For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓட்டுக்கு ரூ. 2,000 தர சதி- விஜயகாந்த்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் மக்களை ஓட்டுக்கு ரூ.2,000 வரை கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் தனபாண்டியனை விருதுநகர் சாலையில் உள்ள சமத்துவபுரம் அருகே உள்ள ஒரு ஆலை வளாகத்தில் வைத்து விஜய்காந்த் அறிமுகப்படுத்தினார்.

அப்போது விஜயகாந்த் பேசுகையில்.

இந்த தேர்தல் நமக்கு மானப் பிரச்சனை. காசு, பணம் உள்ள கட்சிகள் இங்கு நிற்கின்றன. இந்த இடைத்தேர்தல் இல்லாவிட்டாலும் எந்த தேர்தல் வந்தாலும் நான் அதனை சந்திப்பேன். எனது மனைவியும் பிரசாரத்திற்கு வருவார்.

என்னை தேர்தல் பிரசாரத்திற்கு வரவிடாமல் தடுப்பதற்கான வேலைகள் இனி நடக்கலாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது. நான் விலை போகவும் மாட்டேன்.

இதுவரை நடந்த தேர்தல்களில் அய்யா', அம்மா'வுக்கு ஆதரவு அளித்தீர்கள். எனக்கு ஒருமுறை ஆதரவு தாருங்கள். நான் காசை கொடுத்து ஓட்டு கேட்க மாட்டேன்.

மக்களை ஏமாற்றி அவர்களது வறுமையை வைத்து ரூ.2,000 வரை கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.

தேமுதிக போட்டியிடுவதால் தான் உங்களுக்கு ரூ.2,000 கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இல்லாவிட்டால் 100 ரூபாய் தான் தருவார்கள். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திருமங்கலம் மக்களை நம்பி வந்துள்ளேன். இந்த இடைத்தேர்தலில் நீங்கள் என்னை ஏமாற்ற மாட்டீர்கள் என நம்புகிறேன்.

இந்தத் தேர்தலில் எங்களுக்கு முரசு சின்னம் நிச்சயம் கிடைக்கும் என்றார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய்காந்த்:

இதற்கிடையே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சின்னஞ்சிறு குழந்தைகள் ஒன்றையொன்று நேசிப்பதைப்போல அன்பு காட்ட வேண்டும் என்கிறது பைபிள். ஏசுபிரான் குழந்தை வடிவில் தோன்றிய நாளே கிறிஸ்துமஸ் நாளாகும்.

இன்னாளில் சாண்டா கிளாஸ் என்ற கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு பரிசு வழங்கி மகிழ்விக்கிறார். ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டவும் ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் வழங்கி இன்ப வாழ்வு வாழவும் அடிகோலுவதே கிறிஸ்துமஸ் பண்டிகையின் நோக்கமாகும்.

இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்பது நமது தாரக மந்திரம். இவ்வுலகம் ஏழைகளுக்கே உரியது என்பது ஏசுநாதரின் வாக்கு. ஆகவே இன்னாளில் வறுமையை அகற்ற நம்மால் இயன்ற நற்பணிகளைச் செய்வோம்.

வரும் 25ம் தேதி தேமுதிக சார்பில் காரைக்குடியில் தூய சகாய அன்னை ஆலயத்தில் (செக்காலை பங்க்) காலை 8 மணியளவில் 1000 பேருக்கு கேக் வழங்கியும், காலை 10 மணியளவில் சாக்கோட்டை ஒன்றியம், அரியக்குடி, வளன் நகரிலுள்ள குழந்தை ஏசு ஆலயத்தில் 1,000 பேருக்கு பிரியாணி வழங்கியும் எனது தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும்.

இதேபோன்று நம்முடைய இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் மாவட்ட அளவில் ஆங்காங்கே உள்ள தேவாலயங்களுக்குச் சென்று கேக் வழங்கியும், உணவு வழங்கியும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எல்லா மக்களும் இன்புற்று வாழ வேண்டுமென்று குறிப்பாக ஏழைகள் வாழ்க்கையில் உயர்வு பெற வேண்டுமென்று பாடுபட்ட ஏசுநாதர் பிறந்த நாளாகிய இந்த நன்னாளில் இந்த பண்டிகையை இதர மதத்தைச் சார்ந்தவர்களும் கிறிஸ்துவர்களோடு சேர்ந்து கொண்டாடுவதன் மூலம் சமுதாயத்தில் அமைதியையும், ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் காண முடியுமென்று நம்புகிறேன்.

இன்று இந்திய நாட்டில் ஜாதி, மத, பூசல்களால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை என்பது மட்டுமல்ல நடமாடக்கூட முடியவில்லை. ஆகவே, இந் நன்னாளில் அனைவரும் ஒன்று இணைந்து இவ் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு என்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X