வரதட்சணை வழக்குகள்: மண வீட்டார் ஒப்பந்தம் தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்
டெல்லி: வரதட்சணைக் கொடுமை மற்றும் அதுதொடர்பான மரண வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க மண வீட்டாருக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரேம் கன்வார். இவரது மருமகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ராஜஸ்தான் போலீஸார் தொடர்ந்த வழக்கில் கன்வாருக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கன்வார் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வரதட்சணை வாங்கியது தொடர்பான ஆதாரம் எதுவும் போலீஸாரால் நிரூபிக்கப்படவில்லை. மேலும், தனக்குத்தானே தீவைத்துத் தற்கொலை செய்து கொண்டார் எனது மருமகள். என்னால்தான் அவர் மரணத்தைத் தழுவினார் என்பதற்கான ஆதாரத்தையும் போலீஸார் நிரூபிக்கவில்லை.
வரதட்சணை பெற்றதற்கான ஒப்பந்தம் எதுவும் போலீஸாரால் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் அரிஜித் பச்சாயத் மற்றும முகுந்தகம் சர்மா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், மனுதாரரின் வாதம் ஏற்புடையதல்ல. இந்திய குற்றவியல் சட்டத்தின் 304 பி பிரிவில் வரதட்சணை குறித்து தெளிவாகவே உள்ளது.
இதுபோன்ற வழக்குகளில், மண வீட்டாருக்கிடையே வரதட்சணை கொடுப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. வரதட்சணை தொடர்பான ஒப்பந்தம் இருந்தால்தான் யாரையும் தண்டிக்க முடியும் என்றால் இந்த நாட்டில் எந்த வரதட்சணைக் கொடுமை வழக்குக்கும் தீர்வு கிடைக்காது. யாரும் தண்டிக்கப்படவும் முடியாது.
ஒருவரிடம் பொருளையோ அல்லது பணத்தையோ கேட்டு வாங்கியிருந்தாலே அது குற்றச் செயலாக கருதப்பட வேண்டும். வரதட்சணை தொடர்பான சட்டப் பிரிவு அதைத்தான் வலியுறுத்துகிறது.
எனவே இதுபோன்ற வழக்குகளில் வரதட்சணை தொடர்பான ஒப்பந்தம் கட்டாயம் தேவை என்று வலியுறுத்தத் தேவையில்லை என்று உத்தரவிட்டனர்.