For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரசிடென்சி கல்லூரி விழாவில் மோதல்-பஸ் உடைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் பேரவைத் தொடக்க விழாவின்போது இரு பிரிவு மாணவர்களுக்கிடையே மோதல் மூண்டது. இதில் சாலையில் போய்க் கொண்டிருந்த பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மாநில (பிரசிடென்சி) கல்லூரியில் கடந்த செப்டம்பர் மாதம் மாணவர் பேரவை தேர்தல் நடந்தது. இதில் பிரசாத் என்பவர் தலைவராகவும், சிலம்பரசன் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பேரவையின் நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.

பேரவை தொடக்க விழா நேற்று காலை 10.00 மணிக்கு தொடங்கி பகல் 12.00 வரை நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு எம்.பி. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் மாலை 3.00 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சி உச்சக்கட்டத்தில் இருக்கும்போது மாலை 4.00 மணி அளவில் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. யாரோ மாணவர் ஒருவர் பீஸை பிடுங்கி, மின்சார இணைப்பை துண்டித்து விட்டதாக மாணவர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது.

இதையொட்டி மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து அடிதடி மோதலில் இறங்கினர். இதனால் அரங்கே அமளி துமளியாக மாறியது. இதையடுத்து இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

கல்லூரி முதல்வரும், ஆசிரியர்களும் தலையிட்டு மாணவர்களை அமைதியாக கலைந்து போகச் சொன்னார்கள். உடனே மாணவர்கள் ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்தனர்.

கல்லூரி வளாகத்தில், மாணவர்களிடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் கணேசமூர்த்தி, உதவி கமிஷனர் சோமசுந்தரம் ஆகியோர் போலீஸ் படையுடன் கல்லூரிக்கு விரைந்தனர்.

போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் திரண்டு வெளியே சாலைக்கு வந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த 27-பி மாநகர பஸ் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி அலறியடித்து ஓடினார்கள்.

சுமார் ஒரு மணி நேரம் மாணவர்கள் மோதலால் அந்தப் பகுதியே கலவர பூமியா காணப்பட்டது.

கல்லூரியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

முனிவேலு, கண்ணன், ஆனந்தன் ஆகிய மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சட்டக் கல்லூரியில் நடந்த மாணவர்கள் கலவரத்தால் பெரும் பிரச்சினை ஏற்பட்டதுபோல இந்த சம்பவத்திலும் பிரச்சினை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X