For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் - மனு தாக்கல் செய்தார்

By Staff
Google Oneindia Tamil News

Muthuramalingam with Jayalalitha
மதுரை: திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளராக முத்துராமலிங்கம் அறிவிக்கப்பட்டார். உடனடியாக அவர் வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். தா.கிருட்டிணன் கொலை வழக்கில் இவர் மட்டுமே கடைசி வரை அரசுத் தரப்பு சாட்சியாக சாட்சியம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமங்கலம் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் திமுக சார்பில் லதா அதியமான், தேமுதிக சார்பில் தனபாண்டியன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய கட்சியான அதிமுக தனது வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் வேட்பாளர் பெயரை அறிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,அதிமுக ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி 9.1.2009 அன்று நடைபெறவிருக்கும் திருமங்கலம் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுகவின் வேட்பாளராக முத்துராமலிங்கம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பன்னீர் தலைமையில் தேர்தல் குழு

திருமங்கலம் இடைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழுத் தலைவராக ஓ.பன்னீர் செல்வம், தேர்தல் பணிக்குழு துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கம், மதுரை புறநகர் மாவட்ட அதிமுக துணை செயலாளராக இருக்கிறார்.

47 வயதாகும் முத்துராமலிங்கம் கடந்த 1996 ஆம் ஆண்டு இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அவர் அதிமுகவில் சேர்ந்தார்.

தா.கி. கொலை வழக்கில் முக்கிய சாட்சி

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாக இருந்தார். இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தவர் இவர்தான். பின்னர் வழக்கு சித்தூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

அங்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அங்கு சென்று சாட்சியம் அளித்தார்.

சொந்த ஊர் கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சொந்த ஊராகக் கொண்ட முத்துராமலிங்கம் தற்போது மதுரை வில்லாபுரத்தில் வசித்து வருகிறார். மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

வேட்பாளர் அறிவிக்கப்பட்ட முத்துராமலிங்கம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் இன்று மனுத்ததாக்கல் செய்தார்.

பிற்பகல் 1 மணியளவில் அவர் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி சீதாராமனிடம் வழங்கினார்.

முன்னதாக சந்தைப்பேட்டையிலிருந்து தேவர் மஹால் வரை ஊர்வலமாக அவர் அழைத்து வரப்பட்டார். இந்த ஊர்வலத்தில் தலைமை நிலைய நிர்வாகிகள் கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன், மதுசூதனன், தளவாய் சுந்தரம், பொன்னையன், நைனார் நாகேந்திரன், வளர்மதி, முத்துச்சாமி, சுலோச்சனா சம்பத் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் தவிர மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் வந்தனர்.

தனபாண்டியனும் வேட்பு மனு தாக்கல்

முன்னதாக தேமுதிக வேட்பாளர் தனபாண்டியன் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியான, நில நிர்வாக சீர்திருத்தத்துறை துணை ஆணையர் ராமச்சந்திரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மாற்று வேட் பாளராக புறநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.பி.ராஜா மனுத் தாக்கல் செய்தார்.

கட்சியின் பொருளாளர் சுந்தரராஜன், பொடா நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

திங்கள்கிழமை லதா மனுதாக்கல்?

திமுக வேட்பாளர் லதா அதியமான் வரும் திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X