For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரத்குமார் பாட்டு.. ராமராஜனின் 'கரக, கிரக' பிரசாரம்

By Staff
Google Oneindia Tamil News

திருமங்கலம்: திருமங்கலத்தில் தனது கட்சியின் வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு அதிமுக, தேமுதிக தேர்தல் அலுவலங்களிலும் புகுந்தார் சரத்குமார். அதே போல அதிமுகவுக்காக ராமராஜன் தனது 'கரகாட்ட பிட்'டைப் போட்டு ஓட்டு கேட்டார்.

திருமங்கலம் தொகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் தனது வேட்பாளர் பத்மநாபனை ஆதரித்து சரத்குமார் கடந்த 4 நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவரது மனைவி ராதிகாவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்தப் பகுதியில் 12 டீ கடைகள், சிறிய ஹோட்டல்களை நடத்தி வரும் பத்மநாபன் பிரச்சாரத்தில் முதலில் ரொம்பவே சுணக்கம் காட்டினார். சரத்குமார் வந்தவுடன் அவரிடம் ஒரு சுறுசுறுப்பு தெரிகிறது.

நேற்று 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு த்மநாபனுடன் சென்று ஓட்டு கேட்ட சரத்குமார், புங்கக்குளம் கிராமத்தில் ஒரு பாட்டையும் எடுத்துவிட்டார்.

"மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்வார், தன் 'மக்கள்' நலமே மனதில்தான் கொள்வார்'' என்று பாட்டு பாடி ஓட்டு கேட்டார் சரத்குமார்.

சித்தாளை கிராமத்திற்குள் நுழைந்தபோது சரத்குமாரின் கண்ணில் பட்டது அங்கிருந்த தேமுதிக தேர்தல் அலுவலகம். அங்கே ஏராளமான தேமுதிக பெண் தொண்டர்கள் இருக்கவே அவர்களிடம் சென்ற சரத்குமார் தனது கட்சியின் 'டார்ச் லைட்' சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்கவே முதலில் அதிர்ந்த தேமுதிகவினர் பின்னர் சிரித்து சமாளித்தனர்.

அதிமுகவையும் விடவில்லை...

அதேபோல அருகே இருந்த அதிமுக தேர்தல் அலுவலகத்திற்குள்ளேயும் சென்ற சரத்குமார் அங்கிருந்த அதிமுகவினரிடம்,

ஏற்கனவே நான் அதிமுகவில் பணியாற்றியவன், அந்த விசுவாசத்தை வச்சு எனது கட்சி வேட்பாளர் பத்மநாபனுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கவே அதிமுகவினர் பேயறைந்தது போல நின்றிருந்தனர்.

லேசாக சிரித்து வைத்தால் கூட, அதை போயஸ் கார்டனுக்கு பேக்ஸ் அனுப்பி, போட்டுத் தந்து பிழைப்பை கெடு்த்துவிடுவார்கள் என்பதால் முகத்தை விரைப்பாகவே வைத்திருந்தனர். பாவம், சிரிக்கக் கூட இல்லை.

இதனால் பாவம் என்று அவர்களை விட்டுவிட்டு தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்த சரத்குமார் பேசுகையில், திமுக, அதிமுகவைப் போல நான் சுவர்களில் இடம் பிடிக்கவில்லை. மக்கள் மனதில் இடம் பிடிப்பேன் என்றார்.

ராமராஜனின் 'கரக, கிரக' பிரசாரம்:

கார் நொறுக்கப்பட்டாலும் கொஞ்சம் பயம் அப்பியிருந்தாலும் அதிமுகவுக்காக ராமராஜனின் பிரச்சாரம் ஓயவில்லை. திருமங்கலம் தொகுதியில் அதிமுகவினரின் பலத்த பாதுகாப்புடன் தெருத் தெருவாக சுற்றி வரும் ராமராஜன் பெரிய கடை வீதியில் பிரசாரம் செய்தபோது பேசியது:

மின்வெட்டால் மக்கள் படும் அவஸ்தை கொஞ்சம் நஞ்சமில்லை. மின்சார துறையில் இருந்து மாதாமாதம் பில் தான் வருகிறதே தவிர மின்சாரம் வரவில்லை.

எனக்கு கரகம் ஆடவும் தெரியும், கெட்ட கிரகத்தை (திமுகவை) அகற்றவும் தெரியும். தங்கம் விலை குறைய வேண்டுமென்றால் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்றார்.

நல்லவேலை, ரெண்டு ஸ்டெப் கரகாட்டம் டான்ஸ் எதையும் போடவில்லை!. (ஆமா, தங்கத்துக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தமோ?!.)

அடடே.. தங்கபாலு, ஜி.கே.வாசன்:

காங்கிரஸ் எம்பியான சித்தனைத் தவிர பெரிய தலைவர்கள் யாரும் திமுகவுக்காக பிரச்சாரம் செய்ய இதுவரை தலை காட்டாத நிலையில் லதா அதியமானை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று தான் மதுரை வந்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நாளையும், நாளை மறுநாளும் பிரச்சாரம் செய்கிறார். 5ம் தேதி முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் பொதுக் கூட்டத்திலும் தங்கபாலு பேசுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X