For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேற்றும் 28 தமிழர்கள் படுகொலை - நாடகமாடுவதாக புலிகள் குற்றச்சாட்டு

By Sridhar L
Google Oneindia Tamil News

கொழும்பு: போர் நிறுத்தம் என்று கூறி விட்டு அப்பாவித் தமிழர்களை பீரங்கிகளால் தொடர்ந்து தாக்கி வருகிறது இலங்கை ராணுவம் என விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கை அரசின் 48 மணி நேர கெடு குறித்து விடுதலைப் புலிகள் பதிலளிக்காமல் இருந்தனர். இந்த நிலையில், இந்த போர் நிறுத்தம் ஒரு கண் துடைப்பு தொடர்ந்து ராணுவம் அப்பாவிகளை கொன்று குவித்துக் கொண்டுதான் உள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், வடக்கு போர் முனைப் பகுதியில் தமிழ் மக்கள் யாரையும் நாங்கள் கேடயமாக பயன்படுத்தவில்லை.

மோதல் பகுதியிலிருந்து வெளியேற விரும்புவது தனிநபரின் உரிமை என்பதிலும், அவர்கள் தங்கள் விருப்பத்தின்படி எங்குவேண்டுமானாலும் செல்லலாம் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எந்த ஒரு தனி நபருக்கு எதிராகவும் எந்த தடையையும் நாங்கள் விதிக்கவில்லை.

ஆனால், இலங்கை படையினரின் இனப்படுகொலை கரங்களில் சிக்கிக் கொள்ள விரும்பாத தமிழ் மக்களை விடுதலைப்புலிகள் பாதுகாப்பார்கள்.

பொதுமக்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.

இலங்கை அரசாங்கம் அறிவித்து இருக்கிற பாதுகாப்பு வளையங்களுக்கு ஐ.நா. மற்றும் இதர அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களின் கருத்துகளை தனிப்பட்ட முறையில் கேட்டறியவேண்டும்.

இலங்கை அரசு 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவித்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் இன்றும் (நேற்று) வழக்கம்போலவே பொதுமக்கள் குடியிருப்புகள், சந்தைகள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் என்று பாராமல் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களை இலங்கை படையினர் நடத்தி வருகின்றனர்.

28 பேர் படுகொலை

இந்த கொடூர தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள், பெண்கள் உள்பட 28 பேர் வரை கொல்லப்பட்டும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.

எனவே இலங்கை அரசின் போர் நிறுத்த அறிவிப்பானது உலகத்தை ஏமாற்றுவதற்கும், தமிழகத்தின் ஏழு கோடி தொப்புள் கொடி உறவுகளின் எழுச்சியை மழுங்கடிப்பதற்கான சூழ்ச்சியின் வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம்.

போர் நிறுத்தம் என்று இலங்கை அரசு அறிவித்தபோதிலும் இன்றும் தொடர்ச்சியாக உடையார்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள உலக கத்தோலிக்க திருச்சபையின் தொண்டு நிறுவனமான கியூடெக் நிறுவனத்தின் மீதும் இலங்கை படையினர் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டதால் அங்குள்ள உணவுக்களஞ்சியங்கள் எரிந்த வண்ணம் உள்ளன.

அத்துடன், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் நிலை கொண்டுள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் அண்மையில் உள்ள பிரதேசங்களிலும் தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளன.

இதனால் அங்குள்ள நோயாளிகள், மருத்துவர்கள் மிகவும் அச்சமும், பதற்றமும் அடைந்த நிலையில் உள்ளனர்.

உடையார் கட்டு, தேராவில் மற்றும் பல பகுதிகளில் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து பதுங்கு குழிகளை நோக்கி ஓடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தவிர, அப்பாவி மக்களின் மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இலங்கை அரசுதான்.

அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்போடு ஏற்படுத்துகின்ற நிரந்தரமான போர் நிறுத்தமும், அதனுடன் கூடிய அரசியல் பேச்சுவார்த்தையுமே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தும் என்று தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும் நம்புகின்றனர் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X