குப்தாவை முற்றுகையிட்ட மக்கள்- திமுக புகார்: 'திரித்து கூறுகிறார்கள்'!
திருமங்கலம்: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் அடையாள அட்டைகளுடன் இன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருமங்கலம் இடைத் தேர்தலில் நரேஷ் குப்தா அதிமுகவிற்கு சாதகமாக நடந்து கொள்வதாக டெல்லியில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
கோபமான நரேஷ் குப்தா:
இந் நிலையில் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் இன்று காலை நரேஷ் குப்தா நிருபர்களை சந்தித்தார்.
அவரிடம் திமுகவின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டதற்கு பதிலளித்த நகுப்தா,
திமுகவின் குற்றச்சாட்டுகள் பற்றி நான் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே விளக்கம் தருவேன். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நானே நீதிபதியாக இருந்து செயல்பட முடியாது.
என்னைப் பற்றி நீங்கள் (நிருபர்கள்) முடிவு செய்யுங்கள். நான் ஒருவேளை தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியிருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்றார் கோபமாக.
'தலைவர்' என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை...:
திமுகவின் சார்பில் உங்களிடம் புகார் அளிக்க வந்தபோது, இந்த புகார்களை உங்கள் தலைவரிடம் போய் கூறுங்கள் என்று நீங்கள் கூறினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த குப்தா,
தலைவர் என்ற வார்த்தையை நான் பயன் படுத்தவில்லை. அவர்கள் திரித்து கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
இரு கட்சியினரும் என்னிடம் மாறிமாறி புகார் கொடுத்திருக்கிறார்கள். பல்வேறு சம்பவங்களை அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அது பற்றி போலீஸார் விசாரிப்பார்கள்.
துணை ராணுவம் வருகிறது...:
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 8 கம்பெனி மத்திய துணை ராணுவப் படையினர் வரும் 4 அல்லது 5ம் தேதி திருமங்கலத்துக்கு வரவுள்ளனர். இது தொடர்பாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருமங்கலத்தில் புதிய காவல் அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர். அவர்களின் செயல்பாடுகள் பற்றி இனிமேல்தான் தெரியவரும். கூடிய வரை தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதை மட்டுமே இப்போதைக்கு நான் சொல்ல முடியும் என்றார்.
குப்தாவை முற்றுகையிட்ட மக்கள்:
இவ்வாறு குப்தா பேட்டிளித்துக் கொண்டிருந்தபோதே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் தாலுகா அலுவலகத்தின் வெளியே குவிந்து தேர்தலை ஆணையத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் ஏன் இடம் பெறவில்லை என அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
கைகளில் தேர்தல் ஆணையம் த்த வாக்காளர் அடையாள அட்டைகளுடன் வந்த அவர்கள் அங்கேயே சுற்றிச் சுற்றி வந்ததால் நரேஷ் குப்தா பேட்டியை முடித்துக் கொண்டு வெளியே போக முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அலுவலகத்திலேயே அவர் முடங்கினார்.
திருமங்கலம் நகர், பொன்னமங்கலம், மறவன்குளம், கப்பலூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சுமார் 14,000 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு தேர்தல் ஆணையம் குழப்பம் செய்துள்ளது.