For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடற்படையின் தோல்வி-ஆண்டனி பொறுப்பேற்பாரா?

By Staff
Google Oneindia Tamil News

AK Antony
டெல்லி: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உளவுப் பிரிவினருக்கு இணையாக தோல்வியடைந்துள்ள இன்னொரு அமைப்பு கடல் படையும் கடலோரக் காவல் படையும்.

கடல் பகுதி மூலமாக நாட்டுக்கு வரும் சவால்கள், அச்சுறுத்தல்களை ஒழித்துக் கட்டுவது தான் இந்தப் படைகளின் பணி. இதில் கடல் படை போர் போன்ற சூழலில் தான் நேரில் களமிறங்கும். அதே நேரத்தில் கடலோரக் காவல் படைக்கு முக்கிய வேலையே தீவிரவாதிகள், தேச விரோதிகள், கடத்தல் கும்பல்களை தடுப்பது தான்.

இந்தப் படைக்கு ஆயுதம் தாங்கிய கப்பல்கள் தவிர ஹெலிகாப்டர்கள், ஹோவர்கிராப்ட்கள் எனப்படும் தரையிலும் நீரிலும் பயணிக்கும் வாகனங்கள் எல்லாம் உண்டு. இவர்களுக்கு தனியான உளவுப் பிரிவுகளும் உண்டு. ஆனால், இத்தனை இருந்தும் கூடவே ஐபி, ராவின் எச்சரிக்கை கிடைத்தும் கூட தீவிரவாதிகளைத் தடுப்பதில் கோட்டை விட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய வெளிநாட்டு உளவுப் பிரிவு ரா , லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதக் கும்பலின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டபோது மும்பைக்கு ஆயுதங்கள் கடத்தல் குறித்து செய்தி கிடைத்தது.

இதைத் தொடர்ந்து ஐபி மேற்கொண்ட சில ரகசிய நடவடிக்கைகளில், தீவிரவாதிகளே கடல் மூலம் வரலாம் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ராவும், ஐபியும் இந்தத் தகவலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், கடற்படை, கடலோரக் காவல் படை, மும்பை போலீசாரின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் ஆகியோருக்குத் தெரிவித்தனர்.

இந்தத் தகவலை வைத்து மும்பை தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே மேற்கொண்ட சில ரகசிய நடவடிக்கைகளில், தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டலுக்கு தீவிரவாதிகள் குறி வைக்கலாம் என்பது வரை தகவல் கிடைத்தது.

இதையடுத்து தாஜ் ஹோட்டல் மற்றும் ஓபராய் ஹோட்டல் நிர்வாகங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் தகவல் தந்தார் ஹேமந்த்.

இப்போது அவர் திவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், தங்களுக்கு ஹேமந்திடம் இருந்து எச்சரிக்கை வந்தது உண்மை தான் தாஜ் ஹோட்டலின் அதிபர் ரத்தன் டாடாவும், ஓபராய் ஹோட்டல் நிர்வாகங்களும் கூறியுள்ளன.

இந்த முன்னெச்சரிக்கையை வைத்து தாஜ் நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வாகனங்கள் உள்ளே நுழையும் இடத்திலும் சில தடுப்புகளை ஏற்படுத்தி சோதனை நடத்திய பிறகே அனுமதித்துள்ளனர். அதே போல வாகன நிறுத்தும் இடமும் மாற்றப்பட்டது.

ஆனால், ஓபராய் ஹோட்டல் நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. தாஜ் ஹோட்டல் நிர்வாகம் எடுத்த நடவடிக்கை கூட தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு இல்லை. இதில் அவர்களை குறை கூறவும் முடியாது. ஏகே 47, கிரனைட் குண்டுடன் உள்ளே நடந்து வந்து சுட்டுள்ளனர் தீவிரவாதிகள். இந்த ஹோட்டல்களி் ல் ஆயுதம் தாங்கிய காவலர்கள் எல்லாம் இல்லை.

ஆனால், ஐபியும் ராவும் கொடுத்த இந்த தகவல்களை வைத்து மும்பை போலீசார் செயல்பட்ட அளவுக்குக் கூட கடற்படையும் கடலோரக் காவல் படையும் செயல்படவில்லை என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.

அவர்கள் எந்த அளவுக்கு செயல்படவில்லை என்றால், குபேர் என்ற படகை தீவிரவாதிகள் குஜராத்தில் கடத்திவிட்டனர் என்ற தகவலை ரா தந்த பிறகும் கூட அவர்கள் உடனே அதைத் தேடும் பணியில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தப் படகில் தான் தீவிரவாதிகள் இந்திய கடல் எல்லையைக் கடந்தனர் என்பது குறிப்பிடத்தத்கது.

கடற் படை மற்றும் கடலோரக் காவல் படையின் இந்த மெத்தனத்துக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு எந்த அளவுக்கு இந்த தாக்குதலை தடுக்காததில் பொறுப்புண்டோ அதே அளவுக்கு ஆண்டனிக்கும் உண்டு.

இதை காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சில மூத்த தலைவர்கள் சுட்டிக் காட்டியபோது, உடனே ஆண்டனி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ராஜினாமா செய்யத் தயார் என்று கூறியுள்ளார்.

ஆனால், சொன்னதோடு சரி. ராஜினாமா கடிதம் எதையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல தீவிரவாதிகள் படகுகளில் வருவார்கள் எ தகவல் தந்ததாகக் கூறும் ரா மற்றும் ஐபியின் கருத்துக்களை கடற்படை மறுத்துள்ளது. எங்களுக்கு இப்படிப்பட்ட தகவலே வரவில்லை என்கின்றனர்.

இந்த விஷயத்தில் ரா, ஐபி, கடற்படை, கடலோரக் காவல் படை, மும்பை போலீசார் ஆகியோரை ஒருங்கிணைத்திருக்க வேண்டிய கடமை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு உண்டு. இதற்காகத் தான் அவர் அமர்ந்திருக்கும் அந்தப் பதவியே உருவாக்கப்பட்டது.

ஆனால், அவர் அதைச் செய்யத் தவறியிருக்கிறார்.

அவர் ராஜினாமா செய்துவிட்டார், பிரதமர் தான் அவரை பதவியில் நீடிக்க வைத்திருக்கிறார் என்று ஒரு பக்கம் செய்திகள் வந்தாலும் அவர் ராஜினாமாவே செய்யவில்லை என்றும் இன்னொரு தகவல் வருகிறது.

இதற்கிடையே புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ப.சிதம்பரத்தை நாராயணன் இன்று சந்தித்துப் பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X