For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூவம் திருந்துகிற வரை எனக்கு நிம்மதி இல்லை-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கூவம் திருந்துகிற வரையில் எனக்குத் திருப்தி இருக்காது. கூவத்திலே தெளிந்த நீரோடைபோல தண்ணீர் செல்கிற வரையில், அங்கே நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் குதித்து, நீந்தி விளையாடுவதைப் பார்க்கிற வரையில், எனக்கு நிச்சயமாக நிம்மதி இருக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை தியாகராயநகர் கோபதி நாராயண சாலை (ஜி.என்.செட்டி ரோடு)-திருமலை சாலை சந்திப்பில் ரூ.161.5 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதை திறந்து வைத்து அவர் பேசுகையில்,

சென்னை மாநகரத்தைக் காண்போர் அனைவருமே கவலையோடு தெரிவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு செய்தி போக்குவரத்து நெரிசல். என்ன, காலையிலே பத்து மணிக்கு வருவதாகச் சொன்னீர்கள்; 12 மணி வரையிலே வரவில்லையே' என்று கேட்டால், என்ன செய்ய, போக்குவரத்தில் நெரிசல் அப்படி' என்று சமாதானம் சொல்லுகின்ற நிலை இன்னமும் சென்னை மாநகரத்திலே இருப்பதை நம்மால் காண முடிகிறது.

அந்த நெரிசலைப் போக்குவதற்கு வழி என்ன என்று சிந்திக்கின்ற ஒரு ஆட்சி, சிந்திக்கின்ற ஒரு மாநகராட்சி மன்றம் சென்னையிலே இருக்கின்ற காரணத்தால், அந்த ஆட்சியை நடத்துகின்ற திமுக இருக்கின்ற காரணத்தால், அந்த இயக்கத்திற்குத் துணையாக காங்கிரஸ் போன்ற இயக்கங்கள் விளங்குகிற காரணத்தால்,

அவர்களுடைய துணையோடும், நேர்மையான, நாணயமான, ஊக்கம் மிகுந்த, உற்சாகம் மிகுந்த அதிகாரிகளுடைய துணையாலும், நாம் பாலங்களை, மேம்பாலங்களை அதிகமாக உருவாக்கினால், போக்குவரத்து நெரிசலை ஓரளவிற்குச் சமாளிக்கமுடியும் என்ற முடிவிற்கு வந்தோம்.

அந்த முடிவின்படிதான் இன்றைக்கு இதுவரையிலே இங்கே எடுத்துச் சொல்லப்பட்டதே 76 பாலங்கள் என்றும், அவற்றிலே சிறிய பாலங்களுடைய கணக்கு 26 என்றும், மேம்பாலங்களுடைய கணக்கு 10க்கும் மேற்பட்டவை என்றும் எடுத்துக்காட்டப்பட்டது.

அந்தப் பாலங்கள் எல்லாம், கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு உருவானவை என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

அப்படி உருவான பாலங்களைப் பாராட்டுவதற்குப் பதிலாக, இந்தப் பாலங்களெல்லாம் ஊழல் நிறைந்தவை என்று சொல்லி, பாலங்களைக் கட்டிமுடித்த மறுநாளே அதைக் கட்டுவதற்கு முற்பட்ட ஸ்டாலினையும், அதற்குத் துணைபுரிந்த அரசின் தலைவராக அன்றைக்கு முதல்வராக இருந்த என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும் கைது செய்தனர்.

மீண்டும் நாம் மக்களுடைய ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், ஸ்டாலின் அப்பொழுது மேயராக இருந்தபோது கட்டிய பாலங்களைவிட இன்னும் அதிகமாகப் பாலங்களை சென்னை மாநகரத்திலே கட்டுகிற நிலைமை ஏற்பட்டு, அந்தப் பாலங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

இன்று காலை ஸ்டாலின் ஒரு காலண்டர் தயாரித்து, அதில் 10, 15 படங்கள் நிறைந்த ஒரு தொகுப்பைக் காட்டினார். அந்தத் தொகுப்பில் என்னை மிக மிகக் கவர்ந்த ஒரு படம்; ஒரு கோபுரம், அந்தக் கோபுரத்தைச் சுற்றி மதில்சுவர். அந்த மதில் சுவருக்கு அப்பால் ஒரு அருமையான பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட சாலை. இது எந்த ஊர்' என்று கேட்டேன். இது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்' என்று ஸ்டாலின் சொன்னார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தை முன்பு சுற்றும்போது, சாலையெல்லாம் வெறும் மண் சாலையாக அல்லவா இருக்கும். இப்போது வந்துள்ள நம்முடைய மாநகராட்சி மேயருடைய பணி இது' என்று சொன்னார். கண்ணாடியைப் போல இருக்கிறது, கோவிலைச் சுற்றியுள்ள அந்தச் சாலை.

நம்முடைய கொள்கைகள் வேறு. இருந்தாலும்கூட, நம்முடைய நகராட்சி நிர்வாகத்திலே ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு பகுதியும், தூய்மையாக இருக்கவேண்டும், எடுப்பாக இருக்கவேண்டும், சுற்றுலாப் பயணிகளைச் சுண்டியிழுக்க வேண்டும். அப்படிப்பட்ட முறையில் நம்முடைய நகரங்களும், நம்முடைய சாலைகளும், நம்முடைய ஊர்களும், நம்முடைய ஊர் நிர்வாகமும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் பணியாற்றி வருகிறோம்.

