For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி-எம்.கே.நாராயணன் 'பரம ரகசிய' சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தை சமீபத்தில் தாக்கிய புயல் மற்றும் கடும் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க ரூ. 1,000 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்தார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரக் கோரி பிரதமரை வலியுறுத்த அனைத்துக் கட்சிக் குழுவுடன் டெல்லி சென்ற முதல்வர் இந்தக் கோரிக்கையையும் வைத்தார்.

பிரதமருடான சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த மழைக்கு 177 பேர் பலியாகிவிட்டனர். ஐந்து லட்சம் குடிசைகள் சிதைந்து விட்டன.25 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நான்காயிரம் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எட்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 11,000 கி.மீ. நீள சாலைகள் சேதமடைந்துவிட்டன. இவற்றை உடனே சீர் செய்தாக வேண்டும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நிவாரண நிதியாக ரூ. 1,000 கோடியை வழங்கும்படி பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

வாட் வரி விதிப்பு முறையை கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இதில் மாநிலத்தின் பங்கீட்டு தொகையை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து ஏற்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் அந்தப் பங்கு வழங்கப்படவில்லை.

தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசும் உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக இரண்டு நதிகளை மட்டும் இணைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கும் நிதி வழங்க வேண்டும்.

தமிழகத்திற்கான 5 ரயில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, அதன் செலவில் பாதித் தொகையை மாநில அரசு ஏற்க வேண்டுமென்று ரயில்வே அமைச்சகம் கேட்கிறது. இதை அளிக்க மாநில அரசால் இயலாது. இதையும் மத்திய அரசு தான் ஏற்க வேண்டும். இந்த கோரிக்கைகளை, பிரதமருடனான சந்திப்பின் போது அவரது கவனத்துக்கு வைத்தேன் என்றார் கருணாநிதி.

சோனியாவுடன் சந்திப்பு:

பிரதமரை சந்தித்த பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் அவரது இல்லத்தில் கருண்நிதி சந்தித்தார்.

கருணாநிதியை சந்தித்த சிதம்பரம்:

பின்னர் முதல்வர் கருணாநிதியை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சந்தித்துப் பேசினார். ஆனால், இந்த சந்திப்புக்குப் பின் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை சிதம்பரம் தவிர்த்து விட்டார்.

எம்.கே.நாராயணன் 'பரம ரகசிய' சந்திப்பு!:

இதையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் முதல்வரை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இலங்கை நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

ஆனால், இந்த சந்தி்ப்பு குறித்து கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு 'அது ரகசியம் பரம ரகசியம்' என்று பதிலளித்தார்.

மின்சாரம்-ஜெய்ராம் ரமேஷ் சந்திப்பு:

அதே போல மத்திய மின்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேசும், முதல்வரை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு 2,000 மெகாவாட் மின்சாரம் தருமாறு முதல்வர் கோரினார்.

மத்திய குழு வருகை:

இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதிகளை பார்வையிட, இரு தினங்களில் மத்திய குழு தமிழகம் வருகிறது.

இத் தகவலை சிதம்பரம் தனனிடம் தெரிவித்தாக முதல்வர் கருணாநிதியே நிருபர்களிடம் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X