For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னை ஒதுக்கவில்லை-கருணாநிதிக்கு நல்லகண்ணு பதில்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஜெயலலிதாவை சந்திக்கச் செல்லும்போது என்னை கட்சித் தலைவர்கள் ஒதுக்கிவிட்டனர் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தவறான செய்தி என அக் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சி ரொம்பவே அவசரப்படுகிறது. பரதனும் தா.பாண்டியனும் ஜெயலலிதாவை சந்திக்கச் சென்றபோது நல்லகண்ணுவைக் கூட ஒதுக்கிவிட்டுச் சென்றுவிட்டனர் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

இதற்கு விளக்கமளி்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும் தேசியக் குழு உறுபப்பினருமான நல்லகண்ணு

வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தது சம்பந்தமாக முதல்வர் கருணாநிதி தவறான செய்தியை தெரிவித்திருக்கிறார்.

கடந்த 19ம் தேதி மதிமுகவினர் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார்கள். அதை முடித்துவைப்பதற்காக நான் செல்வதென்றும், பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொது செயலாளர் சுதாகர் ரெட்டி, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகிய மூவரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், ஏதோ நான் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்திருப்பது தவறான கருத்து என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச் செயலாளரை எங்கள் கட்சியினர் அவசரமாக சந்தித்ததாகவும், அது லட்சியப் பயணம் அல்ல, வெறும் தேர்தல் பயணம் என்றும் முதல்வர் கருணாநிதி சொல்லியிருக்கிறார்.

தேர்தல் பேச்சுவார்த்தை நடத்துவதும், அணி சேர்வதும், குறிப்பிட்ட அரசியல் கொள்கை அடிப்படையில் தான் இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனையும், நாட்டின் இறையாண்மையை காப்பதிலும் தான் எங்களுக்கு முதல் அக்கறை.

பாஜக, காங்கிரஸ் மற்றும் அந்தக் கட்சிகளுடன் சேரும் கட்சிகள் நீங்கலாக மற்றக் கட்சிகளுடன் தேர்தல் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவெடுத்துள்ளோம்.

காங்கிரஸ் கூட்டில் இருந்து திமுக விலகத் தயாரில்லை. இதன் அடிப்படையில் தான் ஜெயலலிதா இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் சந்தித்தார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நல்லகண்ணு.

நல்லகண்ணு-தா.பாண்டியன் கைதாகி விடுதலை:

இதற்கிடையே இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்திய தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நல்லகண்னு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன் நடந்த இந்த மறியல் போராட்டத்துக்கு தா.பாண்டியன் தலைமை தாங்கினார். தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, மதிமுக துணைப் பொது செயலாளர் மல்லை சத்யா, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழர் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, பார்வர்டு பிளாக் கதிரவன் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தா.பாண்டியன் பேசுகையில்,

இலங்கையில் இன்னும் குண்டு போடுவது தொடர்ந்தால் இனி வேறு வழியில் போராட தயங்க மாட்டோம். இதுவரை மத்திய அரசு நம்முடைய குரலுக்கு எந்த வித உதவியும் புரிய மாட்டோம் என்று பதில் சொல்லாமல் உள்ளது.

இலங்கை அரசு குண்டு போடுவதை நிறுத்துவதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று தான் கேட்டோம். மத்திய அரசு சார்பில் இதுவரை யாரும் பேசவில்லை. 7 மத்திய மந்திரிகளை வைத்துள்ள திமுகவினாலும் மத்திய அரசை பதில் சொல்ல வைக்க முடியவில்லை என்றார்.

பின்னர் இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், இதனை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் உள்ள அரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மாஸ்கோ செல்லும் பாண்டியன்:

இதற்கிடையே ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கேற்க தா.பாண்டியன் நாளை மாஸ்கோ செல்கிறார்.

நவம்பர் 29 முதல் டிசம்பர் 2ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X