For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்களுக்கு வாய்ப்புகள் காத்துள்ளன-செல்வம்

By Sridhar L
Google Oneindia Tamil News

selvam
-கே.என்.வடிவேல்

தமிழகத்தில் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் போன்ற தலித் சமுதாயத்தினருக்காக போராடும் கட்சிகள் துளிர் விட்ட போது அதன் பாதை, பார்வை பற்றி பரவலாக ஒரு பரபரப்பு நிலவியது.

தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் தற்போது வலுவாக கால் ஊன்ற அதன் தலைமை பலவித முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தின் முன்னணி பிரபலங்கள் மற்றும் தமிழக அரசின் முக்கிய பதவிகளை வகித்த அதிகாரிகள் கூட விரும்பி இணையும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந் நிலையில், அக் கட்சியின் தமிழக தலைவரான செல்வம் என்ற செல்வப் பெருந்தகையை சிறப்பு பேட்டிக்காக சந்தித்தோம்.

அவரது பேட்டி:

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்ததற்கும் இப்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இருப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?

இந்தியாவில் உள்ள பெரிய கட்சிகளில் ஒன்று பகுஜன் சமாஜ் கட்சி. இந்த கட்சி மற்றவர்களுக்கு சீட் ஒதுக்கும் நிலையில் உள்ள கட்சி. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நமக்கு தொகுதி ஒதுக்குவார்களா என்ற நிலையில் தான் உள்ளது. மக்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்து அரசியல் அதிகாரத்தை பெற்றுத்தர வேண்டும் என்று பிஎஸ்பி போராடி வருகிறது. தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள் 4 அல்லது 5 தொகுதிகள் யார் கொடுத்தாலும் போதும் என்ற நிலையில் உள்ளனர். பிஎஸ்பி-யின் பார்வை, கொள்ளை கோட்பாடுகள் வேறு, முன்பு நான் இருந்த கட்சியின் கொள்கை கோட்பாடு வேறு. ஒருமுறை திமுகவுடன் கூட்டணி, மறுமுறை அதிமுகவுடன் கூட்டணி. அதற்கு முன்பு மூப்பனாருடன் கூட்டணி என்று நிலைமை இருந்தது. ஆனால் பிஎஸ்பி மக்களுடன் தான் கூட்டணி என்பதை நிரூபித்து காண்பித்துள்ளது.

இரு கட்சிகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன?

மக்களுக்கு பிரச்சனை என்றால் உடனே போராட்டத்தில் இறங்கலாம். பொதுவுடமை கட்சிகள் முன்பு திமுக கட்சியில் இருந்தனர். அப்போது அவர்கள் திமுக அரசை எதிர்த்து கடுமையாக போராட முடியாமல் இருந்தனர். பின்பு அதிமுக கூட்டணிக்கு சென்ற போது அதிமுக சொல்லும் கருத்துக்கு கூட பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர். ஆனால் பிஎஸ்பி அப்படி அல்ல. மக்களுன் தான் கூட்டணி என்பதால் மக்கள் பிரச்சனைக்காக எங்கும் எப்போதும் போராடலாம். இது தான் வேறுபாடு.

பிஎஸ்பியில் ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்து வருவது பற்றி?

அவர்களுக்கு இதுவரை சரியான அரசியல் களம் கிடைக்காமல் இருந்திருக்காலம். அல்லது அரசியல் திருப்திகரமாக இல்லாமல் இருந்திருக்கலாம். எனக்கு இருக்கும் நெருக்கடி என்னவென்றால் வரும் தலைவர்களுக்கு எல்லாம் உரிய முறையில் பொறுப்புக்கள் வழங்க முடியாமல் உள்ளோம். இந்தியாவில் உள்ள தலைவர்களிடையே எங்கள் தலைவர் மாயாவதிக்கு பண்முக பண்பு உள்ளது. தன்னுடைய கட்சி எம்எல்ஏ, அமைச்சர்கள், எம்பிக்கள் என யார் தவறு செய்தாலும் அவர்கள் தனது கட்சினர் தான் என்று சலுகை காட்டாமல் அவர்களை கூட சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவிடாமல் நீதியின் முன்பு துணிச்சாலக நிறுத்துகின்றார். ஆனால் தமிழகத்தில் கடந்த காலத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது போட்டப்பட்ட வழக்குகள், சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எல்லாம் விசாரணை என்ற பெயரில் மூடி விடுகின்றனர்.

