For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அவர்களை' நம்பாதீர், ஓடிவிடுவார்கள்..ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

திருமங்கலம்: தேர்தல் நேரத்தில் மட்டுமே சிலர் மக்களை சந்தித்துவிட்டு ஓடி விடுவார்கள். அவர்களை நம்ப வேண்டாம். திமுக எந்த நேரத்திலும் மக்களை சந்திக்கும் இயக்கம் என்று அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

திருமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து அமைச்சர் ஸ்டாலின் நேற்று முதல் தனது 5 நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

பெருங்குடியில் தனது பிரசாரத்தை தொடங்கிய லதா அதியமானுடன், திறந்த வேனில் பல்வேறு இடங்களில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த உறுதிமொழிகள் எந்த அளவு தொடர்ந்து நிறைவேற்றப்படுகிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சொன்னதை செய்வோம் என்று மட்டுமல்ல. சொல்லாததையும் செய்து வரும் ஆட்சிதான் திமுக ஆட்சி. 90 சதவீதம், 95 சதவீதம், ஏன் 100 சதவீதம் கூட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

தேர்தல் நேரத்தில் சொல்லாததையும் இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.

கடந்த தேர்தலின்போது கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்குவோம் என்றார் கலைஞர். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா 2 ரூபாய்க்கு எப்படி அரிசி வழங்க முடியும்? முடியவே முடியாது, அதை நம்பாதீர்கள் என்றார்.

ஆனால் அதை நம்பி மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினார்கள். முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற உடன் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்க கையெழுத்து போட்டார். தேர்தலின்போது விவசாய பெருங்குடி மக்களின் கடன்களை தள்ளுபடி செய்வேன் என்றார். அந்த உத்தரவும் 2-வது கையெழுத்தாக போடப்பட்டது.

சொன்னது ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என்று. ஆனால் இப்போது வழங்கிக் கொண்டிருப்பது 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு. 2 ரூபாய்க்கே போட முடியாது என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் இப்போது 1 ரூபாய்க்கே கருணாநிதி வழங்குகிறார்.

இலவச கலர் டி.வி. வழங்கப்படும் என்று அறிவித்தார் கருணாநிதி. அது எந்த அளவுக்கு நிறைவேற்றப்படுகிறது என்று உங்களுக்கே தெரியும். பல கிராமங்களில் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் எங்கள் பகுதிக்கு இன்னும் வர வில்லையே என்று சிலர் நினைக்கலாம். இது யாரோ கொடுத்த வாக்குறுதி அல்ல. முதல்வர் கருணாநிதி கொடுத்த வாக்குறுதி.

மொத்தமாக கொள்முதல் செய்ய முடியாததால் முதல் கட்டமாக 35,000 கலர் டி.விக்கள் வாங்கி வழங்கப்பட்டன. அடுத்து 24 லட்சம் டிவிக்கள், 3வது கட்டமாக 33 லட்சம் டிவிக்கள் வழங்கப்பட்டன. இப்போது 4-வது கட்டமாக 40 லட்சம் கலர் டி.விக்கள் வாங்கி குறித்த காலத்திற்குள்ளேயே வழங்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

இத்தகைய ஆட்சியில்தான் லதா அதியமான் என்ற, நீங்கள் அறிந்த ஒரு பெண்மணியை வேட்பாளராக கருணாநிதி தேர்ந்தெடுத்துள்ளார்.

ஒரு கட்சியின் எம்எல்ஏ இறந்து விட்டார் என்றால், அந்த கட்சியைச் சேர்ந்தவர்தான் அவர்கள் கூட்டணி சார்பில் இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும். அது தான் தர்மம், மறபு.

ஆனால் இங்கே அந்த கட்சி போட்டியிட வில்லை. அதிமுக அதனை தட்டிப்பறித்துக் கொண்டுவிட்டது. இதிலிருந்தே அவர்களது கூட்டணி ஜனநாயகம் என்ன என்பது உங்களுக்கு புரியும்.

இந்தத் தேர்தல் ஆட்சிக்காக நடைபெறும் தேர்தல் அல்ல. ஆட்சிக்கு பக்க பலமாக இருக்கிற, ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கப் போகும் தேர்தல்.
இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றுகிற ஆட்சிக்கு நீங்கள் துணையாக இருக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அதுதான் திருமங்கலம் இடைத்தேர்தல்.

இங்கு கூடியுள்ள கூட்டத்தைப் பார்க்கும் போது இந்த தொகுதியில் உதயசூரியன் பிரகாசமாக உதிக்கும் என்பது தெளிவாகிறது. அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்.

விலைவாசி உயர்வு இந்தியா முழுவதுமே உள்ளது. ஆனால் தமிழகத்தில் அதை கட்டுப்படுத்த மானிய விலையில் மளிகை பொருட்கள் திட்டத்தை முதல்வர் அறிவித்தார். அதன்படி 10 வகையான மளிகை பொருட்கள் ரூ.50-க்கு வழங்கப்படுகிறது.

திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. பின்னர் வந்த ஜெயலலிதா அந்த திட்டத்தை நிறுத்தினார். மீண்டும் வந்த திமுக அந்த திட்டத்தை மீண்டும் தொடங்கி உதவி நிதியையும் உயர்த்தி வழங்குகியது.

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீண்டும் அதனை நிறுத்தினார். இப்போது மீண்டும் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த திட்டத்தை மீண்டும் தொடங்கி உதவித் தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்குகிறார்.

நாடாராளுமன்றத் தேர்தலில் திமுக அணியின் வெற்றிக்கு இந்த இடைத் தேர்தல் அடித்தளமாக அமைய வேண்டும். இதன்மூலம் கருணாநிதி சாதனைகளும் மக்கள் நலத்திட்டங்களும் மேலும் விரிவடையும்.

தேர்தல் நேரத்தில் மட்டுமே சிலர் மக்களை சந்தித்துவிட்டு ஓடி விடுவார்கள். அவர்களை நம்ப கூடாது. திமுக எந்த நேரத்திலும் மக்களை சந்திக்கும் இயக்கம்.

ஆகவே அன்போடு கேட்கிறேன், பாசத்தோடு கேட்கிறேன், பரிவோடு கேட்கிறேன், திமுகவுக்கு ஆதரவு தாருங்கள். லதா அதியமானை வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார் ஸ்டாலின்.

திமுகவுக்கு கவுண்டர்கள் சங்கம் ஆதரவு:

இதற்கிடையே திருமங்கலம் இடைத் தேர்தலில் அனைத்து கவுண்டர்கள் சங்கம் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கவுண்டர் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.எஸ்.கருணாகரன் தலைமையிலான நிர்வாகிகள் மு.க.அழகிரி, அமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X