For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியின் சுயநல கபட நாடகம்-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழலை மறைப்பதற்காகவே முதலமைச்சர் கருணாநிதி, இலங்கை தமிழர் பிரச்சனையை வைத்து தன்னலத்திற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டு்ள்ள அறிக்கை:

'சுயநலவாதி' என்றால் உடனடியாக தமிழக மக்களின் நினைவுக்கு வரும் பெயர் கருணாநிதி. அந்த அளவுக்கு தமிழர்களின் உரிமைகளை தாரைவார்த்து தன் குடும்ப உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டவர்.

அந்த வகையில், இலங்கைத் தமிழர்களுக்காக சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று கூட்டப்படும் என்று நேற்று முன் தினம் மாலை அவசர அவசரமாக அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.

இதுபோன்ற அவசரக் கூட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே இதில் ஏதோ தன்னலம் இருக்கும் என்று நான் நினைத்தேன். மேலும், இது சுயநலக் கூட்டமாக இருக்கும் என்பதால் தான் அதிமுக புறக்கணிக்கும் என்றும் நான் அறிவித்தேன்.

மேற்படி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பார்க்கும் போது, தன்னலத்திற்காக கருணாநிதி இது போன்ற கூட்டத்தை கூட்டியிருப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல் இந்தியா முழுவதும் பரவலாக அனைத்துக் கட்சியினராலும் பேசப்பட்டு வருகிறது.

இந்த ஊழலுக்கு காரணமானவர் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அ.ராசா என்றும், இந்த ஊழலின் மூலம் பயனடைவார்கள் கருணாநிதியும், அவரது குடும்பத்தாரும் என்றும் செய்திகள் வருவதோடு மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களாலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த மிகப் பெரிய ஊழலை மறைப்பதற்காகவே நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தற்போது மிகவும் சூடு பிடித்துள்ளதாகவும், வரும் மக்களவைத் தேர்தலில் இது மிகப் பெரிய அளவில் பூதாகாரமாக வெடிக்கும் என்பதை உணர்ந்த கருணாநிதி, டெல்லிக்கு சென்று பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியையும் சந்திப்பதற்காக ஒரு கூட்டத்தைக் கூட்டி,

அந்தக் கூட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்காக டிசம்பர் 4ம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்ற அளவில் தீர்மானத்தை நிறைவேற்றி ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட்டுள்ள முறை சந்தேகப்படக்கூடியது என்று அளவிலும், அரசியல் தொடர்பு இருக்கிறது என்ற அளவிலும் மத்திய கண்காணிப்பு ஆணையம் விமர்சித்துள்ளது.

இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், இதுகுறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு தானும், தன் குடும்ப உறுப்பினர்களும் அடைந்த பணத்தை பாதுகாத்துக் கொள்ள, கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் நலனுக்காக பல கோடி ரூபாயை சுரண்டிக் கொடுத்த மத்திய அமைச்சர் ராசாவை பாதுகாக்க டிசம்பர் 4ம் தேதி அன்று கருணாநிதி அரசு செலவில் டெல்லி செல்ல இருக்கிறார்.

இவர் மட்டும் செல்லாமல், அனைத்துக் கட்சி தலைவர்களையும் அரசு செலவில் அழைத்துச் செல்லப் போகிறார். கருணாநிதியின் சுய நலத்திற்காக அரசுப் பணம் வீணடிக்கப்படுகிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் மத்திய அரசை மிரட்டிப் பார்ப்பார் கருணாநிதி. மிரட்டலுக்கு பணியவில்லை என்றால் கொஞ்சுவார். இல்லையென்றால், தமிழர்களின் உரிமைகளை அடகு வைப்பதற்கு ஏதாவது இருந்தால் அதையும் செய்யத் தயாராக இருப்பார் கருணாநிதி.

எது எப்படியோ, இலங்கையில் நிச்சயமாக போர் நிறுத்தம் ஏற்படப் போவதில்லை. கருணாநிதியின் டெல்லி பயணத்தால் லாபம் அடையப் போகிறவர்கள் கருணாநிதியும், அவரது குடும்பத்தாரும் மட்டுமே, இது மிகவும் வெட்கக்கேடான செயல்.

முதலமைச்சர் கருணாநிதியின் சுய நலத்திற்கு, கபட நாடகத்திற்கு என்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X