For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களைக் காப்பாற்ற ஐ.நாவை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் - துணைக் குழு

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் போரில் உயிரிழந்து வரும் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் துணை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தமிழர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக, இலங்கை தமிழர் நல உரிமைப்பேரவை என்ற அமைப்பு திமுகவால் உருவாக்கப்பட்டது. இந்த பேரவைக்கு உலக அமைப்புகளில் ஆதரவை திரட்டுவதற்காக துணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. துணை குழுவின் அமைப்பாளராக சட்ட அமைச்சர் துரைமுருகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் இந்த குழுவின் செயலாளராகவும், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மோகன், கோகுலகிருஷ்ணன், பாஸ்கரன், ஏ.கே.ராஜன், ஜனார்த்தனம், சாமிதுரை, சண்முகம் மற்றும் பேராசிரியர் ஆர்.வி.தனபாலன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

துணைக்குழுவின் முதல் கூட்டம், சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கார்ட் நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு அமைப்பாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.

துணைக்குழுவின் செயலாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கருத்துகளை எடுத்து வைத்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதுபற்றி துரைமுருகன், கி.வீரமணி, ராசா, கனிமொழி ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நேரிடும் துயரத்தை தடுத்து நிறுத்துவதற்காக, மனித நேயத்திலும், மனச்சாட்சியிலும் நம்பிக்கை கொண்டுள்ள நாடுகள், அமைப்புகளை இணைப்பதற்கும், அவர்களின் உதவியை பெறுவதற்கும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவையையும், அதற்கு துணைபுரிவதற்காக துணைக்குழுவையும் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். இது அரசு சார்பற்ற அமைப்பு.

இந்த துணைக்குழுவின் முதல் கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் அடிப்படையில் சில முடிவுகளை இந்த துணைக்குழு எடுத்துள்ளது.

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு தனி அமைப்பாக இந்த துணைக்குழு செயல்பட முடியாது.

எனவே, இலங்கை படுகொலைகளை தடுத்து நிறுத்தி, அமைதியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. சபையை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்தக் குழு தீர்மானித்துள்ளது. இதற்காக மத்திய அரசிடம் விண்ணப்பிக்க இருக்கிறோம்.

இந்த துணைக்குழுவுக்கு ஒத்த கருத்துடைய அமைப்புகளும் எங்களுடன் இணையலாம்.

இலங்கை விவகாரத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி உலகத்தில் உள்ள அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் எடுத்துச் சொல்ல முடிவு செய்துள்ளோம். மேலும் இங்குள்ள அனைத்து நாட்டு தூதரக அதிகாரிகளையும் சந்தித்து நேரடியாக மனு கொடுத்து அவர்களின் ஆதரவை பெற தீர்மானித்துள்ளோம்.

உலக அளவில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான எண்ணத்தை உருவாக்கவும், மனச்சாட்சியுள்ள அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியை தொடரவும் முடிவு செய்துள்ளோம். விண்ணப்ப மனு எழுதுவதற்கு நீதிபதிகள் மோகன், சண்முகம் மற்றும் தனபாலன் ஆகியோரை கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

இந்த துணைக்குழு 14-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் கூடி விவாதிக்கும். எந்தெந்த அமைப்புகள் இந்த துணைக்குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்பதை அப்போது பட்டியலிட இருக்கிறோம்.

சேர விரும்பும் அமைப்புகள், 044-24472666 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு கருத்து தெரிவிக்கலாம்.

கோரிக்கை விண்ணப்பங்கள் அனைத்தும் 14-ந் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு விடும். இலங்கையில் போர் நிறுத்தம் என்ற கருத்தும் விண்ணப்பத்தில் இடம் பெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X