For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீயணைப்புத் துறை வீரர்களைத் தாக்கி அதிகாரி ஜீப்புக்கு தீவைத்த வக்கீல்கள்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் நேற்று மீண்டும் வன்முறையில் குதித்தனர். தீயணைப்புத் துறை அதிகாரியின் ஜீப்பைத் தீவைத்துக் கொளுத்தினர். பின்னர் தீயணைப்பு வீரர்களையும் தாக்கினர்.

நேற்று முன்தினம் நடந்த உயர்நீதிமன்ற வன்முறைக்குப் பின்னர் நேற்று தமிழகம், புதுச்சேரியில் நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

வன்முறைக் களமாக மாறிய உயர்நீதிமன்ற வளாகம் நேற்றும் பரபரப்புடனும், பதட்டத்துடனும் காணப்பட்டது. இதனால் கோர்ட்டுக்கு வெளியே பெரும் திரளான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

காவல் நிலையத்தை மீண்டும் எரித்தனர்..

அப்போது நேற்று முன்தினம் தீவைத்து எரிக்கப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு வக்கீல்கள் சிலர் நேற்று மாலை வந்தனர். அங்கு எரியாமல் இருந்த பகுதிகளுக்கு மீண்டும் தீவைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அருகில் உள்ள பெரிய மரமும் தீபிடித்து எரிந்தது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டியில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், போலீசார் யாரும் உள்ளே வரவில்லை. அதன் பின்னர், கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் 200 பேர் ஒன்று கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

இந்த சமயத்தில், தீவிபத்து பகுதியை பார்வையிட்டுவிட்டு வடசென்னை கோட்ட அலுவலர் வேலாயுத நாயர், தீயணைப்பு துறை வீரர்கள் வில்லியம், வேலுச்சாமி ஆகிய 3 பேர் ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர்.

வெறித்தனமாக தாக்கினர்

அவர்களை வக்கீல்கள் வழிமறித்து சரமாரியாகத் தாக்கினர். ஜீப் கண்ணாடிகளை கட்டையால் அடித்து உடைத்தனர். கோர்ட் வாயில் கதவையும் பூட்டிவிட்டு உள்ளே சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில், ஜீப்பில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

வக்கீல்களின் வெறித் தாக்குதலிலிருந்து தப்பிய தீயணைப்புப் படையினர் வெளியே ஓடிவந்தனர். பின்னர், வக்கீல்கள் அந்த ஜீப்பை கோர்ட்டு முன்பு சாலைக்கு தள்ளிக்கொண்டு வந்தனர். அப்போது சிலர் அந்த ஜீப்பை தீவைத்து எரித்தனர். அப்போது அதை படம் பிடித்த டி.வி. காமிராமேன் ஒருவரையும் தாக்கினார்கள். காமிராவும் அடித்து நொறுக்கப்பட்டது.

நடுரோட்டில் ஜீப் தீப்பிடித்து எரிந்ததால், சாலையில் சென்ற பொதுமக்கள் பதட்டத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

ஆனால் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு சில அடிகள் தொலைவில் உள்ள எஸ்பிளனேடு காவல் நிலையம் முன்பு நின்றிருந்த நூற்றுக்கணக்கான போலீஸார் இப்பகுதிக்கு வரவே இல்லை.

தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் காரணமாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையில் பதட்டமாக இருந்தது. இன்று மட்டுமல்ல கடந்த 2 தினங்களாகவே இப்பகுதி வழியாக போவோர் பெரும் பீதியுடன்தான் பயணிக்க வேண்டியுள்ளது. எப்போது வன்முறை மூளும், எப்போது சாலை மறியல் நடக்கும் என்று தெரியாமல் அப்பாவி பொதுமக்கள் பெரும் அவலத்துடனும், பீதியுடனும், இந்தப் பகுதியை நாள்தோறும் கடக்க வேண்டிய துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட வக்கீல்கள்

இதற்கிடையே, நேற்று இரவில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் 64 வக்கீல்கள் தங்கியிருந்தனர். இவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபடும் திட்டத்துடன் தங்கியிருப்பதாக தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாயாவுக்கு தகவல் போனது.

இதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்திற்கள் வக்கீல்கள் யாரும் இருக்கக் கூடாது. அவர்களை உடனடியாக வெளியேற்றுங்கள் என்று காவல்துறைக்கு முகோபாத்யாயா உத்தரவிட்டார்.

இதையடுத்து கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் விரைந்தனர். அவருடன் ஆயிரம் போலீஸார் தலையில் இரும்புத் தொப்பியுடனும், லத்திகளுடனும் வந்தனர்.

உயர்நீதிமன்றத்தைச் சுற்றிலும் போலீஸார் பாதுகாப்பு வளையம் போல நிறுத்தப்பட்டனர். பின்னர் மற்ற போலீஸார் அனைவரும் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள தீயணைப்பு அலுவலகம் அருகே நிலை கொண்டனர்.

பின்னர் கையில் ஒலிபெருக்கியுடன் உள்ளே சென்ற கமிஷனர் ராதாகிருஷ்ணன், அரை மணி நேரம் அவகாசம் அளிக்கிறோம். அனைவரும் வெளியேறி விடுங்கள். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வந்துள்ளோம். யாரும் உள்ளே இருக்கக் கூடாது என்று கூறினார்.

ஆனால் ஐந்தே ஐந்து வக்கீல்கள் மட்டுமே இந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு வெளியேறினர். மற்றவர்கள் உள்ளேயே இருந்தனர். இதனால் கோர்ட்டுக்குள் புகுந்து வக்கீல்களை வெளியேற்ற போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற சூழ்நிலை எழுந்தது.

அந்தசமயத்தில், வக்கீல்கள் சங்கத் தலைவர் பால். கனகராஜ், மூத்த வக்கீல் வைகை ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

கமிஷனருடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியின் உத்தரவை அவர்களிடம் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையடுத்து 12 பெண் வக்கீல்கள் உள்பட உள்ளே இருந்த வக்கீல்கள் அனைவரும் வெளியேறினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த வக்கீல்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டோம்.

தற்போது தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் உயர்நீதிமன்ற வளாகம், போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக அங்கு குவிந்த பத்திரிக்கையாளர்களிடம், இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம், இரவு நேரம் என்பதால் உங்களுக்குப் பாதுகாப்பு தர முடியாது என்று கூறி அவர்களை உள்ளே வர விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

ஜீப் எரிப்பு: 100 வக்கீல்கள் மீது வழக்கு

இதற்கிடையே, தீயணைப்புப் படையினரை சரமாரியாக தாக்கி, ஜீப்பை தீவைத்துக் கொளுத்தியது தொடர்பாக 100 வக்கீல்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறை அதிகாரி வேலாயுத நாயர் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், 100 வக்கீல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வாசல்கள் மூடல்:

இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாசல்களும் மூடப்பட்டுள்ளன. நீதிமன்ற ஊழியர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வாசல்களிலும் அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்றம் உள்ள பகுதியைச் சுற்றிலும் கூட அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றம் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X