பிஎஸ்பி தலித் மக்களுக்கான கட்சி என்ற கருத்து உள்ளதே?

பிஎஸ்பி தலித்துக்களுக்கான கட்சி என்று கூறுவதை ஏற்க முடியாது. பிஎஸ்பி ஒரு தேசிய கட்சி என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தலித் கட்சி என்று கூறி அதை ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்து விட முடியாது. பிஎஸ்பி இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்கான கட்சி என்று குறிப்பிடுவதே சரி. பிஎஸ்பி எல்லா மக்களுக்கான கட்சி என்பதால் தான் பல்வேறு தரப்பு மக்களும் இதில் இணைந்து வருகின்றனர்.

நாடளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி?

இதுவரை யாருடனும் கூட்டணி என்று அறிவிக்கவில்லை. தமிழக தேர்தல் களத்தில் நாங்கள் தனியாகத் நின்று வென்று காட்டுவோம். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், பாண்டியில் உள்ள ஒரு தொகுதிக்கும் என மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு செய்து வருகிறோம்.

பிஎஸ்பியில் உங்களுக்கு மிகவும் மன நிறைவு தரும் விஷயம் எது?

பிஎஸ்பி கட்சியின் கொள்ளைகள், கோட்பாடுகளை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளேன். ஒழுக்கமான கட்சி. தொண்டர்கள் விசில் அடிப்பதை கூட விரும்பாத கட்சி. ராணுவ கட்டுக் கோப்புடன் உள்ள கட்சி என்பதை பெருமையாக சொல்ல விரும்புகிறேன். அனைத்து மக்களுக்கான கட்சி என்பதை நினைவில் வைத்து செயல்பட்டு வருகிறேன். எங்கள் கட்சியில் தலித் தலைவர் படகை மட்டுமே செலுத்துவார். அதில் அமர்ந்து வருபவர்கள் எல்லா இனத்தவர்களும் சரிசமாக இருப்பார்கள். இதுவே எங்கள் கட்சி அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎஸ்பியை வளர்ப்பதில் உள்ள சவால்கள் என்ன?

பிஎஸ்பி கட்சியை நான் வளர்ப்பது பற்றி நானே சொல்லி பத்திரிக்கையாளர்களுக்கு தெரிய வேண்டிய நிலை இல்லை. நான் இந்த கட்சியில் நவம்பர் 11ம் தேதி பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். அன்று முதல் இரவு பகல் பாராமல் கட்சியை வளர்ப்பதில் உறுதியாக நின்று உழைத்து வருகின்றேன். பேராசிரியர் தீரன், ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி, ஐபிஎஸ் அதிகாரி காளிமுத்து போன்றவர்கள் இணைந்துள்ளனர். காரணம் பிஎஸ்பி திறந்த புத்தகம். இங்கு குழு அரசியல் இல்லை. போட்டி அரசியல் இல்லை. நாங்கள் அனைவரும் எங்கள் தலைவர் மாயாவதி கட்டளையை ஏற்று பணியாற்றி வருகிறோம்.

தமிழகத்தில் பிஎஸ்பி எந்த காலத்திலும் வளர்ந்துவிட முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளது பற்றி?

உத்தரப் பிரதேசத்திலே அப்படி பலர் சொன்னதுண்டு. இருந்தாலும் அங்கு எங்கள் தலைவர் மாயாவதி ஆட்சி அமைத்தார். தமிழகத்தைப் போல இரண்டு மடங்கு பெரிய மாநிலம். அங்கு 80 எம்பிக்கள், 400 எம்எல்ஏக்கள் உள்ள பெரிய மாநிலம். ஆதிக்க பிடியில், வரனாசிரமம் மிகுந்து காணப்பட்ட மாநிலம். அந்த மாநிலத்திலே தனித்து நின்று ஆட்சி அமைத்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கார் போன்றவர்கள் எல்லாம் களம் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

அதனால், தமிழகத்தில் ஆட்சி அமைப்பது என்பது பெரிய கடினமான விஷயம் இல்லை. எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் காத்துள்ளன என்றார் செல்வப்பெருந்தகை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X