For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் திமுக மா.செ. ஆன 'ஆள் கடத்தல்' ராஜா

By Staff
Google Oneindia Tamil News

Raja
ஈரோடு: ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த என்.கே.கே.பி. ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தமிழக கைத்தறித்துறை அமைச்சராக இருந்தவர் என்.கே.கே.பி.ராஜா. இவரும், இவரது ஆதரவாளர்கள் சிலரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகவும், அதன் உரிமையாளர்களை கடத்தி மிரட்டியதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது.

இந்தப் புகாரில் போதுமான முகாந்திரம் உள்ளதாக கூறிய முதலமைச்சர் கருணாநிதி அமைச்சர் என்.கே. கே.பி. ராஜாவை அப் பதவியில் இருந்து நீக்க ஆளுனருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவரது பதவி பறிக்கப்பட்டது.

இருப்பினும் ராஜா, கட்சியை விட்டு நீக்கப்படவில்லை. தொடர்ந்து ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கட்சித் தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மீண்டும் ராஜா போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமிழ்ச்செல்வன், இளஞ்செழியன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இருப்பினும் அவர்கள் இருவரும் நேற்று தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து ராஜா போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் நடந்த திருமண மண்டபப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா, திமுக மாவட்ட செயலாளர் பதவி என்பது அமைச்சர் பதவியை விட உயர்ந்தது. எனவே இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து பெருமைப்படுகிறேன்.

ஈரோட்டில் பாலம் அமைக்க தமிழக அரசு ரூ. 48 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார் என்றார்.

எம்.எல்.ஏ பதவியைப் பறிக்க கோரிக்கை

இதற்கிடையே, ராஜாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று, அவரால் பாதிக்கப்பட்ட பெருந்துறை தம்பதியினரான பழனிச்சாமி - மலர்விழியின் உறவினரான சுப்ரமணி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதில் என்.கே.கே.பி. ராஜா தனது அடியாட்கள் மூலம், எனது உறவினர்களான பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன் உள்ளிட்டோரைக் கடத்திச் சென்று தனது 2வது மனைவி உமா மகேஸ்வரிக்குச் சொந்தமான இடத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தார்.

மேலும், கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது உமா மகேஸ்வரி குறித்த உண்மையை அவர் மறைத்து விட்டார். இந்து திருமண சட்டத்தையும் அவர் மீறி உமா மகேஸ்வரியை கல்யாணம் செய்துள்ளார்.

எனவே அவரை எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தப் புகார் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X