For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா சதி: ஜெ. கண்டனம்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் சிறந்த சட்ட நிபுணர்களின் உதவியுடன் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, கேரள மாநில அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டுக்கட்டை போட முயலும் கேரள அரசின் சதித் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு பயன்படும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கேரள அரசால் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது.

இந்த பிரச்சனையில் எனது ஆட்சிக் காலத்தில் எடுத்த உறுதியான நடவடிக்கையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், ஆய்வுக்கு பின்னர் படிப்படியாக 152 அடி வரை நீரை தேக்கி வைத்துக்கொள்ளலாம் என்று 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு நேர்மாறாக, உச்சநீதிமன்ற தீர்ப்பின் செயல்பாட்டை தடுக்கும் நோக்கத்தில், கேரள அரசு சட்டசபையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து அந்தச் சட்டத் திருத்தத்தை 18.3.2006 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், கேரள அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து எனது தலைமையிலான அரசு 27.3.2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

பின்னர் ஆட்சி பொறுப்பை ஏற்ற முதல்-அமைச்சர் கருணாநிதி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அணையின் கைப்பிடிச்சுவர் ஆறு அடி நீளத்திற்கு உடைக்கப்பட்டது.

பின்னர் கேரள அரசு, முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணி திட்டமிட்டபடி தொடங்கும் என்று அறிவித்தது.

இந்த சூழ்நிலையில், கேரள அரசின் சட்டத்திருத்தத்தை எதிர்த்து எனது ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்த போது, அணையின் பாதுகாப்பு தொடர்பான நிபுணர் குழுவினரின் அறிக்கை குறித்து நடுநிலையான அமைப்பை கொண்டு ஆராயலாமா என்ற அளவில் உச்ச நீதிமன்றத்தால் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிய வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் இது போன்ற வினாவின் மூலம், தமிழ்நாட்டின் சார்பில் சரியான வாதத்தை தமிழக அரசு வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கவில்லையோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

அணையின் பாதுகாப்பு தொடர்பான நிபுணர் குழுவினரின் அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் தான், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனவே, மீண்டும் ஆராய்ச்சி என்பது இந்த பிரச்சினையை கிடப்பில் போடுவதற்கு சமமாகும்.

எனவே, முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் சிறந்த சட்ட நிபுணர்களின் உதவியுடன் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, கேரள மாநில அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, முட்டுக்கட்டை போட முயலும் கேரள அரசின் சதித் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X