For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ1000 கோடி..'தம்பி வாசன், நினைவூட்டுங்கள்'-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும், அந்தத் திட்டத்துக்கான ரூ.1000 கோடி முழுமையாக வந்து சேரவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டியில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் தொடக்கவிழா நடந்தது.

இதில் மத்திய கப்பல், சாலை போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு,
மத்திய திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

இந்த பல்கலைக்கழகத்தை இங்கே அமைப்பதற்கு பாடுபட்டு அதிலே வெற்றி பெற்ற தம்பி டி.ஆர்.பாலு, ஏதோ கடாரத்தை வெற்றி பெற்ற போது, ராஜேந்திர சோழன் மேஜையை அடித்திருந்தால், எப்படி அடித்திருப்பாரோ, அதைப்போல இங்கே மேஜையை அடித்த அடி என்னையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த அளவிற்கு அவருக்கு ஒரு மகிழ்ச்சி.

பாலு கப்பல் போக்குவரத்துத்துறையை தான் பெற வேண்டும் என்று அவர் விரும்பிய போதும், பாலு அந்த துறையை வகிக்க வேண்டும் என்று நான் மத்தியிலே உள்ளவர்களிடம் வலியுறுத்திய போதும், ஏதோ ஒரு துறையை போராடி பெற்றுவிட்டார் கருணாநிதி என்று இங்கே உள்ளவர்கள் பேசினார்கள்.

இப்போது தெரிகிறதா? நாங்கள் இந்த துறையை போராடி பெற்ற காரணம்?. இந்தியாவிலே முதல் முறையாக தமிழ்நாட்டிலே இன்றைக்கு உருவாகிறது இந்த கடல்சார் பல்கலைக்கழகம் என்பது இப்போதாவது புரிகிறதா?

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டுமென நாம் எழுப்பிய குரலுக்கு மதிப்பளித்த ஒரே தலைவி, இந்திய நாட்டின் தலைவி சோனியாகாந்தி தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. நம்முடைய கோரிக்கைக்கு மதிப்பளித்தவர் பிரதமர் மன்மோகன் சிங்தான் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

அந்த திட்டத்துக்குக் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற தொல்லைகள் என்னென்ன என்பதையும் மறந்து விடக்கூடாது. அந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று இன்றைக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடுகிறார்கள் யார்?.
பேரறிஞர் அண்ணாவின் பெயரை தங்கள் கட்சிக்கு வைத்து கொண்டிருப்பவர்கள். அண்ணா யார்? அவர் தான் சேது சமுத்திர திட்டத்திற்காக, நெய்வேலி நிலக்கரிக்காக, சேலம் இரும்பாலை திட்டத்திற்காக எழுச்சி நாள்' கொண்டாடியவர்.

அந்த எழுச்சி நாளிலே அண்ணா பேசினார், சேது சமுத்திர திட்டம் தமிழகத்தை செழிப்பாக்க கூடிய திட்டம், அந்தத் திட்டம் என்னுடைய கனவு, அந்தக் கனவை தமிழகத்திலே உருவாகும் ஆட்சியாளர்கள் நனவாக்க வேண்டும், நனவாக்குவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

ஆட்சியாளர்கள், அண்ணா பெயரை வைத்துக் கொண்டார்கள், வைத்துக்கொண்டு அந்த திட்டத்தை நிறைவேற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்று சொன்னார்கள், ஆனால் இப்போது அவர்களே, அந்த திட்டம் கூடாது, அது ராமருக்கு விரோதம் என்கிறார்கள்.

சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் அந்தப் பாலத்தை நம்முடைய தம்பி பாலுவின் முயற்சியால் கட்டி முடித்தால், அது ராமருக்கு விரோதமாம்?

பாலுவிற்கும், ராமருக்கும் இடையே அவ்வளவு பெரிய சண்டையா? அதை கட்டுவதால் ராமருக்கு விரோதம் என்று சொல்கிறார்களே? அந்த பாலத்தை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு, யுகங்களுக்கு முன்பு, ராமர் அணில்களின் உதவியோடு கட்டினார் என்கிறார்கள்.

அணில்கள் எவ்வளவு திறமைசாலிகள்? எவ்வளவு பலசாலிகள்?. ராமேஸ்வரத்திலே இருந்து இலங்கை வரையிலே ஒரு பாலம் கட்டக் கூடிய அளவிற்கு அக்ரோணி கணக்கிலே அணில்கள் குவிந்து, அவை தங்களின் பலத்தை எல்லாம் காட்டி, உருவாக்கிய பாலமாம் அந்த பாலம். அதை இடித்து விட்டு நாம் புது பாலம் கட்டுகிறோம் என்று சொல்கிறார்கள்.

அல்ல, அல்ல. நாம் கட்டுகின்ற பாலம் அது அல்ல. இலங்கையை சுற்றிக்கொண்டு, நடத்துகின்ற பயணத்தை சுருக்குகின்ற, குறுகிய அளவிலே நம்முடைய பயணம் அமைவதற்காக நடத்தப்படுகிற திட்டம் சேது சமுத்திர திட்டம். அந்தத் திட்டமும் நிறைவேற வேண்டும். அதற்காக நாம் இன்றைக்கு நீதிமன்றத்திலே வாதாடி கொண்டிருக்கின்றோம்.

நீதிமன்றத்தினுடைய முடிவிற்கு பிறகு மக்கள் மன்றத்திலே வாதாடக் கூடிய நிலைமை வருமேயானால், அதற்காகவும் நாம் நம்மை ஒப்படைத்து கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நம்முடைய தம்பி வாசன் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிலேயிருந்து என்னென்ன நம்மைகள் கிடைத்திருக்கின்றன என்பதை அவர் புள்ளி விவரத்துறைக்கு அமைச்சர் என்ற காரணத்தால், புள்ளி விவரத்தோடு எடுத்துக் காட்டினார்.

ஆனால், சென்னை மாநகர குடிநீர்ப் பிரச்சனை தீர ரூ. 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல் அளித்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. நான் தம்பி வாசனுக்கு சொல்லிக் கொள்கிறேன். தயவு செய்து இதுபற்றி மத்தியிலே உள்ளவர்களுக்கு நினைவூட்டுங்கள். அந்த ரூ. 1,000 கோடி முழுவதுமாக இன்னும் வந்து சேரவில்லை. வந்து சேர்ந்தால், மாமல்லபுரம் சாலையிலே அந்த திட்டம் இரண்டாவது திட்டமாக தொடங்கும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X