For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடந்தது என்ன?-ப.சிதம்பரம் அளித்த 'திக் திக்' அறிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Chidambaram
டெல்லி: மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் கார்கரே பலியான விவகாரத்தில் சதித்திட்டம் ஏதும் இல்லை என்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் சாமியார் பிரக்யாவை கைது செய்து விசாரித்து வந்தவர் மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்புப் படை தலைவர் ஹேமந்த் கார்கரே. இதனால் அவரை சங் பரிவார் அமைப்புகள் விமர்சித்து வந்தன.

இவர் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானார். இதையடுத்து அவரது மரணத்தில் சதித் திட்டம் இருப்பதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் ஏ.ஆர்.அந்துலே சந்தேகம் தெரிவித்தார்.

இதற்கு பாஜக, சிவசேனா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அந்துலேவை பதவி நீக்கக் கோரியும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன.

இதையடுத்து கார்கரே மரணம் குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால், அதை எதிர்த்து அத்வானி தலைமையில் பாஜக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் ப.சிதம்பரம் அறிக்கை வாசிக்க ஆரம்பித்தார். இதையடுத்து மீண்டும் அவைக்குள் வந்த பாஜக எம்பிக்கள் கோஷம் எழுப்ப ஆரம்பித்தனர்.

கோஷத்தையும் மீறி சிதம்பரம் அறிக்கையின் பாதிப் பகுதியை வாசித்தார். மிச்சதை வாசிக்க முடியாத அளவுக்கு கூச்சல் அதிகரித்ததால் அதை சபாநாயகரிடம் சிதம்பரம் தாக்கல் செய்தார். இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.

சிதம்பரம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மரணத்துக்கு முன்பு, கார்கரே விசாரித்து வந்த ஒரு தீவிரவாத வழக்கின் (மாலேகான்) விசாரணை குறித்து (பாஜக உள்ளிட்டவர்களால்) கேள்விகள் எழுப்பப்பட்டன. மரணத்துக்கு பிறகு, அவர் கொல்லப்பட்ட சூழ்நிலை குறித்து (அமைச்சர் அந்துலேவால்) கேள்விகள் எழுப்பப்படுகின்றன. என்னை பொறுத்தவரை, இந்த இரு கேள்விகளுமே தவறானவை, மிகவும் துரதிருஷ்டவசமானவை.

கார்கரே சுட்டு கொல்லப்பட்டது பற்றி மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில், ஹேமந்த் கார்கரே மரணத்தில் சதித்திட்டம் இல்லை என்ற முடிவுக்கு விசாரணை அதிகாரிகள் வந்துள்ளனர்.

கார்கரேவும், அவருடன் பலியான 2 அதிகாரிகள் மற்றும் 3 போலீசார் ஒரே குவாலிஸ் காரில் சென்றது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. அவர்கள் தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானது, முற்றிலும் தற்செயலானது.

சம்பவம் நடந்த நவம்பர் 26ம் தேதி இரவு 9.45 மணிக்கு மும்பை தாதரில் (கிழக்கு) உள்ள தனது வீட்டுக்கு ஹேமந்த் கார்கரே வந்தார். சற்று நேரத்தில், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் தொண்ட்வால்கரிடம் இருந்து கார்கரேவுக்கு போனில் தகவல் வந்தது.

உடனே கார்கரே, ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 போலீசார் ஆகியோருடன் போலேரா ஜீப்பில் ரயில் நிலையத்துக்கு விரைந்தார். ஆனால் வழியில், போலீசார் தடுப்புகளை வைத்திருந்தனர். எனவே, கார்கரேவும், அவரது படையினரும் ஜீப்பில் இருந்து இறங்கி ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றனர்.

அங்கு சென்றவுடன், ரயில்வே கூடுதல் டி.ஜி.பி. ரகுவன்ஷி, சில அதிகாரிகள் கார்கரேவை சந்தித்தனர். ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திவிட்டு, 2 தீவிரவாதிகள் அஞ்சுமன் லேன் வழியாக தப்பிச் சென்று விட்டதாகக் கூறினர்.

உடனே, கார்கரே தனது படையினருடன், தீவிரவாதிகள் தப்பிச்சென்ற திசையில் விரைந்தார். அவர்கள் நேராக காமா மருத்துவமனையின் பின்பக்க நுழைவாயிலை அடைந்தனர்.

மருத்துவமனைக்குள் துப்பாக்கி சூடு சத்தமும், கிரனைடுகள் வெடிக்கும் சத்தமும் கேட்டகே கார்கரேவும், அவரது படையினரும் எதிர் தாக்குதலுக்கு தயாராயினர்.

