For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கைதான அதிகாரி வீட்டில் ரூ. 20 கோடி அரசு செக்குகள்!

By Staff
Google Oneindia Tamil News

கரூர்: லஞ்சம் வாங்கி கைதான கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி வீட்டை சோதனையிட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸார், அங்கிருந்து ரூ. 20 கோடி மதிப்புடைய அரசு காசோலைகளைப் பறிமுதல் செய்தனர்.

இதுதவிர 200 பவுன் நகைகள், ஏராளமான சொத்துக்கள் குறித்த ஆவணங்களும் சிக்கியுள்ளன.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் லஞ்சம் வாங்குவோரைப் பிடிக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த ஒரே வாரத்தில் ஏராளமான போலீஸார் பிடிபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்தவர் ஜவஹர் சாந்தகுமார். இவர் செல்வகுமார் என்ற விவசாயியிடம் துப்பாக்கி உரிமத்தை புதுப்பிக்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

அவரிடம் பங்குத்தொகை பெற்ற தலைமை எழுத்தர் ஆனந்தசேகர் என்ற ஊழியரும் கைது செய்யப்பட்டார்.

மாவட்ட வருவாய் அதிகாரியையும், தலைமை எழுத்தரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட வருவாய் அதிகாரியின் வீட்டில் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது பல லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் பல இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்த பத்திரங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.

இதுதவிர, சாந்தகுமார் வீட்டில் ரூ.19 கோடியே 88 லட்சத்துக்கான செக்குகள் காசோலைகளை வைத்திருந்ததைப் பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள். அவை அனைத்தும் அரசுக்குச் சொந்தமான காசோலைகள் ஆகும்.

பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை:

அனைத்தும் கரூர், கோவை ரோட்டில் சாலையை அகலப்படுத்த நிலம் கையகப்படுத்தப்பட்ட 460 பயனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டு தொகை அளிக்க அரசால் ஒதுக்கப்பட்ட செக்குகள்.

இந்த செக்குகளை கைப்பற்றிய போலீசார் அதனை கலெக்டர் உமா மகேஸ்வரியிடம் ஒப்படைத்து உரிய பயனாளிகளுக்கு கொடுக்க கேட்டுக்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்படவிருந்த காசோலைகளை சாந்தகுமார் பதுக்கி வைத்திருந்தது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை மோசடியாக இந்தப் பணத்தை அபகரிக்க அவர் திட்டமிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சாந்தகுமாருக்கு சென்னை அண்ணாநகரில் சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தி ரூ.2.14 லட்சம் ரொக்கப் பணம், 200 பவுன் தங்க நகைகளும் மற்றும் பல்வேறு வங்கிகளின் கணக்கு புத்தகங்களையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட ஜவஹர் சாந்தகுமாரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆகும். கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4ம் தேதி முதல் கரூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

ரிடையர்ட் எஸ்.ஐயை அலைய விட்ட சூப்பிரண்டு கைது:

இதற்கிடையே, ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு பென்ஷன் வழங்க 3 ஆண்டுகளாக இழுத்தடித்து கொடுமை செய்த சூப்பிரண்டு, ரூ.2,000 லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் சென்னையில் குடும்பத்தோடு வசிக்கிறார். சென்னையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.

கடந்த 2003ம் ஆண்டு எழும்பூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது மனநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு இவர் பணிக்கு வரவில்லை. 2 ஆண்டுகளாக எந்த தகவலும் இல்லாமல் பணிக்கு வராததால் இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

2005ம் ஆண்டு உடல்நிலை சரியாகி மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி சண்முகம் அரசுக்கு கோரிக்கை வைத்தார். இவருடைய மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அப்போதைய கமிஷனர் உத்தரவிட்டார்.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இவருடைய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கமிஷனர் அலுவலக செக்ஷன் ஊழியர்கள் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இறுதியில் டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

டி.ஜி.பி. தலையீட்டின்பேரில் சண்முகத்தை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் ஓய்வு வயதை கடந்து விட்டதால் அவருக்கு பணியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டது. பென்ஷன் வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், எந்தவித தகவலும் சொல்லாமல் பணிக்கு வராமல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் சண்முகத்தின் பென்ஷன் தொகையில் மாதம் ரூ.500யை அபராதத் தொகை போல் 2 ஆண்டுகள் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து சண்முகம் மீண்டும் மனு கொடுத்தார்.

ஏற்கனவே 3 ஆண்டுகள் அலையோ அலை என்று அலைந்து நிவாரணம் பெற்ற சண்முகம் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அபராதத் தொகையில்லாமல் முழு பென்ஷன் தொகை பெற வேண்டுமானால் ரூ.2,000 லஞ்சம் தர வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பி.ஆர். செக்ஷனில் (தண்டனை பிரிவு) சூப்பிரண்டாக பணியாற்றிய அசோக்குமார் (48) கூறினார்.

இதை கேட்டு சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே 3 ஆண்டுகளாக அலைந்து விட்டேன். இப்போதாவது விடிவுகாலம் பிறக்கும் என்று சந்தோஷமாக இருக்கிறேன். அதையும் கெடுப்பதுபோல பணம் கேட்கிறீர்களே?

ஏற்கனவே, வருமானம் இல்லாமல் 3 மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். தயவு செய்து பணம் வாங்காமல் எனக்கு நல்லது செய்யுங்கள் என்று சண்முகம் கெஞ்சினார்.

ஆனால் அசோக்குமார் ரூ.2,000 கொடுத்தால்தான் உன் மனுவை தொடுவேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டாராம். இதையடுத்து சண்முகம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

நேற்று மாலை சண்முகத்தை லஞ்சப் பணத்தோடு வரும்படி அசோக்குமார் கூறியிருந்தார். பணம் வாங்கும்போது அவரை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறுவேடத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.

ஆனால் 2 முறை வருமாறு கூறி விட்டு அசோக் குமார் வரவில்லை. ஆனால் 3 வதுமுறையாக கூறி விட்டு வந்தார். அப்போது அலுவலகத்திற்கு வெளியில் வைத்து ரூ.2,000 பணத்தை வாங்கும்போது அசோக்குமாரை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே, போலீஸ் நிலையங்களில் லஞ்சம் வாங்கிய 3 இன்ஸ்பெக்டர்களும், 5 சப்-இன்ஸ்பெக்டர்களும் சென்னையில் கைதாகியுள்ளனர்.

இந்தநிலையில், கமிஷனர் அலுவலகத்திலேயே லஞ்சம் வாங்கி சூப்பிரண்டு கைதாகியிருப்பது காவல்துறையை இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் கமிஷனர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய சூப்பிரண்டு ஒருவர் கைதானது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இதேபோல அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினசரி ரெய்டு நடந்தால் தேவலாம் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். இதனால் அப்பாவிகள் பலர் லஞ்சம் என்ற பெயரில் பணத்தைக் கொட்டி அழும் அவலம் கொஞ்சமாவது குறையும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X