For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜு சகோதரர்கள் சிறையில் அடைப்பு - வட்லாமணியும் கைது

By Sridhar L
Google Oneindia Tamil News

Srinivas Vadlamani
ஹைதராபாத்/டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு, அவரது தம்பி ராமராஜு ஆகியோர் விசாரணைக்குப் பின்னர் நேற்று ஹைதராபாத் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று சத்யம் நிறுவன முன்னாள் தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாஸ் வட்லாமணியும் கைது செய்யப்பட்டார்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் ரூ.7 ஆயிரத்து 800 கோடி மோசடி நடந்ததைத் தொடர்ந்து அதன் தலைவர் ராமலிங்க ராஜு பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அரசு, ஆந்திரா மாநில அரசு, பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி அமைப்பு ஆகியவை இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமலிங்க ராஜுவும், அவரது சகோதரர் ராமராஜுவும் கைது செய்யப்பட்டனர்.

ராமலிங்க ராஜுவிடமும், அவரது சகோதரரும், முன்னாள் இயக்குனருமான ராமராஜுவிடமும் ஆந்திரா மாநில போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய விசாரணை நடத்தினார்கள் என்று ராமலிங்க ராஜுவின் வக்கீல் பரத்குமார் தெரிவித்தார்.

விசாரணைக்குப் பின்னர் அவர்கள் இருவர் மீதும் இ.பி.கோ. 120பி, (குற்றம் புரிய சதி செய்தது), 420 (மோசடி), 406, 467, 427 (நம்பிக்கைத் துரோகம், மோசடி, போலி தஸ்தாவேஜுகளை உண்மையான தஸ்தாவேஜுகளாக பயன்படுத்துதல்) ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் பரத்குமார் கூறினார்.

நெஞ்சு வலி ...

ராமலிங்க ராஜுவிடம் விடிய, விடிய விசாரணை நடந்த போது நள்ளிரவில் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாகவும், உயர் ரத்த அழுத்த நோயால் அவதிப்படுவதாகவும் கூறினார். உடனடியாக அரசு டாக்டர்களும், ஒரு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களும் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் வந்து ராமலிங்க ராஜுவுக்கு சிகிச்சை அளித்து விட்டுச் சென்றனர். இப்போது அவர் நன்றாக இருக்கிறார் என்றும் பரத்குமார் கூறினார்.

பின்னர் மீண்டும் விசாரணை நீடித்தது. ராமலிங்க ராஜு கூறிய அனைத்தும் வாக்கு மூலமாகப் பதிவு செய்யப்பட்டது என்றும் பரத்குமார் தெரிவித்தார்

பின்னர் நேற்று மாலை ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு ஆகிய இருவரையும் ஐதராபாத் 6-வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு ராதாகிருஷ்ணா வீட்டுக்கு போலீசார் கொண்டு சென்று ஆஜர் படுத்தினார்கள்.

அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி ராமலிங்க ராஜுவின் வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர். ஜாமீன் மனுக்களை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்து, இருவரையும் வருகிற 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இருவரும் பலத்த பாதுகாப்புடன் சஞ்சலகுடா மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப் பட்டனர்.

அவர்களை ஜாமீனில் எடுக்க நாளை மீண்டும் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக வழக்கறிஞர் பரத்குமார் கூறியுள்ளார்.

ராஜு சகோதரர்களுக்கு சிறையில் சாதாரண கைதிகளைப் போலவே கருதப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் நகரின் மிக மிக காஸ்ட்லியான பகுதியான ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தங்களது ஆடம்பர, சொகுசு பங்களாவில் வாசம் புரிந்த ராஜு சகோதரர்களுக்கு சிறை அனுபவம் நிச்சயம் மிகக் கொடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதற்கிடையே, சத்யம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ஸ்ரீனிவாஸ் வட்லாமணி நேற்று கைது செய்யப்பட்டார். ராமலிங்கராஜு விலகிய அடுத்த நாள் இவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று மாலை அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிஐடி போலீஸார் பின்னர் அவரை முறைப்படி கைது செய்ததாக சிஐடி ஐஜி கெளமுதி தெரிவித்துள்ளார்.

ராஜு சகோதர்கள் மீது போடப்பட்டுள்ள அதே பிரிவுகளின் கீழ்தான் வட்லாமணி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முறைகேடுகளில் அவருக்கு உள்ள தொடர்புகள் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டது.

யாரும் தப்ப முடியாது ..

இதற்கிடையே, மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் பிரேம்சந்த் குப்தா கூறுகையில், மத்திய அரசு, ஆந்திரா போலீசார், செபி அமைப்பு, நிறுவனங்களை தணிக்கை செய்யும் உயர் அமைப்பான ஐ.சி.ஏ.ஐ ஆகியவை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜு சகோதர்ரகள் அல்லது அந்த நிறுவனத்தை ஆடிட் செய்தவர்களோ தப்பிக்க முடியாது. யாருக்கும் தயவு காட்டப்படமாட்டாது, என்றார்.

ஆந்திர அரசுக்கு தொடர்பில்லை - அமைச்சர் ரோசய்யா

இந்நிலையில் சத்யம் நிறுவன விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில அரசு நேற்று திடீர் விளக்கம் அளித்துள்ளது.

ஆந்திரா மாநில நிதி மந்திரி கே.ரோசைய்யா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் விவகாரம் தொடர்பாக மாநில அரசு ஒன்றும் செய்யவில்லை. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் நடந்துள்ள மோசடிக்கும், ஆந்திரா அரசுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. எதிர்க் கட்சிகள் தேவையில்லாமல் குற்றம் சாட்டுகின்றன என்று அவர் கூறினார்.

'நோ லே ஆஃப், நோ சம்பள குறைப்பு'!

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் சர்வதேச மார்க்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்பு தலைமை அதிகாரி ஹரி தாலப்பள்ளி நிருபர்களிடம் கூறியதாவது -

இப்போதைக்கு எங்கள் முன் பெரும் சவால் உள்ளது. அதில் இருந்து விரைவில் மீண்டு விடுவோம். எங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. சம்பள குறைப்போ, லே ஆஃப் முறையோ இருக்காது என்றும் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X