For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைத் தமிழர் நிதி சேகரிப்பு - அவதூறாக பேசிய ஜெ. மன்னிப்பு கேட்க வேண்டும் - கருணாநிதி நோடடீஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க நிதி திரட்டியது தொடர்பாக அவதூறான கருத்தை தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நிபந்தனயைற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி முதல்வர் கருணாநிதி சார்பில் ஜெயலலிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருணாநிதியின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்-அமைச்சர் கருணாநிதியின் அறிவுரையின் பேரில் உங்களுக்கு இந்த நோட்டீசை அனுப்புகிறேன். இலங்கை தமிழர் பிரச்சினை சம்பந்தமாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என்ற முறையில் நீங்கள் 22-ந் தேதி அறிக்கை ஒன்றை பத்திரிகைகள் மூலம் வெளியிட்டீர்கள். அதில், இலங்கை தமிழர்கள் நலனுக்காக முதல்-அமைச்சர் கருணாநிதி நிதி திரட்டியது பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள்.

நிதி சேர்ப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சியை நீங்கள் கொச்சைப்படுத்தினீர்கள். இந்த நிதி முழுவதும் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா? என்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தீர்கள். மேலும், முதல்-அமைச்சர் கருணாநிதியை ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டி நீங்கள் கூறிய வார்த்தைகள் மிகவும் அவதூறாக இருந்தன.

அந்த நிதியை முதல்-அமைச்சர் கருணாநிதி தனது குடும்பத்தினருக்காக எடுத்துக் கொண்டதாகவும், நிதியை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டதாகவும் கூறிய உங்கள் அறிக்கையால் மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துவிட்டது. நிதி எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது பற்றி 25-ந் தேதி முரசொலியில் முதல்-அமைச்சர் கருணாநிதி உங்கள் அறிக்கைக்கு பதிலளித்தார்.

நீங்கள் முதல்-அமைச்சராக பதவி வகித்தவர். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர். எனவே, இதுபோன்ற நிதியை திரட்டுவது, கணக்கு வைப்பது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கான நடைமுறைகள் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்து இருக்கும். இலங்கை தமிழர் நிவாரண நிதி என்ற பெயரில் செக்' மற்றும் டி.டி.' மூலமாக நிதி திரட்டப்பட்டது.

நிதித்துறையிடம் பல நபர்கள் பணமாக கொடுத்த சொற்ப தொகையான 64 ஆயிரத்து 80 ரூபாய் கூட, இதற்காக திறக்கப்பட்டு இருந்த கணக்கில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஒரு பைசா கூட கணக்கில் வைக்கப்படாமல் இல்லை.

முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றி அறிக்கை மூலம் நீங்கள் கூறிய கிண்டல் மற்றும் கருத்துகள் மிகவும் துரதிருஷ்டவசமானவை. இது அவரது நற்பெயருக்கு மிகுந்த களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. எனவே, இந்த நோட்டீசை உங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இலங்கையில் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் வழங்குவதற்காக மத்திய அரசின் அனுமதி பெற்று தமிழக அரசு நிதி திரட்டியது. எனவே அந்தத் தொகை முழுவதுக்கும் தமிழக அரசுதான் காப்பாளராகும். எனவே தனிப்பட்ட நபர் யாரும் அந்தப் பணத்தில் கை வைக்க முடியாது. அதுமட்டுமல்ல, தமிழக அரசின் செயல்பாடு எதுவும், அப்படிப்பட்ட நிதியில் கை வைக்க அனுமதிப்பதில்லை.

இலங்கை தமிழர்கள் படும் அவதியால் மிகுந்த துயரமடைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி தன்னையே வருத்திக் கொண்டு நாளும் பொழுதும் நிதி திரட்டினார். இது முழுக்க முழுக்க இலங்கையில் வாடும் தமிழர்களின் வாட்டத்தை போக்குவதற்காகத்தானே தவிர வேறு எதற்கும் இல்லை. இதுபோன்ற நிதியை திரட்டி கையாள்வதற்கும், செலவழிப்பதற்கும் முதல்-அமைச்சராக இருந்த உங்களுக்கு மற்றவர்களை விட நன்றாக தெரிந்து இருக்குமே.

உங்கள் ஆட்சி காலத்திலும் பல காரணங்களுக்காக நிதி திரட்டப்பட்டது. குறிப்பாக சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் உங்கள் ஆட்சியில் திரட்டப்பட்ட நிதிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதியும் தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். அரசின் சார்பாக நிதி கையாளும் முறை அனைத்தையும் தெரிந்திருந்தும் நீங்கள் வேண்டுமென்றே ஆதாரமற்ற, தீய நோக்கத்துடனான கருத்தை அவர் மேல் கூறி இருக்கிறீர்கள்.

முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் அரசு அதிகாரிகளின் நற்புகழுக்கு பொதுமக்கள் மத்தியில் களங்கத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக நீங்கள் உங்கள் அறிக்கை மூலம் வெளியிட்ட கருத்துகள் அனைத்தும் அவதூரானவை. உலகத் தமிழர்கள் அனைவரும் வாசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவதூறான கருத்துகளை வெளியிட்டு இருக்கிறீர்கள்.

நல்ல நோக்கத்தோடு அப்படிப்பட்ட கருத்துகளை நீங்கள் வெளியிடவில்லை. உங்கள் அறிக்கை முழுவதும் உள்நோக்கம் கொண்டது. இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு நீங்கள், அதுபற்றி நன்றாக சரிபார்த்து இருக்க வேண்டும். உண்மையை தெரிந்து கொள்ள விரும்பும் மக்கள் வாசிப்பதற்காக நீங்கள் வெளியிட்ட கருத்தில் உண்மையும் இல்லை, ஆதாரமும் இல்லை.

இலங்கை தமிழர்களை காப்பாற்றும் நோக்கத்தில் நல்ல செயலை செய்ய முயன்ற முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, உங்களால் பழிச்சொல்லை சுமக்க வேண்டியதாகி விட்டது. எனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி கொள்வதை நிறுத்துங்கள். உங்கள் குற்றச்சாட்டு அனைத்தும் அவதூறு என்பதால், இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி.) 499, 500, 501 ஆகிய பிரிவுகளின்படி தண்டனைக்கு உரியதாகும்.

எனவே, 22-ந் தேதி நீங்கள் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக, இந்த நோட்டீஸ் கிடைத்த பின் 3 நாட்களுக்குள் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், வேறு வழியில்லாமல் உங்கள் மீது அவர் கிரிமினல் வழக்கு தொடர வேண்டியதாகிவிடும்.

இந்த அவதூறை ஏற்படுத்தியதற்காக தகுந்த நஷ்டஈட்டை கோர்ட்டு மூலம் கேட்க கூடிய நிலை உருவாகிவிடும். இதனால் ஏற்படும் அனைத்து பின்விளைவுகளுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டியதிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X