For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்காளர்களுக்கு அல்வா, பஞ்சாமிர்தம், மிக்ஸருக்குள் மோதிரம்!

By Sridhar L
Google Oneindia Tamil News

திருமங்கலம்: திருமங்கலத்தில் நேற்று கடைசி கட்டமாக ஒரு முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள், வாக்காளர்களை வீடு வீடாக சந்தித்து அல்வா, பஞ்சாமிர்தம், மிக்சர் உள்ளிட்டவற்றைக் கொடுத்தனர். அதற்குள் மோதிரம் இருந்ததுதான் இதில் விசேஷம்.

நேற்று இரவு தொகுதிக்கு உட்பட சில இடங்களில் திடீரென வீடுவீடாக ஸ்வீட், மிச்சர், அல்வா, பஞ்சாமிர்தம் போன்றவை ஒரு முக்கிய கட்சி சார்பில் சப்ளை செய்ப்பட்டது.

நமக்கே அல்வாவா என்று அலட்சியத்துடன் பிரித்துப் பார்த்த மக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். காரணம்,
மிச்சர், அல்வா, பஞ்சாமிர்தம் ஆகியவற்றுக்குள் ஒரு கிராம் மோதிரம் இருந்ததுதான்.

திருமங்கலம் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, எதிர்த்தரப்பு, வீட்டுக்கு வீடு ஒரு கிராம் தங்க நாணயம் தரப் போவதாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் திடீர் சர்ப்ரைஸாக மோதிரம் கொடுக்கப்பட்ட விவகாரம் திருமங்கலம் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமக்கும் 'அல்வா' தருவார்கள் என்ற நம்பிக்கை பிளஸ் ஆர்வத்துடன் அக்கம் பக்கத்து கிராம மக்கள் இரவு நெடு நேரமாக தங்களது வீட்டுக் கதவை பூட்டாமல் திறந்து வைத்திருந்தனர்.

காலையில் மட்டன்- மதியம் சிக்கன் - இரவு மீன்!:

இதற்கிடையே, திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் வாக்களர்களை கவர ஒரு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் இன்று காலையில் மட்டன்- மதியம் சிக்கன் - இரவு மீன் சாப்பாடு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் காலையில் மட்டன் பிரியாணி வழங்கியுள்ளனர். மதியம் சிக்கன் பிரியாணி கொடுத்துள்ளனர். அதேபோல இரவு சாப்பாட்டுக்கு மீன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனராம்.

இந்த விருந்துச் சாப்பாடு காரணமாக, வெள்ளிக்கிழமை என்பதையும் கூட மறந்து, தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் பலர் அடுப்பை பற்ற வைக்கவே இல்லையாம்.

ஒரு தொகுதி என்பதால் பரவாயில்லை, 234 தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தால் எப்படி சாப்பாடு போட்டு சமாளிப்பார்கள் இவர்கள்?

இன்னும் பணம் தருகிறார்கள்-நரேஷ் குப்தா:

திருமங்கலம் தொகுதியில், இன்னும் சில கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வருவதாக புகார் வந்துள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

திருமங்கலம் தொகுதியில் வாக்குப் பதிவை பார்வையிட்டு வருகிறார் நரேஷ்குப்தா. தொகுதியிலேயே முகாமிட்டுள்ள அவர் வாக்குச் சாவடி வாக்குச் சாவடியாக போய்க் கொண்டிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தொகுதியில் இன்னும் சில கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் தந்து கொண்டிருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதுகுறித்து விசாரித்து வருகிறோம்.

அதேபோல தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத பலரும் இன்னும் வெளியேறாமல் உள்ளனர். அவர்களையும் வெளியேற்றி வருகிறோம் என்றார்.

உள்ளூர் போலீஸுக்கு தடை:

இதற்கிடையே, வாக்குச் சாவடிக்குள் திருமங்கலத்தைச் சேர்ந்த போலீஸார் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிக்குள் அதிரடிப்படையினர் மட்டுமே இருக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவியாக தமிழ் தெரிந்த ஒரு அதிரடிப்படை வீரர் இடம் பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீஸார் வாக்குச் சாவடிக்குள் போகக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X