For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருமானவரி அலுவலகங்கள் முற்றுகை-பலர் கைது

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு மத்திய அரசு உதவுவதாகக் கூறி அதைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய நகரங்களில் வருமான வரித் துறை அலுவலகங்களை இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் முற்றுகையிட்டனர்.

இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் விடுத்த அழைப்பின்படி இந்தப் போராட்டம் நடந்தது.

சென்னையில்...

காலை 10.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்டோர் உரையாற்றினர்.

பின்ன பேரணியாக புறப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சையில்..

தஞ்சை கோட்டைச் சாலையில் அமைந்துள்ள வருமானவரித் துறை அலுவலகமும் இன்று முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சோலை மாரியப்பன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிவகாளிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் பாத்திமா நகரிலிருந்து பேரணியாக புறப்பட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவையில்..

கோவை பந்தயச் சாலையில் அமைந்துள்ள வருமானவரித் துறை அலுவலகத்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பாரதி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அறிவுடை நம்பி உள்ளிட்ட பலர் முற்றுகையிட்டனர்.

பி்ன்னர் அரசினர் கலைக் கல்லூரியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில்...

மதுரை பி.பி.குளம் சாலையில் அமைந்துள்ள வருமானவரித் துறை அலுவலமும் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழகம் மாயாண்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

"சிங்களன் உனக்கு பங்காளியா? தமிழன் உனக்கு பகையாளியா? இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து மூடு" என்ற முழக்கங்களுடன் அவர்கள் வருமானவரித் துறை அலுவலக நுழைவு வாயில் வரை செல்ல முயன்றனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில்....

அதே போல ஈரோடு காந்திஜி சாலையில் அமைந்துள்ள வருமானவரித் துறை அலுவலகத்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன் தலைமை தலைமையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ச.அர.மணிபாரதி உள்ளிட்ட பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில்..

சேலம் வீரபாண்டி நகரில் அமைந்துள்ள வருமானவரித் துறை அலுவலகத்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமை தலைமையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் மாரிமுத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேலம் மாவட்ட அமைப்பாளர் பிந்துசாரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் க.சேகர், தமிழர் தேசிய இயக்கம் சிவப்பிரியன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியன் உள்ளிட்டோர் முற்றுகையிட்டனர்.

இதில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில்...

புதுச்சேரியிலும் வருமானவரித் துறை முற்றுகையிடப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் பெரியார் திராவிடர் கழகத்தினரும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவுடன் அவர்கள் கடலூரில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்துப் பலியான தமிழ்வேந்தனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்க கடலூர் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X