திருமங்கலம் தேர்தல் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் கொடுத்துள்ள அடி - மு.க.அழகிரி

திருமங்கலம் இடைத் தேர்தல் முடிவு வெளியானபோது மதுரை மருத்துவக் கல்லூரிக்கு மு.க.அழகிரி வந்தார். அவரை லதா அதியமான் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அழகிரி பேசுகையில், 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். சொன்னபடி அவர் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக திமுக அரசின் சாதனைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும். ஏழை எளிய மக்களுக்காக திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வருகிறார் முதல்வர் கருணாநிதி. எனவே இது முதல்வருக்குக் கிடைத்த வெற்றி. அதையும் மீறி, திமுக முன்னணி தலைவர்கள், தொண்டர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள், தொண்டர்களுக்குக் கிடைத்த வெற்றி.
இது தொடக்கம்தான். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இது அதற்கான படிக்கல்.
ஜெயலலிதா, வைகோ ஆகியோர் என்னைக் கடுமையாக விமர்சித்தனர். அதை மக்கள் நம்பவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு திருமங்கலம் மக்கள் பலத்த அடியைக் கொடுத்துள்ளனர்.
என்னைத் தேவையில்லாமல் விமர்சித்துப் பேசிய வைகோ மீது வழக்குப் போடுவேன். அதுகுறித்து நான் ஏற்கனவே கூறியுள்ளேன் என்றார் அழகிரி.