அந்த நேரத்தில் இணை கமிஷ்னர் அசோக் காம்தே, விஜய் சலஸ்கர் ஆகியோர் காமா மருத்துவமனையை அடைந்து கார்கரேவை சந்தித்து ஆலோசித்தனர்.

அப்போது கூடுதல் கமிஷனர் சதானந்த் ததேவின் ஒயர்லெஸ் ஆபரேட்டர் தெலேகர், குண்டுக் காயத்துடன் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார். சண்டையில் சதானந்த் ததே காயமடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அப்போது, காமா மருத்துவமனையின் மாடியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. தொடர்ந்து செயின்ட் சேவியர் கல்லூரி இருக்கும் திசையில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

உடனே, கார்கரே தனது படையினரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, அசோக் காம்தே, சலஸ்கர் மற்றும் 4 போலீசாருடன் ஒரே குவாலிஸ் ஜீப்பில் செயின்ட் சேவியர் கல்லூரி நோக்கி விரைந்தார்.

ஒரு ஏ.டி.எம். மையத்தை கடந்து அந்த ஜீப் சென்றபோது, ரோட்டின் மறுபக்கத்தில் புதருக்குள் இருந்து 2 தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து, குவாலிஸ் காரில் இருந்த ஒரு போலீஸ்காரர் திருப்பிச் சுட்டார். இதில் ஒரு தீவிரவாதியின் கையில் காயம் ஏற்பட்டது. அவன்தான் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் அமீர் கஸாவ்.

இந்த துப்பாக்கி சண்டையில் கார்கரே உள்பட 6 போலீசார் படுகாயமடைந்தனர். போலீஸ்காரர் அருண் ஜாதவ் மட்டும் காயமின்றி உயிர் தப்பினார்.

இதையடுத்து தீவிரவாதிகள் இருவரும் கார்கரே உள்ளிட்ட 3 போலீஸ் அதிகாரிகளையும் காரில் இருந்து கீழே இழுத்து போட்டுவிட்டு குவாலிஸ் காரை கடத்திச் சென்றனர். பின் இருக்கையில் இருந்த போலீஸ்காரர்கள் பலியாகி விட்டதாக நினைத்து, அவர்களுடன் சேர்த்து காரை ஓட்டிச் சென்றனர்.

பின்னால் காயமடைந்து கிடந்த 3 போலீசாருக்கு அடியில் போலீஸ்காரர் அருண் ஜாதவ் இருந்ததால், அவர் தீவிரவாதிகளின் கண்ணில் படவில்லை.

ப்ரீ பிரஸ் ஜர்னல் மார்க் என்ற இடத்தில் குவாலிஸ் காரை விட்டுவிட்டு, ஒரு ஸ்கேடா காரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

அதற்குள் குவாலிஸ் காரில் இருந்த 3 போலீசார் இறந்து விட்டனர். தீவிரவாதிகள் நடு ரோட்டில் இழுத்துப் போட்ட கார்கரே உள்ளிட்ட 3 போலீஸ் அதிகாரிகளும் இறந்து விட்டனர். போலீஸ்காரர் அருண் ஜாதவ் மட்டும் உயிர் தப்பி, நடந்த சம்பவங்கள் பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

மராட்டிய மாநில முதன்மை செயலாளரின் கார் டிரைவர் மாருதி மாதவராவ், தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடுவதையும், காரை கடத்திச் செல்வதையும், அருகில் இருந்து பார்த்துள்ளார். அவரும், போலீஸ்காரர் அருண் ஜாதவும், தீவிரவாதி அஜ்மலும் அளித்த தகவல்கள் மூலம் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்துள்ளன. எனவே, போலீஸ் அதிகாரி கார்கரே மரணத்தில் சதித் திட்டம் எதுவுமே இல்லை.

இந்த நேரத்தில், கார்கரேவும், அவரது சகாக்களும் காட்டிய துணிச்சலுக்கு நாட்டு மக்களும், எம்பிக்களும் வீர வணக்கம் செலுத்த வேண்டும். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், குறிப்பாக பிள்ளைகளுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

அந்துலே பிரச்சனை முடிந்தது-பிரதமர்:

இந் நிலையில் நாடாளுன்றத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங்,
இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் விரிவான விளக்கம் அளித்து விட்டதால், கர்கரே மரணம் குறித்து மேற்கொண்டு விசாரணை எதுவும் தேவையில்லை.

கர்கரே மரணம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் சந்தேகம் எழுப்பாமல் அமைச்சர் அந்துலே வெளியில் பேசியது தவறு. தவறு செய்வது மனித இயல்பு என்றார்.

இதனால் அந்துலேவை மத்திய அரசு நீக்காது என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X