For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அரசியல் நாகரீகத்தின் சின்னம் வி.பி.சிங்'-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் நாகரீகத்துக்கும், பண்பாட்டுக்கும், உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கியவர் வி.பி.சிங் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

வி.பி.சிங் மறைவு பற்றி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இந்திய திருநாட்டின் முன்னாள் பிரதமரும், தேசிய முன்னணியின் பிதாமகரும், சமூக நீதிக் காவலரும், சிறந்த கவிஞரும் ஓவியரும், எனது ஆழமான அன்புக்கும் பாசத்துக்கும் உரியவருமான வி.பி. சிங், இயற்கை எய்தினார் என்ற செய்தி இடியாக இதயத்துக்குள் இறங்கி என்னை நிலைகுலையச் செய்து விட்டது.

அரசியல் நாகரீகத்துக்கும், பண்பாட்டுக்கும், உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கிய அவரது பிரிவு, இந்திய நாட்டுக்கு ஈடு செய்திட முடியாத பேரிழப்பாகும்.

தமிழகத்தை பொருத்தவரை, வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது வழங்கிய கொடைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. காவிரி நடுவர் மன்றம் அமைத்திட அவர் உறுதுணையாக இருந்ததும்; எத்தனையோ எதிர்ப்புகளுக்கிடையே பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்திட முன்வந்ததும்;

மாநிலங்களிடையே மன்றம் அமைத்ததும்; சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமானதளத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்து அதனை விழா மேடையிலேயே வி.பி. சிங் ஏற்று அறிவித்ததும் என்றைக்கும் மறக்க முடியாதவைகளாகும்.

திமுக மூன்றாவது முறையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, 27.1.1989 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாபெரும் விழாவில் வி.பி.சிங் கலந்துகொண்டு சிறப்பித்ததும்; அன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில்,

''இன்று காலையில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று, கலைஞர் கருணாநிதி முதல்வராக பதவியேற்றிருக்கிறார். எந்த வள்ளுவர் கோட்டத்தை அவர் உருவாக்கினாரோ; அந்தக் கோட்டத்துக்குள்ளேயே வந்து பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார். இந்த வெற்றி இந்தியாவுக்கே வழிகாட்டுகிற வெற்றி'' என்று வாழ்த்தியதும்;

வி.பி. சிங் பிரதமராக பதவிப் பொறுப்பை ஏற்றதற்குப் பின்னர் எனது அழைப்பின் பேரில் சென்னைக்கு 1990 பிப்ரவரித் திங்களில் வந்தபோது, தமது நிகழ்ச்சி நிரலையே மாற்றிக் கொண்டு நேரடியாக எனது வீட்டிற்கு வந்து என்னை மகிழ்வித்துப் பெருமைப்படுத்தியதும்; எனது வாழ்நாளில் நெஞ்சத்தை விட்டு நீங்காத நிகழ்ச்சிகளாகும்.

அவர் மறைந்தாலும் அவரது மேதைமைத் தன்மையும், உயர்தனிச் சிறப்பும், சீரிய செயல்பாடுகளும் சரித்திரத்தில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், எண்ணிலடங்கா விசுவாசிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

அவரது மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவையொட்டி மத்திய அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநில அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்க அந்த மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த வி.பி.சிங்குக்கு சீதாகுமாரி என்ற மனைவியும், அஜய்சிங், அபய்சிங் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

அவரது உடல் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் இன்று தகனம் செய்யப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X