For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்டர் இல்லாமல் தள்ளாடும் திருப்பூர் ஜவுளி ஆலைகள்

By Sridhar L
Google Oneindia Tamil News

Textiles
திருப்பூர்: பொருளாதார மந்தம், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கடும் போட்டி ஆகியவற்றால் திருப்பூர் நகர ஜவுளி நிறுவனங்களுக்கு உரிய ஆர்டர்கள் இல்லாமல் திணறி வருகின்றன.

ஏப்ரலுக்கு பின் எந்த ஆர்டரும் இல்லாத நிலையில் தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை ஆதாரமாக விளங்கும் திருப்பூர் பனியன் கம்பெனிகள் கலக்கம் அடைந்துள்ளன. தங்களுக்கு உதவ வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 6,250 ஜவுளி ஏற்றுமதி கம்பெனிகள் உள்ளன. இவை பெரும்பாலும் பனியன் மற்றும் உள்ளாடைகளை தயாரித்து வருகின்றன. இவற்றின் மூலம் 3.5 லட்சம் மக்கள் நேரிடையாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இங்கு தயாரிக்கப்படும் துணிகளில் 50-55 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கும், 30-35 சதவீதம் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்தாண்டு ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருமானம் 11 ஆயிரம் கோடி ரூபாய். உள்ளூர் சந்தையில் 4 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.

இந்தாண்டு இது சுமார் 15-20 சதவீதம் வரை குறையும் என தெரிகிறது. தற்போது கம்பெனிகளின் கைவசம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே ஆர்டர் உள்ளது. அதன் பின்னர் என்ன செய்வது என்பது தெரியாமல் விழி பிதுங்கியுள்ளனர். இதற்கு சீனா, வியட்நாம், பாகிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா போன்ற நாடுகள் கடும் போட்டியாளர்களாக இருப்பதே காரணம்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதி சங்க தலைவர் சக்திவேல் கூறுகையில்,

சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அரசுகள் தங்கள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அதிக சலுகை வழங்கி வருகின்றனர். ஜவுளி துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சீன அரசு கடந்த 4 மாதத்தில் மூன்றாவது முறையாக ஏற்றுமதி தள்ளுபடி செய்துள்ளது. அதை 9 சதவீதத்தில் இருந்து 17 ஆக உயர்த்தியுள்ளது. இதனால் சீன தயாரிப்புகள் நம்மவற்றை விட 5-6 சதவீதம் முன்னுரிமை பெற்றுள்ளது. அவர்களுக்கு இணையாக நாமும் விலை குறைப்பு செய்யவில்லை என்றால் ஆர்டர்கள் அனைத்தும் அவர்களுக்கே சென்றுவிடும்.

ஏற்றுமதியாளர்களுக்கு டாலர் அடிப்படையில் பணபரிவர்த்தனை நடைபெற வேண்டும் என்றார் சக்திவேல்.

இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் பொது இயக்குனர் அஜய் சஹாய் கூறுகையில்,

சீனாவை விட நம்நாட்டில் மூன்று மடங்கு அதிக சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. இது நமக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

ஆர்டர்களும் அதிகம் இல்லாததால் வங்கிகளிடம் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்ட முடியவில்லை. நமது ஊரில் வங்கிகள் 13 சதவீதம் வரை வட்டி வசூல் செய்கின்றன. ஆனால் சீனாவில் வங்கி வட்டி வெறும் 5.23 சதவீதம் தான்.

அரசு இதுவரை இரண்டு முறை உதவி செய்துள்ளது. ஆனால் இது போதுமானதாக இல்லை. விரைவில் எங்கள் பிரச்சினையை தீ்ர்க்க வேண்டும். இல்லையென்றால் 20 முதல் 30 சதவீத நிறுவனங்கள் இழுத்து மூடப்படும். ஏற்கனவை கடந்தாண்டை விட தற்போது ஏற்றுமதி 15 சதவீதம் குறைத்திருப்பதால் நிலைமை படுமோசமாகிவிடும்.

திருப்பூரை காப்பாற்ற அரசு ஏற்றுமதி தள்ளுபடியை 12 சதவீதமாக உயர்த்த வேண்டும். வருமான வரி செலுத்துவதிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்றார் அஜய்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X