For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் கர்நாடக- மகாராஷ்டிர எல்லை பிரச்சினை தீவிரம்: பஸ்கள் நிறுத்தம்

By Sridhar L
Google Oneindia Tamil News

பெல்காம்: பெல்காம் யாருக்கு சொந்தம் என்பதில் கர்நாடகத்திற்கும், மகாராஷ்டிராவுக்கும் இடையே மீண்டும் பெரும் பிரச்சினை வெடித்துள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் இரு மாநில அரசுப் பேருந்துகளும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

கர்நாடக, மகாராஷ்டிர எல்லைப் பகுதியில் இருக்கும் மாவட்டம்தான் பெல்காம். பெல்காம், எங்களது பகுதி என்று மகாராஷ்டிரா கூறி வருகிறது. ஆனால் இது கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி. இதை விட்டுத் தரும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வருகிறது கர்நாடகா.

பெல்காம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே நீண்ட காலமாக பூசல் இருந்து வருகிறது.

பெல்காம், கர்நாடகத்திற்குத்தான் சொந்தம் என்பதை நிரூபிக்க சமீப காலமாக அங்கு சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை நடத்தி வருகிறது கர்நாடக அரசு. மேலும் பெல்காமுக்கென சிறப்புத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டப் பணிகளையும் அது செயல்படுத்தி வருகிறது.

இத்தகைய சிறப்பு சட்டசபைக் கூட்டம் கடந்த 16ம் தேதி பெல்காமில் தொடங்கியது. இதையடுத்து மகாராஷ்டிர ஆதரவு கட்சியான மகாராஷ்டிர ஏகிகிரண் சமிதி கட்சியினர், போட்டி சட்டசபைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். இதை கர்நாடக பாஜக அரசு தடை செய்தது.

இதைத் தொடர்ந்து இரு மாநில தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது.

சிவசேனா தலைவர் பால் தாக்கரே, கர்நாடக அரசைக் கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார். பெல்காமில் உள்ள மராத்தி மக்களை கர்நாடக அரசு தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது. இந்த நிலை நீடித்தால் மகாராஷ்டிராவில் பாஜகவுடனான உறவை சிவசேனா துண்டிக்கும் என எச்சரித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் சிவசேனா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பீதர் மாவட்டத்திலிருந்து மகாராஷ்டிராவின் லத்தூருக்குச் சென்ற கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தை சிலர் தீவைத்துக் கொளுத்தினர்.

மேலும் ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் இரு கர்நாடக அரசுப் பேருந்துகள், மகாராஷ்டிராவின் உத்கிர் என்ற இடத்தில் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரு மாநிலங்களுக்கும் இடையிலான இரு மாநில அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.

நேற்று மாலை, 5 மணியளவில் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் மீண்டும் பேருந்துப் போக்குவரத்தைத் தொடங்கியது. இருப்பினும் ஒரு மணி நேரத்தில் அது மீண்டும் நிறுத்தப்பட்டு விட்டது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவுக்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று பெல்காமில் நடந்த சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் இப்பிரச்சினை எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து எதியூரப்பா பேசுகையில், பெல்காமில் கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடத்தப்படும் நேரத்தில் இங்கு மராட்டியர்கள் மாநாடு நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டு இருந்தார்கள். ஆனால் சட்டசபை கூட்டம் நடக்கும் நேரத்தில் அது சாத்தியம் அல்ல என்று மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி மறுத்து இருக்கிறது.

அதனால் கோபம் அடைந்த மராட்டியத்தில் உள்ள ஒரு அமைப்பைச் சேர்ந்த சில கேடிகள், கர்நாடக அரசு பஸ்சுக்கு தீவைத்து இருக்கிறார்கள். இரண்டு மாநிலத்திலும் நிலவும் அமைதியை அவர்கள் கெடுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.

இரு மாநில மக்களும் அமைதியை விரும்புபவர்கள் ஆனால் அவர்களின் அமைதியை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடும் யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த பிரச்சினையில் கர்நாடக அரசு மக்களின் அமைதிக்கு பங்கம் வராமல் நடந்து கொள்ள முயற்சி செய்து வருகிறது.

நமது இந்த நல்ல எண்ணத்தை தவறாக பயன்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள்.

எந்த சூழ்நிலையிலும் கர்நாடகத்தின் நிலம், நீர், மொழிப் பிரச்சினைகளில் மாநிலத்தின் நலனை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. எல்லைப்பிரச்சினையை பொறுத்த அளவில் மகாஜன் அறிக்கையே இறுதியானது. அதை விட்டு ஒரு அங்குலம் நிலத்தைக் கூட அடுத்த மாநிலத்துக்கு விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை.

அந்த அறிக்கையில் உள்ள அம்சங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இப்போது ஏற்பட்டு இருக்கும் பிரச்சினையை கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக இரு மாநிலங்களுக்கும் இடையில் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு அமைதி ஏற்பட உதவ வேண்டும்.

பெல்காம் பிரச்சினை முடிந்து போன ஒன்று. இதை திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்றார்.

போக்குவரத்து அமைச்சர் அசோக் கூறுகையில், பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலைமை சரியானதும் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X