For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னைக்குள் இலங்கை ஒற்றர்கள் ஊடுறுவல்: ராமதாஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

திண்டிவனம்: இலங்கையிலிருந்து ஒற்றர்களும், கைக்கூலிகளும் தமிழகத்திற்கு குறிப்பாக, சென்னை நகருக்குள் வந்துள்ளனர். இலங்கை அரசின் ஆதரவோடு ராஜ மரியாதையுடன் இங்கே அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

இலங்கை பிரச்சினை என்பது விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை போர் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல் என்றும், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்றும் மட்டுமே இந்தியா கருதுகிறது. இந்தியாவின் இந்த கண்ணோட்டத்தில், இந்த பிராந்தியத்தில் மாறி வருகிற சூழ்நிலையை மனதில் கொண்டு தீவிரமான மாற்றம் ஏற்பட வேண்டும்.

இந்தியாவின் பகை நாடு பாகிஸ்தான், சீனாவும் நமக்கு பகை நாடு என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும் நமக்கு நட்புநாடல்ல. இந்த இரு நாடுகளும் இலங்கையில் இப்போது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. இலங்கை போர்ப்படைக்கு தேவையான கன ரக ஆயுதங்களையும், எறிகணைகள் போன்ற குண்டுகளையும் சீனா வழங்கி வருகிறது. அத்துடன் திரிகோண மலையில் சீனாவின் கப்பற்படை தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

அம்மன்தோட்டை என்ற இடத்தில் சீனா ஒரு முழு அளவிலான துறைமுகத்தை கட்டிக்கொண்டு வருகிறது. இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டால், அது சீனாவின் பராமரிப்பிலேயே இருந்து வரும்.

அதிபர் ராஜபக்சே தனது இளம் வயதில் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தவர். அதுவும் சீனா சார்புடைய கம்யூனிஸ்டு பிரிவைச் சேர்ந்தவர், அவர் பதவிக்கு வந்த நாளிலிருந்து சீனாவுடன் மிக நெருக்கமாக உறவு வைத்துக் கொண்டு வருகிறார்.

இலங்கையுடன் வைத்துள்ள உறவின் மூலம் இந்து மகா சமுத்திரம், வங்காள விரிகுடா ஆகியவற்றில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

இன்னொரு புறத்தில் பாகிஸ்தானும், இலங்கைக்கு பெருமளவில் ஆயுத உதவியும், போர் படைபயிற்சியும் அளித்து வருகிறது. இலங்கையைச் சேர்ந்த உளவுப்படையையும் பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. உளவுப் படையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

இதன் காரணமாக அண்மையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அந்த பயிற்சி அளிக்கப்பட்டு திரும்பியிருக்கிறார்கள்.

இந்த படையினரால், இந்தியாவுக்கு பெரும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையம், கல்பாக்கம் அனல் மின் நிலையம் போன்ற இந்தியாவின் கேந்திரமான இடங்களுக்கு அச்சுறுத்தல் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி நாடு உருவானால், அது இந்தியாவின் நட்பு நாடாக விளங்கும் சிங்களர்களை விட தமிழர்கள் உண்மையாகவும், நட்புறவு கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். சிங்களர்களை நம்பி இந்தியா ஏமாந்து விடக்கூடாது.

வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் மாற்றங்களை செய்வதன் மூலம் இலங்கையுடனான உறவை மறுபரிசீலனை செய்வதற்கு இந்திய அரசு முன் வரவேண்டும்

இலங்கையில் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் மிக குறுகிய பகுதியில் தஞ்சம் புகுந்து உணவு, தண்ணீர் இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வளையங்களெல்லாம் போர்க்கைதிகளை அடைத்து வைக்கும் திறந்த வெளி சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் செய்திகள் வருகின்றன.

