For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீக்குளித்து இறந்த தமிழ்வேந்தன் உடல் அடக்கம் - இறுதி ஊர்வலத்தில் வன்முறை

By Sridhar L
Google Oneindia Tamil News

கடலூர்: ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த கடலூர் இளைஞர் தமிழ்வேந்தன் என்கிற ஜோதியின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் பெரும் வன்முறை வெடித்தது. 15 பேருந்துகள் தாக்கப்பட்டன.

முன்னதாக மஞ்சக்குப்பம் அரசு பணியாளர் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்வேந்தன் உடலுக்கு லட்சக்கணக்கானோர் வணக்கம் செலுத்தினர்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் டாக்டர் ராமதாஸ், பழ. நெடுமாறன், வைகோ, தொல். திருமாவளவன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர்செல்வம், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ.குரு, மாநிலத் துணைத் தலைவர் திருமால்வளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், ரவிக்குமார் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. கடலூர் முதுநகரில் உள்ள சுடுகாட்டில் தமிழ்வேந்தனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலத்தின் போது வழியில் திடீரென வன்முறை வெடித்தது. ஊர்வலத்தில் வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் பேனர்களை அகற்றியபோது அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் இறுதி ஊர்வலத்தில் வந்தவர்கள் சிதறி ஓடினார்கள்.

அப்போது அந்த வழியாக வந்த பஸ்களின் கண்ணாடிகளை சிலர் கல்வீசித் தாக்கி உடைத்தனர். மொத்தம் 15 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த வன்முறையில் பத்திரிக்கையாளர்கள் சிலரும் தாக்கப்பட்டனர். பின்னர் ஊர்வலம் தொடர்ந்து நடந்தது.

முன்னதாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசினர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,

இலங்கைத் தமிழர்களுக்காக இதுவரை வெளிநாட்டுத் தமிழர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். யாரும் உயிர் மாய்த்துக் கொள்ள வேண்டாம். தமிழ்வேந்தன் விட்டுச் சென்ற தீ இனி யாரையும் தொடக்கூடாது. இனி உயிருடன் இருந்து எல்லோரும் போராட வேண்டும் என்றார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசுகையில்,

தமிழ்வேந்தன், அர்ப்பணித்த உயிர் நம்மை நெகிழ வைக்கிறது. உணர்ச்சிவயப்பட்டு யாரும் இனி உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது. அமைதியான தமிழ்வேந்தன் எரிமலையாக வெடித்திருப்பது உலகத் தமிழர்களை உசுப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் இதனை நினைத்து உலகத் தமிழர்களுடன் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தத்திற்குப் போராட வேண்டும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக உயிர்நீத்த தமிழ்வேந்தன் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் உதவியாக வழங்குகின்றோம் என்றார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

தமிழகத்தில் தனித்தனியாகப் போராடியவர்கள் இப்போது ஒன்றிணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை ஏற்படுத்தி ஓரணியாகப் போராடி வருகிறோம். திருமாவளவன் 4 நாள் உண்ணாநிலை இருந்தபோது உடல் சோர்ந்ததே ஒழிய உள்ளம் சோர்வடையவில்லை.

நான்தான் அவரைக் கட்டாயப்படுத்தி உயிரை மாய்த்துக் கொள்வதில் எந்த நன்மையும் கிடையாது. நாம் ஒன்றாக இருந்து மக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தி தமிழக அரசையும், ஒன்றுமே செய்யாத இந்திய அரசையும் திசை திருப்பும் அளவிற்குப் போராட்டம் நடத்தி இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவோம் என்றேன்.

அதனை ஏற்று அவரும் உண்ணாநிலையை முடித்துக்கொண்டார். இதுவரை ஆட்சியில் இருப்பவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக ஒன்றும் செய்துவிடவில்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று இந்தியாவையும், உலகத்தையும் வலியுறுத்தி வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்தனர்.

இன்று நடைபெற்ற நிகழ்வில் படுகாயமடைந்து 64 பேர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தமிழ்வேந்தனோடு இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை விட்டுவிட வேண்டும். இலங்கைச் சிக்கலுக்குத் தீர்வுகாணும் வழிகளை சிந்தியுங்கள்.

இந்தச் சிக்கலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கடைசிவரை போராடுவோம். இலங்கையில் நடப்பது போர் அல்ல. அது ஒரு விடுதலை இயக்கம். விடுதலைப் புலிகள் எப்போதும் தோல்வியடைய மாட்டார்கள். ஈழம் வெல்லும். எனவே அனைவரும் நம்பிக்கையோடு இருப்போம். இணைந்து போராடுவோம். எல்லா முயற்சியும் செய்து போர் நிறுத்தம் செய்வோம். தமிழ்வேந்தனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என்றார்.

ஜெனீவாவில் முருகதாசனுக்கு அஞ்சலி

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. சபை அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிர் நீத்த முருகதாசனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 12ம் தேதி முருகதாசன் தீக்குளித்து உயிர் நீத்தார். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் முருகதாசனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு அருகில் உள்ள தேவாலயத்தில் முருகதாசனின் உடல் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தமிழர்கள் பெரும் திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகில் உள்ள பூங்காவில் தமிழர்கள் கலந்து கொண்ட பேரணி நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X