For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயாவின் ஊரறிந்த ஊழல்கள்-கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: ஊழலிலே பிறந்து, ஊழலிலே வளர்ந்த ஆட்சி தான் ஜெயலலிதாவின் ஆட்சி என்பதை ஊர் அறியும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் ஆதாரம் இல்லாமல் ஆயிரக்கணக்கில் யார் யாரோ வந்து வாக்களித்துள்ளனர் என்றும், அது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுக்க போவதாகவும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்: தோல்விக்கு பிறகு, கோபமடைந்த ஜெயலலிதாவிடம் அதிமுக தலைவர்கள் சமாதானத்திற்காக சொன்னவைகளையெல்லாம் அப்படியே நம்பி ஜெயா சொல்கிறார். ஆதாரமில்லாமல் யாரும் இந்த தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்ட செய்தி.

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அளித்த பேட்டி நாளிதழ்களில் இடம் பெற்றுள்ளது. அதில் "திருமங்கலம் தொகுதியில் சுதந்திரமான, நேர்மையான ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் அச்சுறுத்தல் இன்றி ஓட்டுக்களை பதிவு செய்தனர். கள்ள ஓட்டுகள் பதிவாகவில்லை. ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஒத்துழைப்புடன் தேர்தல் அமைதியாக நடந்தது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு பிறகும் தான் விசாரணை வேண்டுமென்று மனு கொடுக்கப் போவதாக ஜெயலலிதா சொல்கிறார். அப்படிப்பட்ட ஒரு விசாரணை நடத்தப்பட்டால், ஜெயலலிதா நேரம் தாண்டி தேர்தல் பிரசாரம் செய்தது, அவருடைய கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க சென்று கையும், களவுமாக பிடிபட்டது, விதிமுறைகளுக்கு மாறாக ஏராளமான வாகனங்களுடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டது, ஒரு ஊரில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்ததைத் தடுத்த திமுகவினரிடமே அந்த ஊர் மக்கள் போராடி அந்த தொகையை பெற்றது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் இன்னும் தெளிவாக மக்களுக்கு தெரிந்திட முடியும்.

கேள்வி: ஜெயலலிதா இன்றைய தினம் கூட தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி நேர்மையான அதிகாரி என்று பாராட்டியிருக்கிறாரே?

பதில்: 3 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா அறிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டவுடன், டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அவ்வாறே 3 காவல்துறை அதிகாரிகளை மாற்றும்படி கோரி அறிக்கை அனுப்பியவரைப் பற்றி ஜெயலலிதா நேர்மையற்ற அதிகாரி என்றா கூறுவார்!.

ஆனால் அந்த அதிகாரி கூட, தேர்தல் வாக்களிப்பு முடிந்த பிறகு, தேர்தல் அமைதியாகவும் முறையாகவும் நடந்ததாக அறிக்கை கொடுத்திருக்கிறாரே!

கேள்வி: மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கூற்று தவறானது என்று ஜெயலலிதா பேட்டி அளித்துள்ளாரே?

பதில்: ஜெயலலிதாவின் இந்த கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதில் கூற வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு என்றும், அதிமுகவிற்கு வாக்களித்தால் அந்த வாக்குகள் எல்லாம் திமுக வேட்பாளருக்கு விழுந்து விடும் என்றும் ஜெயலலிதா அணியினர் சொன்னார்கள். ஆனால் இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு 40 ஆயிரம் வாக்குகள் விழுந்திருக்கிறதே அந்த வாக்குகள் எவ்வாறு விழுந்தது என்பதற்கு ஜெயலலிதாதான் பதில் கூற வேண்டும்.

கேள்வி: இலங்கையில் போர் நடப்பதைப் பற்றி ஜெயலலிதா கூறும்போது, "ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உலகில் எங்கும் நடப்பதுதான் என்றும், இலங்கை ராணுவத்திற்கு அப்பாவி மக்களை கொல்லும் எண்ணம் இல்லை'' என்றும் சொல்லியிருக்கிறாரே?

பதில்: இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக ராஜபக்சே கூட சொல்லாத அளவிற்கு ஜெயலலிதா சொல்லியுள்ள இந்த பதிலைப்பற்றி அதிமுக அணியிலே உள்ள வைகோவும், தா.பாண்டியனும், என்.வரதராஜனும்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜெயாவிடம் செய்தியாளர்கள் கேட்டது, விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவனின் உண்ணாவிரதத்திற்கு அதிமுக கூட்டணியிலே உள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு தெரிவித்திருக்கிறதே, அதிலே உங்கள் நிலைப்பாடு என்ன என்பது பற்றித் தான்!. அதைப்பற்றி நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், வேறு எதையெதையோ ஜெயலலிதா சொல்லி சமாளித்திருக்கிறார்.

கேள்வி: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இது போன்ற ஊழல் ஆட்சி முன்பு எப்போதும் இல்லை என்று திமுக அரசைப் பற்றி ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்: அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை அடிமாட்டு விலைக்கு ஜெயலலிதாவைப் போல் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு, உச்ச நீதிமன்றம் வரை வழக்கு சென்று நீதிமன்றத்தால் நிலத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்ற அளவிற்கு எந்த ஆட்சியிலே ஊழல் நடைபெற்றது என்று பாமர மக்களுக்கே தெரியும்.

