For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரத்-ராதிகாவின் ஆட்டோகிராப் பிரச்சாரம்

By Sridhar L
Google Oneindia Tamil News

திருமங்கலம்: திருமங்கலம் தொகுதியில் சரத்குமார், ராதிகா ஆகியோர் ஆட்டோகிராப்களைப் போட்டபடி பிரச்சாரம் செய்தனர்.

திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் பத்மநாபனை ஆதரித்து அதன் தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் ராதிகாவும் தனித்தனியே தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

திருமங்கலத்தில் உள்ள பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறை பத்ரகாளி மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார் சரத்குமார்.

பெரிய கடை வீதியில் கடைகளில் அவர் வாக்கு சேகரித்தபோது ஒரு டீ கடையில் சூடான வடை கொடுத்தனர். இதற்கு சரத்குமார் பணம் கொடுத்தபோது கடைக்காரர் வாங்க மறுத்தார். அவரிடம், அண்ணாச்சி எனக்கு வடை மட்டும் போதாது, ஓட்டும் போட வேண்டும்' என்று கலாய்த்தார் சரத்குமார்.

தெலுங்கர் தெருவில் சென்றபோது சரத்குமாருக்கு, ஒரு வீட்டில் தலைப்பாகை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.

அந்தத் தெருவில் ஒரு பெண் தனது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டார். அந்த குழந்தைக்கு வரலட்சுமி என்று பெயர் சூட்டிய சரத்குமார், குழந்தையின் தாயிடம் மற்ற கட்சியினர் எல்லாம் லட்சுமி' கொடுத்து ஓட்டு கேட்கிறார்கள். நான் வரலட்சுமி என்ற பெயரை கொடுத்து ஓட்டு கேட்கிறேன் என்றார்.

தொடர்ந்து பிரச்சாரம் செய்த சரத்குமாரிடம் ஏராளமானோர் ஆட்டோகிராப் வாங்கினர்.

குண்டர்களை வெளியேற்ற வேண்டும்-சரத்:

இதற்கிடையே நிருபர்களிடம் பேசிய சரத்குமார்,

வாக்கு சேகரிக்க சென்றபோதும், பிரசாரம் செய்தபோதும் மக்களிடையே பேராதரவு எங்களுக்கு இருந்தது. மக்கள் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் எங்கள் கட்சிக்கு வரவேற்பு அளித்தனர்.

தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இரண்டு பிரதான கட்சிகள் பணம் பட்டுவாடா செய்வதை நிறுத்தவில்லை. இங்குள்ள வாக்காளர்களுக்கு பணம் செலவு செய்வதோடு அவர்களை மிரட்டவும் ஆரம்பித்துள்ளனர்.

அதாவது, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ரகசிய காமரா வைத்துள்ளோம். யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கண்டுபிடித்து விடுவோம் திமுகவினர் மிரட்டி வருகிறார்கள்.

நாங்கள் பிரசாரம் செய்யும்போது எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. ஆனால் பிரசாரத்தை முடித்த பிறகு வாக்காளர்களை குண்டர்களை வைத்து மிரட்டி உள்ளனர். இது வாக்காளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிராமங்களில் உள்ள வீடுகளில் குண்டர்கள் தங்கி உள்ளனர். அவர்களை இன்றே போலீஸ் அதிகாரிகள் வெளியேற்ற வேண்டும். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க உதவ வேண்டும். அவர்களிடம் கலவரம் நடக்கும் என்ற அச்சத்தை போக்க வேண்டும்.

துணை ராணுவம் திருமங்கலத்திற்கு எதற்காக வந்துள்ளது என்று தெரியவில்லை. அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது. தேர்தல் ஆணையம் விதி மீறல்களை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

கிராமங்களில் தங்கி உள்ள குண்டர்கள் யார், யார் என்பது துணை ராணுவத்துக்கு தெரியாது. எனவே போலீஸ் அதிகாரிகள் துணையோடு தான் துணை ராணுவம் செயல்பட முடியும். குண்டர்களை இன்றே வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தொகுதியில் 100 சதவீதம் வாக்குபதிவு நடந்தால்தான் உண்மையான ஜனநாயகம். இங்கு 40 சதவிகிதம் வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்னரே வன்முறை கட்டவிழ்த்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது கலவரமாக மாறிவிட வாய்ப்புள்ளது.

நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் பேசுகையில் இது அழகிரியின் கோட்டை என்கிறார். அவ்வாறு அழகிரியின் கோட்டை என்றால் துணை ராணுவம் எதற்கு வந்தது.

துணை ராணுவம் திருமங்கலத்திற்கு வந்திருப்பது காவல்துறைக்கு இழுக்கல்லவா? இதிலிருந்தே காவல்துறை செயல் இழந்துவிட்டது தெரிய வருகிறது என்றார்.

ராதிகா பிரச்சாரம்:

கட்சியின் துணைத் தலைவரான ராதிகா பள்ளிவாசல் தெருவில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலைக்குள் சென்று அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.

ராதிகாவிடமும் ஏராளமானோர் ஆட்டோகிராப் வாங்கினர். ஒரு இடத்தில் நரிக்குறவர்கள் பாசி மாலை அணிவித்து ராதிகாவை வரவேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X