For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்யம்: ஊழியர் எண்ணிக்கையிலும் கோல்மால்!

By Sridhar L
Google Oneindia Tamil News

டெல்லி: சத்யம் நிறுவனத்தில் உண்மையிலேயே பணியில் உள்ள ஊழியர்கள் 40,000க்கும் குறைவுதான். ஆனால், 13,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை மிகைப்படுத்திக் காட்டி, அவர்களது பெயரில் ஊதியத்தை சுருட்டியதோடு, மனித வளத்துறையில் தங்கள் நிறுவனம் உலக அளவில் பெரியது எனக் காட்டி வந்துள்ளார் ராமலிங்க ராஜு.

இந்தத் தகவலை யாரும் புலனாய்ந்து சொல்லவில்லை. அதற்கான முயற்சிகளில் செபியும் மத்திய அரசின் கம்பெனிகள் விவகாரத் துறையும் இறங்கும் முன்பே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பவர் ராமலிங்க ராஜுவின் வலது கரமாகத் திகழ்ந்த சத்யம் முன்னாள் சிஎப்ஓ சீனிவாஸ் வட்லாமணி.

வட்லாமணி வாக்குமூலத்தின்படி, இந்த போலியான பணிகள் 2004ம் ஆண்டில் உருவாக்கப்பட்டனவாம். இந்த 13,000 பணியிடங்களுக்கான சம்பளம் என்ற வகையில் மாதந்தோறும் பல நூறு கோடிகளை ராஜு சகோதரர்களும் வட்லாமணியும் சுருட்டி வந்துள்ளனர்.

இந்தத் தொகையும் ராஜுவின் வெளிநாட்டு பினாமி கணக்குகளில்தான் வரவு வைக்கப்பட்டுள்ளதாம்.

இப்போது உண்மையிலேயே சத்யம் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர்கள் எவ்வளவு பேர்? அவர்களுக்குத் தரப்படும் சம்பளம் என்ன? மாதம் எவ்வளவு தொகை உண்மையிலேயே தேவைப்படும் என்ற விவரங்களைத் திரட்டுவதில் புதிய இயக்குநர் குழு மும்முரமாக உள்ளது.

சத்யம் நிறுவனம் உடனடியாக செலுத்த வேண்டியுள்ள கடன் தொகை, சம்பளமாகத் தரவேண்டிய தொகை என இந்த மாதச் செலவுக்கு உடனடியாக ரூ. 1,700 கோடி தேவைப்படுகிறதாம்.

வெளியிலிருந்து வர வேண்டிய தொகையும் இதற்கு இணையாக உள்ளதால் சமாளித்துவிடலாம் என்று நினைத்த இயக்குநர்கள் குழு, இப்போது உள்ளே போய் பார்த்த பிறகு, சத்யத்தை நிர்வகிப்பது அத்தனை சுலபமான காரியமில்லை எனப் புரிந்து திகைக்கிறது.

இப்போதைக்கு நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் பேரில் கடன் பெற முடிவெடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி இதற்கு ஒப்புக் கொண்டு பரிந்துரைத்தால்தான் சத்யத்துக்கு அந்தக் கடனைக்கூடத் தர பிற வங்கிகள் முன்வரும் என்பது குறிப்பிடத்தக்கது!.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X