், கடைகளை அடைக்க வேண்டாம் என நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம். யாரும் பணி செய்வதையும் நாங்கள் தடுக்க மாட்டோம்.

கடும் போராட்டம்!

அப்படியும் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வலியுறுத்தவில்லை என்றால், அடுத்த கட்டமாக கடும் போராட்டத்தில் குதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இந்தக் கூட்டத்தை சில கட்சிகள் நிராகரித்திருக்கலாம். ஆனால், ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க நடத்தும் போராட்டத்தை நிராகரிக்க மாட்டார்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தக்கோரி குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரை கடைசி வேண்டுகோளாக கேட்கிறோம். இலங்கை பிரச்சினை தொடர்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திலும், அவர் நடத்திய மனிதச் சங்கிலியிலும் நாங்கள் கலந்து கொண்டோம். சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர் மானத்திற்கும் ஆதரவுதந்தோம்.

புலிகள் செய்வது போரல்ல; தற்காப்பு!

இன்று கூட இலங்கையில் போர் நிறுத்தம் அவசியம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். இதை அவர் மத்திய அரசிடம் வலியுறுத்தட்டும். நாங்களும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இலங்கையில் வாழும் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க நினைப்பவர்கள் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்.

இலங்கையில், விடுதலைப்புலிகள் ஏற்கனவே போர் நிறுத்தத்திற்கு தயார் என்று கூறிவிட்டனர். எனவே, அங்கு அவர்கள் போர் நடத்தவில்லை. தற்காப்புக்காகத்தான் ஆயுதம் எடுத்திருக்கிறார்கள் என்றார் பாண்டியன்.

கூட்டத்திற்கு பெரிய கட்சிகள் வராதது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகளும் கூட இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க மாட்டார்கள். எனவே அவர்கள் வராததை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றார் பாண்டியன்.

ஏற்கனவே அக்டோபர் 2ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்காக பட்டினிப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. தற்போது 2வது கட்டமாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டினிப் போராட்டத்தில் கலந்து கொண்ட சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக ஆகிய கட்சிகள் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X