For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாக்குதலில் 'மாலேகான்' ஹேமந்த் வீர மரணம்

By Staff
Google Oneindia Tamil News

Hemant Karkare and Vijay Salaskar
மும்பை: மிக நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மிகத் திறமையாக விசாரித்து வந்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே (54), நேற்று மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்திற்குப் பலியாகி விட்டார்.

தாஜ்ம ஹால் ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகளை அடக்கும் முயற்சியில் போலீஸ் படை இறங்கியபோது, தலையில் ஹெல்மட், மார்பில் புல்லட் புரூப் ஜாக்கெட்டுடன் நேரடியாக களம் இறங்கினார் ஹேமந்த் கர்கரே.

அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மார்பில் 3 குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

கர்கரேவின் பெயர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானது. அனைவருமே முஸ்லீம் தீவிரவாதிகள்தான் இந்த சம்பவத்திற்குக் காரணம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, இதில் இந்து தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்ற பயங்கர உண்மையை வெளிக்கொணர்ந்தது கர்கரே தலைமையிலான ஏ.டி.எம். குழு.

அதன்பின்னர் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித் என அடுத்தடுத்து அதிரடியான கைதுகள் நடந்தன.

மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்களையும் ஏ.டி.எஸ். வெளியிட்டு வந்தது.

நேற்று காலையில் கூட பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூரை, போலீஸ் காவலில் அனுமதிக்க மும்பை கோர்ட் அனுமதிக்க மறுத்தது குறித்து கவலை தெரிவித்திருந்தார் கர்கரே.

பிரக்யா சிங்கை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் உண்மையான தகவல்கள் கிடைக்கும், விசாரணையும் விரைவாக நடக்கும் என அவர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று இரவே அவரது மூச்சை நிறுத்தி விட்டனர் தீவிரவாதிகள்.

1982ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர் கர்கரே. இந்திய அரசின் உளவுப் பிரிவான 'ரா' வில் முன்பு இருந்தவர். அப்போது ஆஸ்திரியாவில் 9 ஆண்டுகள் பணியாற்றினார்.

மிகவும் நேர்மையான, கட்டுப்பாடான, ஸ்ட்ரிக்ட்டான அதிகாரி என பெயரெடுத்தவர் கர்கரே.

இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அவர் தனது ரா பணியை முடித்து விட்டு மகாராஷ்டிரா திரும்பினார். உடனடியாக அவரை மகாராஷ்டிர அரசு ஏ.டி.எஸ். தலைவராக நியமித்தது. இதைத் தொடர்ந்தே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

தானேவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கர்கரேதான் தீவிரமாக செயல்பட்டு துப்பு துலக்கினார். அதேபோல பான்வேல், வாஷி குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் கர்கரே தலைமையிலான டீம்தான் துப்பு துலக்கியது.

ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்தான் கர்கரேவின் திறமை முழுமையாக வெளிப்பட்டது.

தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம், நாம் போலியான சாட்சியங்களை, ஆதாரங்களை உருவாக்கக் கூடாது. நமது கடமையை நாம் செய்வோம். நீதி்மன்றம் மற்றதை முடிவு செய்யட்டும் என்பாராம்.

கடைசியாக அவர் என்டிடிவிக்கு அவர் பேட்டியளித்தார். நேற்று அவர் அளித்த பேட்டியின்போது பிரக்யா சிங்கை துன்புறுத்தியதாக அத்வானி குற்றம் சாட்டுவது குறித்து கேட்டபோது, எங்கள் மீது புகார் கூறப்படும்போது அதைக் கேட்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். ஆனால், சாத்வி பிரக்யா சிங் எந்த வகையிலும் துன்புறுத்தப்படவில்லை.

சட்டவிதிப்படியே நாங்கள் செயல்படுகிறோம். கோர்ட் எப்போதெல்லாம் உத்தரவிடுகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் குற்றவாளிகளை முறைப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறோம். துன்புறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

கர்கரேவின் மரணம், மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக்கு நிச்சயம் மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.

விஜய் சலஸ்கர்

அதேபோல 75 கிரிமினல்களை சுட்டு வீழ்த்தி என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயரெடுத்தவரான விஜய் சலேஸ்கரும் நேற்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டார்.

மும்பையை நடுங்க வைத்த பல குற்றவாளிகளையும், கிரிமனல்களையும் போட்டுத் தள்ளியவர் சலேஸ்கர். சில காலம் அமைதியாக இருந்து வந்த இவரது காவல்துறை வாழ்க்கை சமீபத்தில் மீண்டும் சூடு பிடித்தது.

சமீபத்தில்தான் குற்றப் பிரிவு, கடத்தல் தடுப்புப் பிரிவில் இவர் பணியில் சேர்ந்தார்.

அதேபோல கூடுதல் காவல்துறை ஆணையரான அசோக் காம்தேவும் நேற்று உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிர காவல்துறையில் முக்கியமான அதிகாரிகளில் இவரும் ஒருவர்.

ஒரே நாளில் மூன்று முக்கியமான காவல்துறை அதிகாரிகளை பறி கொடுத்து விட்டு மகாராஷ்டிர அரசும், காவல்துறையும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X