For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் மரணம்

By Sridhar L
Google Oneindia Tamil News

பெங்களூர்: தீவிர தமிழ் உணர்வாளரும், கர்நாடகத் தமிழர்களுக்கு பெரும் அரணாக திகழ்ந்தவருமான பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ப. சண்முகசுந்தரம் காலமானார். அவருக்கு வயது 69.

அவரது உடலுக்கு முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தேசியத் தலைவருமான தேவ கெளடா, மூத்த காங்கிரஸ் தலைவர் ஜாபர் ஷெரீப் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பெங்களூர் வாழ் தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

22.5.1939ல் பழனியப்பன்- ராமாயம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த சண்முகசுந்தரத்துக்கு சுப்புரத்தினம் என்ற மனைவியும், மணிவாணன் என்ற மகனும் செல்வதேவி என்ற மகளும் உள்ளனர்.

லாரி போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டு வந்த சண்முகசுந்தரம் ஏழைகள் பால் பெரும் அன்பு கொண்டவர். ஒடு்க்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதிலும் நியாயத்துக்காக நேரில் நின்று போராடுவதிலும் நிகரற்ற போராளி.

40 ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகத் தமிழர் பேரவையை நிறுவியவர். இரு முறை பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்தவர்.

கர்நாடக தமிழர் நலனுக்காகப் பாடுபட்டு வந்தவர். வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க போராடி வந்தவர்.

தமிழக-கர்நாடக எல்லையில் மூடப்பட்ட கர்நாடக அரசின் தமிழ்ப் பள்ளிகளை மீண்டும் திறக்கச் செய்தவர்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது வீரப்பனைக் காட்டில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ராஜ்குமாரை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் சண்முகசுந்தரம்.

பெங்களூர் யஷ்வந்தபுரத்தில் தமிழர்களது குடிசைகள் எரிந்து சாம்பலானபோது அவர்களுக்கு ஓடிச் சென்று உதவியவர். சென்னப்பட்டணாவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசின் உதவியுடன் வீடுகள் கட்டிக் கொடுத்தவர்.

பெங்களூரில் இலங்கைத் தமிழ் அகதிக் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட விடுதிப் பள்ளியில் குழந்தைகள் பட்டினி கிடப்பதாக தெரியவந்தபோது அதை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தி, மேல்மருத்துவத்தூர் அடிகளாரின் உதவியோடு உணவும் உடைகளும் கிடைக்கச் செய்தவர். நூற்றுக்கணக்கான அந்தக் குழந்தைகளை பட்டினியிலிருந்து மீட்டவர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கிருஸ்தவ தேவாலயங்களில் தமிழில் வழிபாடு நடத்தும் உரிமையைப் போராடிப் பெற்றுக் கொடுத்தவர்.
பேச்சும், எண்ணமும், வாழ்வும் தமிழ்.. தமிழர்கள் என்றே வாழ்ந்தவர் சண்முகசுந்தரம். மிக இனிய பண்பாளர். இலங்கைத் தமிழர்களின் நிலை கண்டு கொதித்தவர், அவர்களது இன்னல்களை தனது சொந்த துயரமாகவே கருதி நொந்தவர்.

இலங்கைத் தமிழர்கள் சந்திக்கும் அவலம் குறித்து பேச ஆரம்பித்தாலே கண் கலங்கிவிடும் மனிதர். இலங்கை தமிழர்கள் படும்பாடு அவரை மிகவும் பாதித்திருந்தது. இதனாலேயே உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.

பிறர்க்கு செய்த உதவிகளை அந்த நிமிடத்திலேயே மறந்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விடும் பண்பாளர். சண்முகசுந்தரத்தின் இழப்பு தமிழ் சமுதாயத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

சமீபத்தில் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை நடந்தபோது அதைத் தடுக்க தீவிரமாய் முயன்றவர். கர்நாடக ரக்ஷணா வேதிகே அமைப்புடன் பேச்சு நடத்தி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தவர்.

சண்முகசுந்தரத்தின் மறைவுக்கு பாமக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X