For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடங்கியது பெங்களூர் விமானக் கண்காட்சி

By Sridhar L
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஆசியாவின் மாபெரும் விமானக் கண்காட்சியான ஏரோ இண்டியா-2009 இன்று பெங்களூரில் தொடங்கியது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சர்வதேச கண்காட்சி வரும் 15ம் தேதி வரை நடக்கும். எலஹங்காவில் உள்ள இந்திய விமானப் படை மையத்தில் நடக்கும் இந்தக் கண்காட்சியில் இந்தியா உள்பட 25 நாடுகளைச் சேர்ந்த 592 விமான நிறுவனங்கள், ஆயுத நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இந்த கண்காட்சியில் பல பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7வது முறையாக நடக்கும் இந்தக் கண்காட்சியில் முதல் முறையாக இந்த ஆண்டு சீனா பங்கேற்கிறது. அந் நாட்டு விமானப் படை துணைத் தலைவர் தலைமையில் பெரிய குழு பெங்களூர் வந்துள்ளது.

இதைத் தவிர அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, ஆஸ்திரேலியா, செக், பெல்ஜியம் உள்பட விமான, ஆயுதத் துறையில் முன்னணியில் உள்ள நாடுகளும் இதில் பங்கேற்று தங்களது நவீன போர் விமானங்கள், பயணிகள் விமானங்கள், ஆயுதங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் ஆகியவற்றை காட்சியில் வைத்துள்ளன.

5 நாட்களும் இந்த நாடுகளின் போர் விமானங்களின் சாகஸ நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன. மேலும் இந்த நாடுகள் பல அரங்குகளையும் அமைத்து தங்களது விமானங்கள், ஆயுதங்கள் குறித்த விளக்க நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளன.

இதில் அமெரிக்காவின் எப்-16, எப்-18, சூப்பர் ஹார்னர், சி-17 சரக்கு விமானம், ரஷ்யாவின் மிக் 35டி, சுகோய், ஏஎன்-13 சரக்கு விமானம், ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்பான ஈரோ பைட்டர், இங்கிலாந்தின் ஹாக், ஆளில்லா உளவு விமானம், இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானம் ஆகிய போர் விமானங்கள் தங்களை செயல்பாடுகளை விளக்கி சாகஸ நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளன.

இந்தியா தயாரித்துள்ள ஐஜேடி விமானம், துருவ் ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் சாகஸங்கள் செய்து காட்டும்.

மேலும் எம்ப்ரேயர், ஜெட் லெகசி, சைடேசன் ஆகிய பயணிகள் விமான நிறுவனங்களும் தங்கள் விமானங்களுடன் பெங்களூரில் தரையிறங்கியுள்ளன.

இந்த விமானக் கண்காட்சி இந்திய பாதுகாப்புத்துறையின் உதவியோடு நடத்தப்படுகிறது. இதில் சீனா தவிர பிரான்ஸ், பெரு, பொலிவியா, சுரினாம், மங்கோலியா, ஓமன், மாலத்தீவுகள் நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் உள்பட 40 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானக் கண்காட்சி நடக்கும் பகுதி முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய விமானப் படை 126 போர் விமானங்களையும், 197 ஹெலிகாப்டர்களையும் வாங்க திட்டமிட்டுள்ளது. பல பில்லியண் டாலர் மதிப்புள்ள இந்த காண்ட்ராக்டை வெல்ல அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, செக் ஆகிய நாடுகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தங்களது எப்-16, 18 ஆகிய விமானங்களை வாங்குமாறு அமெரிக்காவும், மிக்-35 டியை வாங்குமாறு ரஷ்யாவும் இந்தியாவை நெருக்கி வருகின்றன. அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுத் தயாரிப்பான ஈரோ பைட்டரை விற்கும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் ஆகியவை இறங்கியுள்ளன.

அதே போல ஹெலிகாப்டர்களை விற்கவும் அமெரிக்காவின் பெல், ரஷ்யா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதற்கிடையே இந்தியா தயாரித்துள்ள துருவ் ஹெலிகாப்டர்களை இந்தக் கண்காட்சியில் ஈக்வடார் வாங்கவுள்ளது.

இன்று காலை இந்திய விமானப் படையின் போர் விமானங்களின் சாகஸங்களுடன் இந்த கண்காட்சி தொடங்கியது. சுகோய் 30, மிராஜ் 2000, ஜாகுவார், மிக்-21, ஹாக் ஆகிய விமானங்களும், கிரண் ரக பயி்ற்சி விமானங்கள், இந்தியா தயாரித்துள்ள எல்சிஏ தேஜாஸ் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மலைக்க வைக்கும் சாகஸங்களை நிகழ்த்திக் காட்டின.

நடுவானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் காட்டி பார்வையாளர்களை குதூகலமிட வைத்தது இந்திய விமானப் படை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X