For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயிகள் திடீர் வழக்கு - நானோவுக்கு மீண்டும் நெருக்கடி

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்: சிங்கூரை விட்டு குஜராத்துக்கு வந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, வந்த இடத்தில் புதுப் பிரச்சினை வெடித்திருக்கிறது.

சிங்கூரில் மமதா பானர்ஜியின் ரூபத்தில் வெடித்த பிரச்சினையால் விரக்தியாகிப் போன டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நானோ தொழிற்சாலையை இழுத்து மூடி விட்டு குஜராத்துக்கு இடம் பெயர்ந்துள்ளது.

தலைநகர் அகமதாபாத்துக்கு அருகில் உள்ள சனந்த் என்ற இடத்தில் புதிய நானோ ஆலை அமையவுள்ளது.

இந்த நிலையி்ல் இந்தப் பகுதியில் இடம் கொடுத்த விவசாயிகள், கூடுதல் இழப்பீட்டுத் தொகை கேட்டு குஜராத் அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் சனந்த் கிராமத்தில் 1100 ஏக்கர் நிலத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நரேந்திர மோடி அரசு கொடுத்தது.

அந்த சமயத்தில், அந்த நிலம், அரசுக்குச் சொந்தமானது, முன்பே கையகப்படுத்தப்பட்ட நிலம் என மோடி தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த நிலத்தை தங்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி விட்டது மோடி அரசு. அதற்குரிய இழப்பீட்டுத் தொகையையும் மோடி அரசு தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தற்போது குஜராத் உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் தரப்பில் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்துள்ளது.

மனுதாரர்களா சார்பில் வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் யாதின் ஓஸா கூறுகையில், சந்தேகத்திற்கு இடமின்றி இந்த நிலம் விவசாயிகளுக்குச் சொந்தமானது. அவற்றை 99 ஆண்டு குத்தகையின் பேரில் அரசுக்கு விவசாயிகள் வழங்கியுள்ளனர். அந்த குத்தகை காலம் தற்போது முடிந்து விட்டது.

இதை நிரூபிப்பதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றை கோர்ட்டில் நிரூபிப்போம். நாங்கள் நானோ ஆலைத் திட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால் விவசாயிகளுக்கு சதுர அடிக்கு ரூ. 950 என்ற இழப்பீட்டுத் தொகையை குஜராத் அரசும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் வழங்க வேண்டும். அதுவரை திட்டத்தை தொடங்க விட மாட்டோம் என்றார் அவர்.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இது மாநில அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். நிலத்தை நாங்களாக கையகப்படுத்தவில்லை. அரசுதான் கையகப்படுத்தியது. எனவே அரசுதான் இதில் பதிலளிக்க முடியும் என்று டாடா மோட்டார்ஸ் கூறுகிறது.

இந்தப் புதிய வழக்கால் நானோ ஆலைத் திட்டம் மேலும் தாமதமாகும் அபாயம் எழுந்துள்ளது.

சனந்த் விவசாயிகள், சிங்கூர் விவசாயிகளைப் பின்பற்றுவார்களா, நானோ தப்புமா, சமாளிப்பாரா மோடி என்பது அடுத்தடுத்த நாட்களில் தெளிவாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X