66 கோடி ரூபாய் வருவாய்க்கு மேல் சொத்து சேர்த்து கர்நாடக மாநிலத்தில் வழக்கு நீடித்து கொண்டிருக்கிறதே, அதைப் போன்ற ஊழல் எந்த ஆட்சியில் நடைபெற்றது என்பதும் பாமர மக்களுக்கு தெரியும்.
வெளிநாட்டில் இருந்து வந்த காசோலையை யார் அனுப்பியது என்றே தெரியாது என்று சொல்லிவிட்டு, அந்த காசோலையை தன் பெயரிலேயே வரவு வைத்துக் கொண்டது யார் என்பதும், எந்த ஆட்சியிலே என்பதும் பாமர மக்களுக்கு தெரியும்.

டாமின் நிறுவனத்தின் மூலம் அந்நியச் செலவாணி ஊழல் நடைபெற்றது யாருடைய ஆட்சியிலே?. கொடைக்கானல் பிளசென்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் நடைபெற்றது யாருடைய ஆட்சியில்?. ஸ்பிக் நிறுவன பங்குகளை விற்றதில் ஊழல் நடைபெற்றது எந்த ஆட்சியில்?.

ஐஏஎஸ் அதிகாரியின் முகத்திலே ஆசிட் வீசப்பட்டது யாருடைய ஆட்சியில்? கவர்னரையும், தலைமைத் தேர்தல் ஆணையரையும், மத்திய மந்திரிகளையும், வக்கீல்களையும் தாக்கியதெல்லாம் எந்த ஆட்சியிலே?. ஆம்னி பஸ்களுக்கான வரியை குறைப்பதில் ஊழல் நடைபெற்றது எந்த ஆட்சியில்?.

கோடநாடு எஸ்டேட் என்றும், சிறுதாவூர் பங்களா என்றும் சொத்துக்களைக் குவிக்க ஊழல் நடத்தியது யாருடைய ஆட்சியில்? பாமர மக்கள் அனைவருக்கும் இவ்வளவும் நன்றாகத் தெரியும். ஊழலிலே பிறந்து, வளர்ந்த ஊழல் ஆட்சியை ஊர் அறியுமே!

கேள்வி: திருமங்கலம் இடைத்தேர்தல் ஒரு மோசடி என்றும், தொண்டர்கள் மனம் தளர வேண்டாம் என்றும் ஜெயலலிதா பேட்டி கொடுத்துள்ளாரே?

பதில்: திருமங்கலம் தொகுதி, அதிமுகவிற்கு ஆதரவான தொகுதி. இடதுசாரிகளும் தங்களை ஆதரிக்கிறார்கள், பாமகவும் எதிராக இல்லை. எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தோடு தோழமைக் கட்சியின் இடத்தை பெற்று, போட்டியிட்டு தோற்றுவிட்ட பிறகு, ஜெயலலிதா பேட்டியிலே சொல்லியிருப்பதைத் தவிர வேறு எதைத்தான் சொல்ல முடியும்?.

திருமங்கலத்தில் நியாயம், நேர்மை வெற்றி பெற்றுவிட்டது. தோழர்களே நீங்கள் வீட்டிலே போய் படுத்துக் கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருங்கள் என்றா சொல்ல முடியும்?.

ஜெயலலிதாவின் பேச்சை நம்பி, திருமங்கலத்தில் உழைத்து, தோற்றுப் போன தொண்டர்களை வேறு என்ன சொல்லி புதிய நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்திட முடியும்?.

கேள்வி: தமிழக அரசு கொண்டு வந்துள்ள நிலச் சீர்திருத்த திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே?

பதில்: இந்தியாவிலேயே நில உச்சவரம்புச் சட்டத்தை நிறைவேற்றி சாதனை படைத்தது திமுக அரசுதான். 1970ம் ஆண்டு திமுக ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று உச்சவரம்பு இருந்ததை, 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று திடீரென்று அறிவித்து சட்டம் இயற்றப்பட்டது. அதன் விளைவாக, அதற்கு முன்னர் பழைய நிலச்சீர்திருத்த சட்டத்தின் கீழ் 19 ஆயிரத்து 20 ஏக்கர் நிலம் மட்டுமே உபரியாக அறிவிக்கப்பட்டிருந்ததற்கு மாறாக, கழக அரசு நிறைவேற்றிய சட்டத்தின் காரணமாக, ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் நிலம் உபரி நிலம் என்று கைப்பற்றப்பட்டு தகுதியுள்ள நிலமற்ற ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 236 ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

அதில் 61 ஆயிரத்து 985 பேர் ஆதிதிராவிடர்கள்; 204 பேர் பழங்குடியினர்.

தற்போது கொண்டு வந்துள்ள திருத்த சட்டம் பணக்காரர்களுக்கு ஆதரவாக கொண்டு வந்திருப்பதை போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தவறாக கருதிக் கொண்டு எதிர்க்கிறார்கள். ஆனால் கழக அரசு நில உச்சவரம்பு திருத்த சட்டத்தின் மூலமாக பணக்காரர் யாருக்கும் நிலம் வழங்கவும் இல்லை; சலுகை காட்டவும் இல்லை; இனியும் அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை.

திருத்த சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதைப் பற்றியும், அது எந்த பணக்காரர்களுக்கும் ஆதரவாக கொண்டு வரப்படவில்லை என்பதையும் விளக்கி 2.9.2008 அன்று ஏடுகளில் விளக்கமாக நான் பதில் அளித்திருக்கிறேன்.

கேள்வி: விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்றும், அப்போது எப்படியும் ஜெயலலிதா முதல்வராகி விடுவார் என்றும் அவரே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறாரே?

பதில்: அவர் அறியாமையை வெளியிடத்தான் அன்றாடம் பத்திரிகைகள் காத்திருக்கின்றனவே!. எல்லாம் அவர் கட்சிக்காரர்களையும் கூட்டணிக் கட்சிகளையும் சோர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதற்காகத்தான்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X