அந்த திறந்த வெளி சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களை நாள் தோறும் கடத்திச் சென்று கொன்று குவிக்கிறார்கள். இளம் பெண்களை கடத்திச் சென்று கற்பழித்து பின்னர் கொல்லுகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. மருத்துவமனைகள் தாக்கப்படுகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் முல்லைத் தீவு பகுதியிலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று இலங்கை அரசு கெடு விதித்து எச்சரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே அங்கிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த அலுவலர்களை வெளியேற்றக்கூடாது என்றும், அவர்களை அங்கிருந்து திரும்பி அழைக்கக் கூடாது என்றும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து தந்திகளை அனுப்பி வைக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான தந்திகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு சென்றடைய வேண்டும்.

தொலைபேசி, பேக்ஸ், இ-மெயில், தந்தி போன்றவை மூலம் இந்திய வேண்டுகோள்களை உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

ஒற்றர்கள் ஊடுறுவல்

இலங்கையில் அரசுக்கு விரோதமானவர்கள் என்று கருதும் நபர்களையெல்லாம் இலங்கை போர்ப்படையை சேர்ந்த உளவுப்படையினர் கடத்திச்சென்று படுகொலை செய்து வருவதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது.

இதற்காக ராணுவத்தை சேர்ந்த உளவுப்படையினர் ஒயிட்வேன் என்ற வாகனத்தை பயன்படுத்தி கடத்திச்சென்று கொன்று வருவதாக சொல்லப்படுகிறது. இதுவரையில் இத்தகைய கடத்தல் மூலம் 8000 முதல் 10000-க்கும் மேற்பட்ட நபர்கள் கடத்தி செல்லப்பட்டு திரும்பி வரவில்லை என்று சொல்கிறார்கள்.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள் மற்றும் கொலைகள் இவ்வாறுதான் நடந்துள்ளன.

இப்போது இந்த அச்சுறுத்தல் தமிழகத்திற்கும் பரவியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக இலங்கையிலிருந்து ஒற்றர்களும், கைக்கூலிகளும் தமிழகத்திற்கு குறிப்பாக, சென்னை நகருக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழக அரசும், காவல்துறையும் இதில் இன்னமும் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இலங்கையிலிருந்து இப்படி வந்திருப்பவர்கள் படகுகளில் திருட்டுத்தனமாக வரவில்லை என்றும், இலங்கை அரசின் ஆதரவோடு ராஜ மரியாதையுடன் இங்கே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு எதிரே உள்ள கென்னத்லேன் எனப்படும் சாலையில் அமைந்துள்ள இலங்கை புத்தமத கோவில் இத்தகைய ஒற்றர்களுக்கு தஞ்சம் அளிக்கும் களமாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது.

இலங்கை ஒற்றர்கள் மட்டுமின்றி பாகிஸ்தானின் ஒற்றர் படையான ஐ.எஸ்.எஸ். ஏஜெண்டுகளும் எழும்பூரில் உள்ள அந்த புத்தமத கோவில் வளாகத்தில் தனி அலுவலகம் வைத்து செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

அத்துடன் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் அலுவலகத்திலும் அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமாக அலுவலர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபற்றியெல்லாம் தமிழக காவல்துறை உளவுப்படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இந்த இடங்களையும், சென்னையில் உள்ள இலங்கைத்தூதர் அலுவலகத்தையும், எழும்பூரில் உள்ள இந்த புத்தமத கோவில் வளாகத்தையும் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு, நல்லுறவு, எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்து ஆகியவற்றை மனதில் நிறுத்தி இந்திய அரசு உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று இந்தியா அறிவித்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது.

ஆனால் அது மட்டும் போதாது. போரை நிறுத்து என்று கட்டளையிட வேண்டும். போர் நிறுத்தப்படாவிட்டால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும். நமது போர்ப்படையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை இந்தியா திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள், இந்தியாவைச் சேர்ந்த செயற்கைக்கோள்கள், உளவு விமானங்கள் உள்ளிட்ட அனைத்து சாதனங்களின் உதவியையும் இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கை சிக்கலை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் மார்ச் 16-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் 4-வது விவாத பொருளாக எடுத்துக்கொள்ள உள்ளது. இதற்கான முயற்சியை என்னை நிறுவனராக கொண்டு செயல்படும் பசுமை தாயகத்தின் வாயிலாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X