கிராமங்கள் நகரங்களாகவும், நகரங்கள் மாநகரங்களாகவும் மாறினால்தான், நாம் ஆட்சி நடத்துகிறோம் என்பதற்குப் பொருள். இல்லாவிட்டால், எல்லோரையும் போல நாமும் வந்தோம் அவர்களைப் போல நாமும் முடிந்தவரையிலே ஆட்சி நடத்தினோம், அதிகாரிகள் சொன்னதைக் கேட்டோம். நாம் நினைத்து எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை,

மக்களுக்கென்று எந்த காரியத்தையும் செய்யவில்லை; மாற்றார் பார்த்துப் பாராட்டுகின்ற அளவிற்கு, மற்ற நாட்டுக்காரர்கள் பார்த்து வியக்கின்ற அளவிற்கு, எந்தக் காரியத்தையும் செய்யவில்லையென்றால், நாம் பதவிக்கு வருவதற்கும், ஏற்கனவே இருந்தவர்கள் பதவியிலே இருந்ததற்கும், எந்தவித வேறுபாடும் கிடையாது.

நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்; நம்முடைய சென்னை ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தது? பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தது? சாலைகள் ஒழுங்காக இருந்ததுண்டா?. இன்றைக்கு எவ்வளவு நேர்த்தியாக சென்னை மாறியிருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் இந்த மாற்றம் போதாது.

இன்னும் நிறைய மாற்றங்கள் தேவை. அதைத்தான் ஸ்டாலின் பேசும்போது குறிப்பிட்டார். இன்னமும் என் தந்தைக்குப் பூரண திருப்தியில்லை என்று சொன்னார், உண்மைதான்.

கூவம் திருந்துகிற வரையில் எனக்குத் திருப்தி இருக்காது. கூவத்திலே தெளிந்த நீரோடைபோல, பளிங்கு போல தண்ணீர் செல்கிற வரையில், அங்கே நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் குதித்து, நீந்தி விளையாடுவதைப் பார்க்கிற வரையில், எனக்கு நிச்சயமாக நிம்மதி இருக்காது, மகிழ்ச்சி இருக்காது.

ஏனென்றால், நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; நான் பார்த்ததில்லை. நம்முடைய தந்தையர் காலத்திலே சொல்லியிருக்கிறார்கள்.- பச்சையப்ப முதலியார் கூவத்திற்கு வந்து குளித்துவிட்டுச் செல்வார் என்று. ஆனால், நீங்கள் பச்சையப்பர்களாக ஆகாமுடியாவிட்டாலும், தமிழின்பால், அறிவின்பால், கல்வியின்பால், இச்சையப்பர்களாக ஆகவேண்டும்.

இன்றையதினம் இங்கே திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்தப் பாலத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தேன். அருகில் அண்ணா மேம்பாலம் இருக்கிறது. கலைவாணர் என்.எஸ்.கேவினுடைய சிலையை இங்கே அமைத்தவர் அண்ணா.

அந்த நினைவாகவும், என் தலைமையிலே நடைபெற்ற அந்த விழாவில், அண்ணாவின் வாழ்க்கையில் கடைசி நிகழ்ச்சியாக கலைவாணருடைய சிலையை இந்தச் சாலையிலேதான் திறந்து வைத்தார் என்பதற்காகவும், அந்தச் சாலையை இணைக்கின்ற இந்தப் பாலத்திற்கு "கலைவாணர் மேம்பாலம்'' என்ற பெயரைச் சூட்டுகிறேன் என்றார் கருணாநிதி.

கூவத்தை தூய்மைக்குவோம்-ஸ்டாலின்:

முன்னதாகப் பேசிய அமைச்சர் ஸ்டாலின்,

நான் சென்னை மேயராக பணியாற்றிய காலத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க திட்டங்கள் தீட்டப்பட்டன. பல பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால் கடந்த ஆட்சியில் சென்னையில் ஒரு பாலம் கூட கட்டப்படவில்லை.

14 மேம்பாலங்களை ஒரேநேரத்தில் கட்டினால் மக்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதற்காக 9 பாலங்கள் குறித்த காலத்திற்குள் கட்டி முடித்தோம். இன்னும் சொல்லப் போனால் மதிப்பீட்டு தொகையை விட குறைத்து மாநகராட்சிக்கு ரூ.30 கோடி மிச்சப்படுத்தி கொடுத்தோம்.

திட்டமிடப்பட்ட பெரம்பூர் மேம்பாலத்தை தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கட்டவில்லை. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் அதை கட்டி முடித்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. இந் நிலையில், 2006ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக கட்டிட நிபுணர்களுடன் கலந்து பேசினோம். தற்போது பாலம் கட்டும் வேலைகள் நடந்து வருகிறது.

கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்தை எங்கள் ஆட்சியிலேயே செய்து முடிப்போம். இந்த திட்டத்திற்கு உலக வங்கியை மட்டுமன்றி சத்திய சாய் அறக்கட்டளையும் அணுக உள்ளோம். இதற்காக நானும், பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் விரைவில் சத்தியசாய் அறக்கட்டளை நிர்வாகிகளை சந்திக்க உள்ளோம். திமுக ஆட்சி காலத்திலேயே கூவம் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X